>> Tuesday, December 21, 2010


படகு விபத்து: இறந்தோர் அதிகம்


கடல் சீற்றத்தால் பாறையில் மோதி உடைந்து தத்தளிக்கும் அகதிகள் படகு
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுகளுக்கு அருகே பாறைகளில் மோதி அகதிகளின் படகு நொறுங்கி நீரில் மூழ்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது.
இரான், இராக் மற்றும் குர்து அகதிகளை ஏற்றிய படகு சீற்றம் கொண்ட கடலில் கடந்த புதன்கிழமையன்று விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்டவர்களில் 30 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

இரானியர்கள், இராக்கியர்கள் மற்றும் குர்து இனத்தவர்களுமாக அந்தப் படகில் 90 பேர் வரை இருந்திருக்கலாம் என்று ஆஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் கூறியுள்ளார்.

ஆஸ்ரேலியக் கரைகளுக்கு அகதிகளை கடத்தி வருபவர்களை கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான டொனி அபொட் கூறியுள்ளார்.

கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகே கடலில் நீரின் அடியில் உள்ள குகைகளில் பொலிஸ் சுழியோடிகள் தேடுதல் நடத்திவரும் நிலையில் இந்த தகவலை ஆஸ்ரேலிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Read more...


ராசாவுக்கு சி.பி.ஐ. சம்மன்


தொலைதொடர்புத்துறை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணையில் எதிர்வரும் புதன்கிழமையன்று (22 டிசம்பர்) விசாரணைக்கு வர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவுக்கு மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருக்கிறது.
தொலைபேசி நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து சிபிஐ ராசாவின் உறவினர்கள், மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படும் பலரது வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தி, வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றியதாக்க் கூறியது.

இந்நிலையில் ராசா விசாரணைக்கு வரவேண்டுமென சி.பி.ஐ.யிடமிருந்து உத்தரவு அனுப்பப்பட்டது.

சம்மனைப் பெற்றுக்கொண்ட சில மணிநேரங்களில் அவர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அது வழக்கமான பரிசோதனைதான் என்று பின்னர் தெரிவிக்கப்பட்ட்து.

இதனிடையே ராசா முன்ஜாமீன் மனு கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் அச்செய்தியை மறுத்துள்ளார்.


நான் சிபிஐயைக் கண்டு பயப்படவில்லை. நான் ஒரு வக்கீல். ஒரு வக்கீல் என்ற முறையில், சட்டத்தை நான் மதிப்பேன். சட்டத்திலிருந்து தப்ப முயல மாட்டேன்.


ஆ.ராசா

தான் இதுவரை குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை. எனவே முன்ஜாமீன் கோருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி பதில்

சி.பி.ஐ. சம்மன் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்டபோது, "அவ்வாறு சம்மன் அனுப்ப்ப்படுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை, சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில் கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும். அதற்கு ராசா பதில் சொல்லுவார்" என்றார்.

சி.பி.ஐ. சோதனையிலும் கவலைப்பட ஏதுமில்லை என்றார் முதலவர்.


அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம். எனவே சி.பி.ஐ. சோதனைகளை தி.மு.க.வுக்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதவில்லை.


முதல்வர் கருணாநிதி

மேலும் ராசாவின் மீதான் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என்று முதல்வர் மீண்டும் வலியுறுத்தினார் .

தி.மு. கழகத்திற்கும் காங்கிரசுக்கும் இடையிலான உறவு எப்படி உள்ளது என்று கேட்டபோது, "அதை உங்களால் வெட்ட முடியாது" என்று அவர் பதிலளித்தார்.

Read more...


"என்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை"

இந்தியாவில் இரண்டாவது தலைமுறை செல்லிட தொலைபேசி சேவைக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தன்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்



நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழுவினர் செய்யும் விசாரணைக்கு தான் உடன்படத் தயார் என்று காங்கிரஸ் கட்சிக் மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தொலைதொடர்புத்துறை கண்காணிப்பு அமைப்பான டிராய்யின் முன்னாள் தலைவர் பிரதீப் இந்தியாவின் மத்தியப் புலனாய்வுத் துறையினர் திங்களன்று விசாரித்துள்ளனர்.

2006ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக நடத்தப்படுகின்ற காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 15 ஆயிரம் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், இந்த ஊழலை தான் கண்டும் காணாமல் இருந்துவிட்டேன் என்று கூறப்படுவதை மறுத்தார்.


பிரதமர் என்பவர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அதனால்தான் இந்த விசாரணைக்கு நான் உடன்படுகிறேன்.


பிரதமர் மன்மோகன் சிங்

நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவினர் முன்னர் தோன்றி விசாரணைக்கு உட்பட தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று அக்குழுவினருக்கு தான் எழுத்து மூலமாகத் தெரியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு

இந்த விவகாரம் தொடர்பில் மத்திய அரடின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வழங்கிய அறிக்கையை பல்வேறு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் கணக்குக் குழுவினர் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் அப்போதுதான் இவ்விவகாரத்தை முழுமையாக விசாரிக்க முடியும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

சாதாரணமாக அதிகம் பேசாதவராக அறியப்படுகின்ற பிரதமர் மன்மோகன் சிங், தற்போது வழமைக்கு மாறாக ஆக்ரோஷமாக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் என தில்லியுள்ள பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் கூறுகிறார்.

ஞாயிறன்று கட்சித் தலைவி சோனியா காந்தியால் அறிவிக்கப்பட்ட ஊழலை எதிர்த்து போராடுவதற்கான நேற்று ஐந்து அம்சத் திட்டத்தினை தான் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சோனியா திட்டம்

அரசு நிர்வாகிகள், அரசியல்வாதிகள், ஆகியோருக்கு எதிரான ஊழல் விசாரணைகளை துரிதமாக நடத்தி முடிப்பது, தேர்தலுக்கு ஒதுக்கப்படுகின்ற அரசு நிதியைக் கண்காணிப்பது, அரசாங்க செயல்பாடுகளில் கூடுதலான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவது, அரசு நிலங்களை தனியாருக்கு ஒதுக்குவதில் அரசியல்வாதிகளுக்குள்ள அதிகாரத்தைக் குறைப்பது போன்ற அம்சங்களை உள்ளடக்கிய திட்டம் ஒன்றை சோனியா அறிவித்திருந்தார்.


மனசாட்சிக்கும் நேர்மைக்கும் விரோதமாக அதிகாரத்தில் உள்ளவர்கள் நடந்துகொள்வதென்பது சமுதாயத்தில் ஒரு தொற்று நோயாகப் பரவி வருகிறது


சோனியா காந்தி

இரண்டாவது தலைமுறை செல்லிட தொலைபேசி சேவைக்கான அலைக்கற்றைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியபோது ஏலம் நடத்தாமல் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற முறையில் மத்திய தொலைதொடர்பு துறை ஒதுக்கீடு செய்ததால் இந்திய அரசாங்கத்துக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதென்று தேசிய கணக்கு தணிக்கை அதிகாரி கூறியிருந்தார்.

Read more...

>> Monday, December 20, 2010


யானை- மனிதர் மோதலை தடுக்க நடவடிக்கை


யானைகள்-மனிதர்கள் மோதலைக் கட்டுப்படு்த்த நடவடிக்கை
இலங்கையில் யானைகள் பொது மக்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இதற்கு தீர்வு காணும் முகமாக ஆயிரக்கணக்கான சிவில் பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுப்படுத்தப்போவதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதலில் சுமார் 200 யானைகளும் 60 பொதுமக்களும் பலியாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் யானைகளின் எண்ணிக்கையும் 4000 ஆக குறைந்துள்ளது.

இலங்கையில் பல பாகங்களில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வருகிறது. மனிதர்கள் யானைகளின் இடங்களை ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க இந்த மோதலும் அதிகரிப்பதாக வனவிலங்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

யானைகள் மனிதர்களை தாக்குவதோடு மட்டுமல்லாமல், பயிர்களையும் நாசப்படுத்தி விடுகின்றன. பெரும்பாலான விவசாயிகள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த மாதம் இராணுவத்தினரின் உதவியுடன் யானைகள் காட்டுக்குள் துரத்தப்பட்டன. மின்சார வேலிகள் போன்றவை வடக்கு இலங்கையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டன.

தற்போது இந்த நடவடிக்கை விஸ்திகரிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த பணியில் சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுவார்கள் எனவும் வனவிலங்குகள் துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன நாடாளுமன்றத்தில் கூறினார்.

மூவாயிரம் சிவில் பாதுகாப்பு படையினர் வனவிலங்கு துறையில் பயிற்சி பெறுவார்கள். இவர்கள் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையில் மோதம் இடம்பெறும் இடங்களில் பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள். நெல் வயல்களை பாதுகாக்கவும், யானைகளை பாதுகாக்கவும், மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்படுவதை தடுக்கவும் இவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர்கள் விரைவில் பணியை ஆரம்பிப்பார்கள். இந்த சிவில் பாதுகாப்பு படையினரால் யானைகள் மேலும் அதிகளவில் கொல்லப்படலாம் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அச்சம் தெரிவித்தார்.

ஆனால் அவ்வாறு நடைபெறாது, ஏனென்றால் சிவில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி போன்றவை கொடுக்கபட மாட்டாது என்றும், யானைகளை பயமுறுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

சமீபத்தில் தான் இறுதிப்போர் இடம்பெற்ற இடத்தை வனவிலங்கு காப்பகமாக மாற்ற போவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் யானைகள் ஒர் இடத்தை விட்டு வேறு இடத்துக்கு அவ்வளவு சீக்கிரமாக செல்லாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...


50வது சதம் அடித்தார் சச்சின்


சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐம்பது சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

தனது 175 ஆவது போட்டியிலேயே டெண்டூல்கர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையும் ஏற்படுத்தி விட்டார்.

சச்சின் டெண்டூல்கர் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். கராச்சியின் தேசிய மைதானத்தில் இடம்பெற்ற அப்போட்டியில் அவர் 15 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தனது முதல் சதத்தை டெண்டூல்கர் அடித்தார். அப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் 119 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகப்படியான சதங்களை அடித்தவர்களின் வரிசையில் டெண்டூல்கருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ரிக்கி பாண்டிங் இருக்கிறார்.

அவர் இதுவரை 39 சதங்களை அடித்துள்ளார்.

Read more...


ததே.கூட்டமைப்பு எம்.பிக்கள்-மூதுர் மக்கள் சந்திப்பு


சம்பூரில் இடம்பெயர்ந்தவர்கள்
திருகோணமலைக்குச் சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு இடம்பெயர்ந்து பல வருடங்களாக சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படாதிருக்கின்ற மக்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
மூதூர் தெற்கு, மூதூர் கிழக்குப் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களையும், கிளிவெட்டி,பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கட்டைப்பறிச்சான் உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து சுமார் ஐந்துவருடகாலமாக சொந்த குடிமனைகளில் குடியமர்த்தப்படாதுள்ள மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்.

மக்கள் தமது சொந்த மண்ணில் குடியேற விரும்புவதையும், தமது வாக்குப்பதிவுகள் சொந்த முகவரிகளிலேயே பதியப்பட வேண்டுமெனவும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டியதாகவும் மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரி சங்கத் தலைவர் கு. நாகேஸ்வரன் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தமது பிரச்சனைகளை வெளிக்கொணர முடிகின்ற போதிலும் தமக்கு உறுதியான தீர்வு கிட்டுமென முழுமையாக திருப்தியடைய முடியாதுள்ளதாகவும் நாகேஸ்வரன் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின்நிலையத்துக்குத் தேவையான நிலப்பகுதித் தவிர ஏனைய பகுதிகள் மக்கள் மீளக்குடியரப் போதுமானவை என்பதால், அந்தப் பிரதேசத்து மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளிலேயே குடியமர்த்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

எந்தக் காரணத்துக்காகவும் மக்கள் அவர்களின் சொந்தக் குடிமனைகளை விட்டு வெளியேற்றப்படக் கூடாது எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.

Read more...

>> Saturday, December 18, 2010




கருணா டக்ளஸ் மீது குற்றச்சாட்டு


விக்கிலீக்ஸ்
விக்கிலீக்ஸ் புதிதாக வெளியிட்டிருக்கும் அமெரிக்க அரசின் மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய ராஜாங்க தகவல் பரிமாற்றங்கள், இலங்கை அரசு மற்றும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு இருதரப்பாரையும், கடுமையாக விமர்சிப்பவையாக இருக்கின்றன.
லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களில், இலங்கையில் செயற்படும் துணைப்படையினரின் கொலை, சிறார் கடத்தல் மற்றும் தொழில்ரீதியான விபச்சாரம் ஆகிய செயல்களில் இலங்கை அரசும் துணைபோயிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் கட்டாயமாக படைகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன.


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அதேசமயம் இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள ராஜாங்க தகவல்களில், இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமை செயற்பாடுகளை மேம்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த தகவல்கள், இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் முறிந்த பிறகு, அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் நிலைமைகள் குறித்து பெரிதும் கவலைக்குரிய சூழலை குறிப்புணர்த்துகின்றன.

தூதரகத்தின் நம்பிக்கைக்குரிய தொடர்புகளை மேற்கோள் காட்டி, தூதரக அதிகாரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்கும் தகவல்களின்படி, விடுதலைப்புலிகள் அமைப்பு, குடும்பத்திற்கு ஒருவரை தமது படையணியில் கட்டாயப்படுத்தி சேர்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வேலைக்கு சென்ற தங்களின் பிள்ளைகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து, ஆயுதம் ஏந்த வைக்க மறுக்கும் குடும்பத்தவரை விடுதலைப்புலிகள் மிரட்டியதாகவும் இந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன.

அதேசமயம், அரசுக்கு ஆதரவான தமிழ் ஆயுதக்குழுக்களின் சட்டவிரோத செயல்களுக்கு அரசு ஆதரவளித்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன.


இலங்கை ஜனாதிபதியுடன் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
இத்தகைய ஆயுதக் குழுக்களை நடத்தியவர்களில் இரண்டுபேர் தற்போது அரசில் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

இவர்களின் குழுக்களின் ஒன்று முகாம்களில் வேலை செய்வதற்காக சிறுவர்களை கடத்தியதாகவும், சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக கடத்தியதாகவும், தூதரகத்திற்கு தகவல் தருவோர் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.

ஆனால் இதில் குற்றம்சாட்டப்படும் தமிழ் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய இருவருமே இந்த குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்தனர். தாங்கள் பணம் பறிப்பதிலோ ஆட்கடத்துவதிலோ ஈடுபடவில்லை என்று இருவருமே பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் மறுத்தனர்.

பணம் மற்றும் உணவை தட்டிப்பறித்த குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள் மற்றும் அரச ஆதரவு தமிழ் ஆயுத குழுக்கள் இரண்டின் மீதுமே இருப்பதாக விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், இந்த ஆண்டு ஜனவரியில் அனுப்பப்பட்ட அமெரிக்க தூதரக தகவலில், இடம்பெயர்ந்த தமிழர்களை நடத்தும் தனது நடவடிக்கைகளை இலங்கை அரசு பெருமளவில் மேம்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருப்பதாகவும் அது கூறுகிறது.

விக்கிலீக்ஸில் இதற்கு முன்பு இலங்கை குறித்து வெளியான தகவல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.

விக்கிலீக்ஸ் தகவல்கள் தொடர்பில் இந்த மாத முற்பகுதியில் கருத்து வெளியிட்ட இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதரகம், இந்தத் தகவல் பரிமாற்றங்கள் தினசரி நிகழ்வுகள் தொடர்பான திறனாய்வு என்றும், இவையெல்லாம் மனம் திறந்த கணிப்பீடுகளேயன்றி, அமெரிக்க அரசின் கொள்கைகளை குறிப்புணர்த்துவதாக கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது.

Read more...

>> Tuesday, December 14, 2010


மருத்துவக் கல்வி உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு


இந்திய உச்சநீதிமன்றம்
இந்தியாவில் மருத்துவ பட்டப்படிப்புக்கான அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்க இந்திய உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இது குறித்த அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், இந்த விடயத்தில் தற்போதைய நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. அதுவும் தவிர தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நடைமுறையை கடைபிடிக்கின்றன.

சில மாநிலங்களும், தனியார் கல்லூரிகளும் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்கின்றன. அதேசமயம் தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் +2 தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இதன் பின்னணியில், இந்திய மத்திய அரசு, இந்தியா முழுமைக்குமான பொது நுழைவுத்தேர்வு நடத்தி மருத்துவ படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தது. இதை தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் கடுமையாக எதிர்த்தன.

மத்திய அரசின் இந்த முடிவு, மாநில அரசின் உரிமைகளை அபகரிப்பதாகவும், இந்தியா முழுமைக்குமான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றும், கிராமப்புற மாணவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட பல காரணங்களின் அடிப்படையில் பொதுநுழைவுத்தேர்வு தேவையில்லை என்று இவர்கள் வாதிட்டார்கள்.

இந்த பின்னணியில், இது தொடர்பான வழக்கு விசாரணை இந்திய உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, இந்திய மத்திய அரசு இது குறித்த அரசாணை எதையும் பிறப்பிக்காத நிலையில், இந்த விடயத்தில் தற்போதைக்கு உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பில் இந்திய மத்திய அரசு உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்றும், அதை எதிர்ப்பவர்கள் அதற்கான காரணங்களுடன் நீதிமன்றத்தை அணுகினால், அந்த நிலையில் இது குறித்து நீதிமன்றங்கள் விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பொது நுழைவுத்தேர்வு குறித்து அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் கேட்பதற்காக, இந்திய மத்திய அரசு எதிர்வரும் ஜனவரி மாதம் கருத்தரியும் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

Read more...


ஆணைக்குழுவின் முன்னர் கருணா சாட்சியம்


பிராபகரனுடன் கருணா( பழைய படம்)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவையும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும் படுகொலை செய்தமை விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்த மிகப்பெரிய தவறு என்று இலங்கை அமைச்சரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.
பிராபகரனும் பொட்டும் தான் ராஜிவ் காந்தியை கொலை செய்ய வேண்டும் என்கிற முடிவை எடுத்ததாக தான் கருதுவதாகவும் முரளிதரன் ஆணைக்குழுவின் முன்னர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் ரகசியமான ஒரு அமைப்பு என்றும், அதில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது எனவும் தனது சாட்சியத்தில் அவர் கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின், படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக திங்கட்கிழமை சாட்சியமளித்த அமைச்சர் முரளிதரன், இந்திய இராணுவம் பலரைக் கொன்றதற்காகவும், பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதற்காகவுமே விடுதலைப்புலிகள் ராஜிவ் காந்தியை கொல்வது என்று முடிவெடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கொண்டே அவர்கள் ராஜிவ் காந்தியை கொன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

காத்தான்குடியில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் 600 பொலிஸார் மட்டக்களப்பில் கொல்லப்பட்டமை ஆகியவை தொடர்பில் தனக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தனது சகாக்கள் 600 க்கும் அதிகமான பொலிஸாரைக் கொன்றுள்ளார்கள் என்று அவர் ஆணைக்குழுவின் முன்னர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் கொலைகள் நடைபெற்ற சமயத்தில் தான் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Read more...

>> Monday, December 13, 2010


பண்புக்கு கிடைத்த பரிசு


லாட்டரி சீட்டு
மரியாதையுடனும் நாகரிகமாகவும் நடந்து கொண்ட ஒரு எளிமையான செயல் பிலிப்பைன்சில் ஒருவருக்கு பெரும் பலனை அளித்திருக்கிறது.
அந்தநபர் தேசிய லாட்டரியில் 17 மில்லியன் டாலர்கள் இந்த செய்கையால் வென்றுள்ளார்.

லாட்டரி சீட்டை வாங்க வரிசையில் நின்ற அவரை, நாகரிகமில்லாமல் தள்ளிவிட்டு முந்திக்கொண்டு பரிசுச்சீட்டை வாங்கினார் ஒரு பெண்மணி. ஆனால் அவரோ, அந்தப் பெண்ணை மிகவும் வினயமாக முன்னால் செல்ல அனுமதித்தார்.

அந்தப் பெண் வாங்கிய சீட்டுக்கு ஒரு பரிசும் விழவில்லை. ஆனால்
இவர் வாங்கிய சீட்டுக்கு பெரும் பரிசுத் தொகை கிடைத்தது.

பரிசை வென்ற இந்த ஆண் யார் என்ற விவரம், அங்கு ஆள் கடத்தல்கள் நடக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால், ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.

அவர் அமெரிக்காவில் வாழும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். அவர் பிலிப்பைன்சில் தனது குடும்பத்தினரை சந்திக்க விடுமுறையில் வந்திருந்தபோது இது நடந்துள்ளது.

Read more...


தேசிய கீதத்தின் மொழி?


மகிந்த ராஜபக்ஸ
இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வி்ல்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தேசியக் கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த போது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறினார்.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் கனடா போன்ற சில நாடுகளில், இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றமை ஜனாதிபதிக்கு எடுத்துக்காட்டப்பட்டதாகவும் டக்ளஸ் தெரிவித்தார்.

அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் வாசுதேவ நாணாயக்காரவும், தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்கும் படி சட்டம் கொண்டுவருவது சாத்தியப்படாது என்று கருத்துக் கூறியதாகவும் சில முஸ்லிம் அமைச்சர்களும் இந்தக்கருத்தையே கொண்டிருந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் கூறினார்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் கவனத்தில் எடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஒரு மொழியில் தேசிய கீதம் இசைக்கும் திட்டத்தை நிறைவேற்றாது ஒத்திவைத்ததாகவும், சில ஊடகங்களில் வெளியான தகவலைப் போல, சிங்கள மொழியில் மட்டும் என்ற திட்டம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தமிழோசையிடம் கூறினா

Read more...


ஐதேக யாப்பில் மாற்றம்


ஐதேக சின்னம்
இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்நிலை மாநாடு ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. ஒரு வழக்கின் மூலம் தடுக்கப்பட்டிருந்த அந்த மாநாடு, அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வெள்ளியன்று வெளியானதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் கட்சியின் யாப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர். யோகராஜன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதுவரை காலமும் இருந்த நிலைமைக்கு மாறாக கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய முக்கிய பதவிகளுக்கானவர்கள் வருடா வருடம் நடக்கும் தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று யாப்பில் திருத்தம் செய்யப்பட்டதாக யோகராஜன் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் கட்சியின் நிறைவேற்று சபையின் அங்கத்தவர்களும், நாடாளுமன்றக் குழு அங்கத்தவர்களும் கலந்து கொள்வார்கள்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

>> Friday, December 10, 2010


தடையை எதிர்த்து வைகோ வழக்கு


மதிமுக பொதுச்செயலர் வைகோ
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீடிக்கப்பட்டிருப்பது செல்லும் என்று இந்த தடைகுறித்து விசாரித்த தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்த இந்திய அரசு அதற்கு இந்தியாவில் தடைவிதித்தது.

இந்த தடை இரண்டு ஆண்டு காலத்திற்கு ஒருமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில்,
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு கடந்த மே மாதம் ஆணை பிறப்பித்தது.

இந்த தடை நீட்டிப்பு சரியா என்று விசாரித்த இதற்கான தீர்ப்பாயம் விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பை உறுதி செய்து சமீபத்தில் உத்தரவிட்டது.

வைகோ வழக்கு

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்பும், அதை உறுதி செய்து தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பும் தவறு என்று வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த வழக்கு குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த வைகோ அவர்கள், இந்திய நடுவணரசு வெளியிட்ட அரசாணையில் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ்நாட்டையும் சேர்த்து தனி நாடாக்க வேண்டி போராடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி உள்ளதாகவும், விடுதலைப்புலிகள் அப்படி ஒருபோதும் முயலவில்லை என்றும், எனவே, இப்படியான தவறான தகவல்களின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிக்கப்படுவது தவறு என்றும் தனது மனுவில் கூறியிருப்பதாக தெரிவித்தார்.

Read more...


இலங்கை போர்குற்றம்- ராணுவ தொடர்பா?


சித்திரவதைக்கான சாட்சியங்கள் (ஆவணப்படம்)
இலங்கையில் நடைபெற்ற போரின் போது இலங்கைப் படையினராலும் - விடுதலைப் புலிகளாலும் செய்யப்பட்டிருக்கக் கூடிய போர் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை முழு விசாரணை நடத்த வேண்டும் என்று இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சியும் புலம் பெயர் தமிழர்களால் நடத்தப்படும் இணையதளங்களிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வீடியோவை அடுத்து இந்த கோரிக்கையை அம்னெஸ்டியும் - ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பும் விடுத்துள்ளன.

ஆனால் சுயாதீன விசாரணை வேண்டும் என்று வரும் கோரிக்கைகளை இலங்கை இராணுவம் நிராகரித்துள்ளது.

நிர்வாணப்படுத்தப்பட்டு கைகள் பின்னால் கட்டப்பட்ட கைதிகளை சிப்பாய்கள் தலையிலும் காலிலும் சுட்டுக் கொல்லும் காட்சிகளை இந்த வீடியோ பதிவு காட்டுகிறது. அதில் தரையில் இரண்டு பெண்களின் உடல்கள் இருக்கின்றன. இதில் ஒருவரின் அடையாளத்தை தாம் உறுதி செய்துள்ளதாக அம்னெஸ்டியும், ஹூயூமன் ரைட்ஸ் வாட்சும் தெரிவிக்கின்றன. அவர் விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி அறிவிப்பாளராக இருந்த இசைப்பிரியா என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இறுதிப் போரில் இசைப்பிரியா கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கடந்த ஆண்டு கூறியிருந்தது. ஆனால் இசைப்பிரியா உள்ளிட்ட கைதிகள் நிராயுத பாணிகளாகவும், போர் முனையில் இல்லாத நிலையிலும் கொல்லப்பட்டதாகவே தெரிகிறது என இந்த மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சாட்டுகின்றன.

ஆனால், இந்த வீடியோவுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மேதவல நிராகரிக்கிறார்.

இவை தொழில்நுட்ப ரீதியாக திருத்தி அமைக்கப்பட்ட படங்கள் என்றும் வேறு யாரோ செய்த போர் குற்றங்களை இலங்கை இராணுவம் செய்தது போல காட்டுவதாகவும், இலங்கையில் நற்பெயரை களங்கப்படுத்தவே இந்த முயற்சி நடப்பதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதேசமயம், தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆதாரங்கள் இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்களுக்கும் இலங்கை இராணுவத்தின் 53 ஆவது படை பிரிவினருக்கும் இடையேயான தொடர்பை நிரூபிப்பதாக ஹூயூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியுள்ளது.

போர் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட சிப்பாய்களை மட்டுமல்லாது அவர்களின் தளபதிகளையும் தண்டிக்க போர் குற்றங்கள் தொடர்பான ஐ நா உடன்பாட்டின் 86 ஆவது பிரிவு வழிவகை செய்கிறது. உயர் தளபதிகள் தமக்கு கீழேயுள்ளோர் செய்யும் அத்துமீறல்களை தடுக்கத் தவறினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது.

சமீபத்தில் இலங்கை ஜனாதிபதியோடு லண்டன் வந்திருந்த இராணுவ மேஜர் ஜெனரல் சாகி கலகேவுக்கு எதிராக பிடியாணை வாங்குவதற்கு, ஐக்கிய ராஜ்ஜியத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களில் ஒரு பிரிவினர் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

>> Saturday, December 4, 2010


பிரிட்டனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டம்
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரிட்டனிலிருந்து கொழும்பை சென்றடைவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அங்கு இரண்டு ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட கண்டனப் பேரணி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஆளுங்கட்சி அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையில் நடந்தது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை எனவும், பிரித்தானியா தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருப்பதன் காரணத்தினாலேயே ஜனாதிபதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.


புலிப் பயங்கரவாதிகள் விமான நிலையத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் போது பிரித்தானியா கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. பிரித்தானி்ய அதிகாரிகளின் ஆதரவு இருந்தபடியால்தான் அவர்கள் புலிக்கொடிகளை அங்கு கொண்டு போராட்டம் நடத்தினார்கள் பொய்யான போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி எமது தேசத்தின் முன்னேற்றப் பாதையைத் தடுக்கத்தான் பிரி்த்தானிய காலனித்துவவாதிகள் முயற்சிக்கிறார்கள்.


விமல் வீரவன்ச

இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே மீண்டும் புலிகளை தூண்டிவிடும் நடவடிக்கையில் பிரித்தானியா ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் வீரவன்ச கோசமிட்டார்.

இதேவேளை, தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளரும் மேல்மாகாண ஆளுநருமான அலவி மௌலானா கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஏற்பாடு செய்திருந்த கண்டனப் பேரணியிலும் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைப் பாதுகாப்பதற்காக இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கத் தயாராக இருப்பதாக அலவி மௌலானா இங்கு தெரிவித்தார்.


ஜனாதிபதிக்கு எதிராக ஏதாவது நடந்திருந்தால், இலங்கை மட்டுமல்ல முழு ஆசியாவும் பொங்கியெழும்.


அலவி மௌலானா

இராக் போன்ற நாடுகளில் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு இலங்கை விடயத்தில் மட்டும் பிரித்தானியா இரட்டை வேடம்போடுவதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையே, பிரிட்டனிலிருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைச்சர்களும் அவரது ஆதரவாளர்களும் பெரும் உற்சாக வரவேற்பளித்து அழைத்துச் சென்றனர்.

Read more...

பத்தாயிரம் பேருக்கு பணி நிரந்தரம்

தமிழ்நாட்டில் உள்ள என்எல்சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் 10 ஆயிரம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு என்எல்சி நிர்வாகத்துக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் ஆனந்த செல்வம் செவ்வி

ஏற்கெனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்தத் தொழிலாளர்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்து நிர்வாகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

அதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் நிர்வாகத் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதுதொடர்பாக வெள்ளிக்கிழமை டி.கே. ஜெயின் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பில், தொழிலாளர்கள் பணியில் சேர்ந்த தேதியில் இருந்து நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், 1990-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பித்து, அதில் தொழிலாளர்களை உறுப்பினராக்கி, அதன் அடிப்படையில் தொழிலாளர்களின் பணிமூப்பு குறித்து முடிவெடுப்பதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அந்தக் கருத்தை நிராகரித்துவிட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் இந்த வழக்கில் தொழிலாளர்கள் தரப்பில் ஆஜரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்த செல்வம்.

Read more...

>> Friday, December 3, 2010


"போர்குற்றங்களுக்கு மஹிந்த பொறுப்பு" விக்கிலீக்ஸ்


இலங்கை போர் காட்சிகள்
இலங்கைப் போரின் இறுதியில் நடைபெற்ற படுகொலைகளுக்கு அதிபர் ராஜபக்சேதான் பெருமளவில் பொறுப்பு என்று அமெரிக்க ராஜதந்திரிகள் கருதியதாக தற்போது விக்கி லீக்ஸ் இணைய தளத்தில் கசியவிடப்பட்டுள்ள ஆவணங்கள் காட்டுகின்றன.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் - அமெரிக்க அரசுத் துறைக்கு அளித்த ரகசிய தகவல்களை தற்போது விக்கி லீக் வெளியிட்டு வருகிறது.

இதில் இலங்கை குறித்த ஆவணங்கள் இன்று வெளியாகியுள்ளன. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இரு தரப்பு உறவுகளில் இலங்கை இராணுவத்தாலும், அதிகாரிகளாலும் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு பொறுப்பேற்றல் குறித்த விடயம் தொடர்ந்து நெருடலான விடயமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசுத் துறை காங்கிரஸ் அவைக்கு அளித்த அறிக்கையும் - மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக பேராசிரியர்கள் அமைப்பின் அறிக்கையும் விடுதலைப் புலிகள் மீதும் மனித உரிமை மீறல் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆவணப்படுத்தியிருந்தும் விடுதலைப் புலி இயக்கத் தலைவர்கள் பலர் போரின் இறுதியில் கொல்லப்பட்டு விட்டதால் இதற்கான பொறுப்பை ஏற்க வெகு சிலரே உள்ளனர் என்கிறது அமெரிக்க ஆவணம்.

ஒரு நாட்டின் அரசாங்கம் தனது இராணுவத்தினர் மீதும், மூத்த அதிகாரிகள் மீதும் போர் குற்றம் இழைத்து தொடர்பான விசாரணையை நடத்தியதாக சரித்திரத்தில் இது வரை எவ்வித சம்பவமும் காணப்படவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இலங்கையில் போர் குற்றங்களுக்கான பொறுப்பு நாட்டின் மூத்த சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளைச் சார்ந்ததாக இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் தனது தந்தியில் தெரிவித்ததாக விக்கி லீக் ஆவணம் கூறுகிறது.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் பேட்ரிகா புடேனிஸ் இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி அனுப்பிய தந்தியில், போர் குற்றஹ்களுக்கு, அதிபர் மகிந்த ராஜபக்சவும்- போரின் போது இராணுவத்தின் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் காரணம் என்று கூறியுள்ளார்.

அதே நேரம் போர் குற்ற விசாரணைகள் பற்றி புலம் பெயர் தமிழர்கள் காட்டும் அளவுக்கு இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் இந்தப் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பும் தமிழ் தலைவர்கள் அதனால் அதை தொடர்ந்து இப் பிரச்சனையை வைத்திருக்க தமிழ் தலைவர்கள் விரும்புவார்கள் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்கத் தூதர் புடேன்ஸ், கொழும்பிலும், யாழ்பாணத்திலும் பிற இடங்களிலும் தாம் பேசிய தமிழ் தலைவர்கள் போர் குற்ற விசராணை பற்றி பேச இது சரியான தருணம் அல்ல என்று தெரிவித்ததாக தெரிவித்துள்ளார். இது பற்றி அதிகம் அழுத்தம் கொடுத்தால் அதனால் தாம் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தை அவர்கள் வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த மாதம் சுயாதீன போர் விசாரணைகளுக்கு தான் ஆதரவு அளிப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியிருந்தார். ஆனால் இது போன்ற பகிரங்க வெளிநாட்டு அழுத்தங்கள் எதிர்மாறான பலனைத் தரும் என்று அமெரிக்க தூதர் முன்பு கருத்து வெளியிட்டிருந்தார்.

இலங்கை அரசுக்கு போரில் வெற்றியை ஈட்டித் தந்த போர் வீரர்களுக்கு எதிரான ஒரு சர்வதேச சதியே போர் குற்ற விசாரணை கோரிக்கை என்று அதிபர் ராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் பிரசாரம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் என அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

>> Tuesday, November 30, 2010

விக்கிலீக்ஸில் அமெரிக்க ராஜாங்க ரகசியங்கள்


விக்கிலீக்ஸ்
விக்கிலீக்ஸ் இணையத்தளம் அமெரிக்க ராஜாங்க அலுவலர்கள் அனுப்பிய இரண்டரை லட்சம் ரகசிய செய்திகளை சேகரித்து அவற்றில் 220 ஐ வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள இரண்டரை லட்சம் ரகசிய செய்திகளும், ‘கார்டியன்’, ‘நியூயார்க் டைம்ஸ்’உள்ளிட்ட ஐந்து ஊடக குழுமங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள ரகசிய ஆவணங்களில் உள்ள முக்கிய சாரம்சங்களை பார்ப்போம்.

இரான் மீது தாக்குதல்

பல அரபு நாட்டு தலைவர்களும், அவர்களது பிரநிதிகளும் இரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவை வற்புறுத்தியுள்ளனர். இரானின் சந்தேகத்துக்கு உரிய அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை நிறுத்தவே இந்த தாக்குதல் கோரிக்கை.

ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு, வாஷிங்டனில் இருக்கும் சவுதி அரேபிய தூதர் அடெல் அல் ஜுபைர், சவுதி மன்னர் அப்துல்லா, அடிக்கடி அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறுவதாக தெரிவித்துள்ளார்.


சவுதி மன்னர் அப்துல்லா

அமெரிக்கா ‘பாம்பின் தலையை வெட்ட வேண்டும்’ என்று மன்னர் விரும்புவதாக அல் ஜுபைர் கூறுகிறார். அதே சமயம் வெளியுறவுத்துறை அமைச்சரோ, தெஹ்ரான் மீது தீவிரமான தடைகளை விதிக்க வேண்டும் என்றே அவர் கூறியுள்ளார்.

பஹ்ரைனின் மன்னர் ஹமத் பின் இசா அல் காலிபாவுக்கும் அமெரிக்க இராணுவ ஜெனரல் டேவிட் பெட்ரயஸுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில், ‘எப்படியாவது’ இரானின் அணு திட்டத்தை நிறுத்துமாறு மன்னர் கூறியுள்ளார்.

ஐ.நாவில் வேவு பார்ப்பது

அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹில்லாரி கிளிண்டனின் அவர்களின் பெயரில் அனைத்து ராஜாங்க அதிகாரிகளுக்கும் அனுப்பபட்டுள்ள ரகசிய செய்தியில், ஐ.நாவில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகளின் உயிரியில் தகவல்களான, மரபணு, கைரேகை போன்றவற்றை சேகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

துணை செயலர்கள், விசேஷ அமைப்புகளின் தலைவர்கள், பிரதான ஆலோசனையாளர்கள், தலைமை செயலரின் முக்கியமான செயலர்கள், அமைதி படையினரின் தலைவர்கள், இராணுவ தலைவர்களின் போன்றவர்களின் தகவல்கள் சேகரிக்க சொல்லப்பட்டுள்ளது.

அதே போன்று கிரெடிட் கார்ட், மின்னஞ்சல் முகவரிகள், ரகசிய எண்கள், பெயர்கள், கணிணீ வலைகளுக்கான ரகசிய குறியீடுகள் போன்றவற்றை சேகரிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற ஒன்பது ரகசிய உத்தரவுகள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் கொண்டலீசா ரைஸின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது.

உலக தலைவர்கள் மீதான கருத்து

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோணியை ரோமில் உள்ள அமெரிக்க ராஜாங்க அதிகாரி ஒருவர், பொறுப்பற்ற, சுயதம்பட்டம் அடிக்கும் நவீன ஐரோப்பாவுக்கு பிரயோஜனமில்லாத தலைவர் என்று வர்ணித்துள்ளார்.

அதே போன்று ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சாலா மெர்கல் அவர்களை எவ்விதமான கற்பனா திறன் இல்லாத தலைவர் என்றும், லிபிய தலைவர் கர்னல் கடாபி ஒரு உக்ரைன் பேரழகியையே பெரிதும் நம்பியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


'தடுமாறி கொண்டிருக்கும் பெருசு' - அமெரிக்கா

வடகொரிய தலைவர் கிம் ஜோங் இல் அவர்களை தடுமாறி கொண்டிருக்கும் பெருசு என்று வர்ணித்துள்ள ராஜாங்க அதிகாரிகள் இரான் அதிபர் மஹமூது அஹெமெதிநிஜாத் அவர்களை ‘ஹிட்லர்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உலக தலைவர்களை இவ்வாறு கிண்டலடிக்கும் தொனியில் ராஜாங்க அதிகாரிகள் தகவல்களை அனுப்பியிருந்தாலும், இவற்றால் எல்லாம் ராஜாங்க உறவுகள் பாதிக்காது என்று பிபிசியின் ராஜாங்க ஜோனாத்தான் மார்க்கஸ் கூறுகிறார்.

இதே நேரத்தில் நியூயார்க் டைம்ஸில் வெளியாகியுள்ள ரகசிய செய்தி ஒன்றில், பாகிஸ்தானின் அணுசக்தி உலைகளில் உள்ள ரேடியோ கதிர்வீச்சு கொண்ட பொருட்கள் குறித்து அமெரிக்கா கொண்டுள்ள கவலைகளையும், அவற்றை பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்று அது கொண்டுள்ள கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதே போன்று மிகவும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை பாகிஸ்தானில் இருந்து கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வெளியேற்ற அமெரிக்கா முயற்சித்து வருவதவும் தெரிய வந்துள்ளது.


விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அஸாங்கே

இது போன்ற தகவல்கள் ராஜாங்க உறவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் ஜோனாத்தான் மார்க்கஸ் கூறுகிறார்.

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜுலியன் அஸாங்கே, அரபு செய்தியாளர்களிடம் வீடியோ மூலம் ரகசிய செய்தி கசிவு தொடர்பாக பேசும் போது, அமெரிக்க இராணுவத்தில் இருக்கும் ஒரு சிலர் தகவல்களை வெளியிட விரும்புவதாக கூறினார்.

Read more...

>> Monday, November 29, 2010


கிருஷ்ணா தமிழ் பிரதிநிதிகளை சந்திக்க வில்லை


எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் மகிந்த


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது மூன்று நாள் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
எஸ்.எம்.கிருஷ்ணா சிறுபான்மை சமூக அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திப்பார் என எதி்ர்பார்க்கப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

வடக்கு கிழக்கு மீள்குடியேற்ற விடயங்கள், அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தம்முடன் கலந்துரையாடியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ள முக்கிய அரசியல் சூழ்நிலையில், இந்திய உயர்மட்ட அமைச்சர் ஒருவர் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்காது விஜயத்தை முடித்துக்கொண்டுள்ளமை தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் விடயம் என இலங்கை அரசியல் ஆய்வாளர் கலாநிதி கீதபொன்கலன் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுக்கின்றமையை உணர்ந்த இந்தியா, தனது கட்டுப்பாட்டை மீள உறுதிப்படுத்த முனையும் நடவடிக்கையாகவும் இந்திய அமைச்சரின் இந்த விஜயத்தை பார்க்க முடியுமெனவும் கீதபொன்கலன் கருத்து தெரிவித்தார்.

Read more...

>> Saturday, November 27, 2010


ராசாவை விசாரிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம்


இந்திய உச்சநீதிமன்றம்
இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவில், தொலை தொடர்புத்துறையில் 2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அந்தத் துறைக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் தொலை தொடர்புத்துறைச் செயலர் ஆகியோரிடம், மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்தத் தவறியது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிவிசி எனப்படும் மத்திய கண்காணிப்பு ஆணையம் மற்றும் சிஏஜி எனப்படும் இந்தியக் கணக்குத் தணிக்கை ஆணையம் ஆகிய இரு முக்கிய விசாரணை அமைப்புக்களும், இந்த முறைகேட்டில் அமைச்சர் மற்றும் செயலருக்கு உள்ள தொடர்புகள் குறித்து கடுமையாகக் கண்டித்திருந்த போதிலும், புலனாய்வுத்துறை விசாரணை நடத்தாதது ஏன் என்று நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள்.

எந்த ஒரு பொறுப்பான நபரும், அமைச்சர் மற்றும் செயலரின் தொடர்பு குறித்து விசாரணை நடத்துவார்கள். ஆனால், 8 ஆயிரம் ஆவணங்களை ஆய்வு செய்ததாகக் கூறும் புலனாய்வுத்துறை, அந்த இருவரிடமும் விசாரணை நடத்தாதது ஏன் என்று நீதிபதிக் கேட்டார்கள்.

அதற்கான தாமதம் குறித்து, மத்திய புலனாய்வுத்துறையின் சார்பில் விளக்கமளித்த மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், புலனாய்வுத்துறைக்கென தனியான விசாரணை நடைமுறை உள்ளதாகத் தெரிவித்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படையான முறை கடைடிபிக்கப்படவில்லை என்றும், அதனால் அரசுக்கு உத்தேசமாக 1.76 லட்சம் கோடி ரூபாய் இழ்பபு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் முடக்கம்

இதனிடையே, ஆ. ராசா அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பாக ஆழமான விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனல், அரசு அதற்கு சம்மதிக்க முடியாது என மறுத்து வருகிறது.

இதனால், வியாழக்கிழமை தொடர்ந்து 10-வது நாளாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.

Read more...


இந்தியா கபடியில் இம்முறையும் தங்கம்


1990 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா தொடர்ந்து தங்கம் வென்று வருகிறது
1990 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா தொடர்ந்து தங்கம் வென்று வருகிறது
சீனாவின் குவாங் ஸு நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணியினர் தங்கப் பதக்கம் வென்றார்கள்.

ஆடவர் கபடி அணியினர், 38 க்கு 20 என்ற புள்ளிகள் கணக்கில், ஈரான் அணியைத் தோற்கடித்தனர். இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட 1990-ம் ஆண்டு முதல் இந்தியா தொடர்ந்து தங்கப்பதக்கம் வென்று வருகிறது.

இந்திய மகளிர் அணியினர், 28-க்கு 14 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி தங்கம் வென்றார்கள்.

400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியிலும் இந்திய மகளிர் பிரிவினர் தங்கப்பதக்கம் வென்றார்கள். கடந்த 2006-ஆம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இதே அணி தங்கம் வென்றது. கடந்த மாதம் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளிலும் அந்த அணி தங்கம் வென்றது.

குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப் பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் விஜேந்தர் சிங், உஸ்பெகிஸ்தான் வீரர் அடோவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

இந்த வெற்றிகளின் மூலம் இந்திய அணி 14 தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 64 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

சீனா முதலிடத்திலும், தென்கொரியா, ஜப்பான் அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட டி-20 கிரிக்கெட் போட்டிகளில், வங்கதேச அணி, ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.

Read more...


அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையில்


மகிந்தவை சந்தித்தார் எஸ்.எம்.கிரிஷ்ணா
மகிந்தவை சந்தித்தார் எஸ்.எம்.கிரிஷ்ணா
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அந்நாட்டின் இரண்டு புதிய துணைத் தூதரகங்களை இலங்கையில் திறந்துவைக்கவுள்ளார்.

தென்னிலங்கை துறைமுக நகரமான ஹம்பாந்தோட்டையிலும் வடக்கே யாழ்ப்பாணத்திலும் இந்த துணைத் தூதரகங்கள் திறந்துவைக்கப்படவுள்ளன.

மூன்று நாள் விஜயமாக வியாழன்று மாலை இலங்கை சென்றடைந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்,இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்கள் பலரையும் வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார்.

வெள்ளியன்று காலை ஜீ.எல்.பீரி்ஸூடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்த இந்திய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், போர் ஓய்ந்துள்ள இலங்கையில் இதுவரை தீர்க்கப்படாதுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சந்தப்பர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற எந்தவொரு விடயங்களையும் புரிந்துணர்வுடனும் ஒழுங்கமைந்த பேச்சுவார்த்தைகளூடாகவும் தீர்த்துக்கொள்ள முடியுமென நம்புவதாகவும் கிருஷ்ணா சுட்டிக்காட்டினார்.

பிராந்திய பலப்பரீட்சை

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்ததன் பின்னர் அந்நாட்டுடனான இந்திய இராஜதந்திர உறவுகளின் ஒரு அங்கமாக தனது துணைத் தூதரகங்களை திறக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக தெற்காசியாவில் பாகிஸ்தான்,பங்களதேஷ் போன்ற நாடுகளில் சீனாவின் அனுசரணையில்அமைந்துள்ள பல துறைமுகங்களுக்குப் புறம்பாக இலங்கையில் ஹம்பாந்தோட்டை நகரில் அண்மையில் திறக்கப்பட்ட துறைமுகத்திற்கும் சீனாவே மொத்த நிதியுதவியும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சீன உதவியில் நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட துறைமுகம்
ஹம்பாந்தோட்டையில் சீன உதவியில் நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட துறைமுகம்
இதற்கிடையே தற்போது இந்தியா ஒன்று புள்ளி ஏழு பில்லியன் டொலர்கள் மதிப்பிலான நிதியுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிதியுதவிகள் அடுத்த மூன்று வருடகாலத்தில் யாழ்ப்பாணத்தில் துறைமுகமொன்றை நவீனமயப்படுத்தவும் மற்ற இடங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த பின் கருத்து தெரிவித்த எஸ்.எம்.கிருஷ்ணா, இந்தியாவைத் தவிர வேறெந்த நாடும் சரித்திர ரீதியாக இலங்கையுடன் இந்தளவு நெருக்கமான உறவைக் கொண்டிருக்க வில்லை எனத்தெரிவித்தார்.

இறுதிக்கட்டப் போரின்போது இலங்கையில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டதாக மேற்குலக நாடுகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பாகிஸ்தான் அதிபர் அசிப் அலி சர்தாரியும் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை செல்கின்றார்.

Read more...

>> Friday, November 12, 2010


ராஜா பதவி விலகமாட்டார்: திமுக


புகாரில் சிக்கியுள்ள ராசா
இந்தியாவில் தொலைத்தொடர்பில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டிருப்பதால் அந்தத் துறைக்கு பொறுப்பான திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஆ ராசா பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் அவர் பதவி விலகமாட்டார் என்று திமுக மீண்டும் அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை அன்றும் நாடாளுமன்றத்தில் அந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் தமது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பதவி விலக மாட்டார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான டி கே எஸ் இளங்கோவன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைமை கணக்காயர் அரசிடம் சமர்பித்துள்ள அறிக்கையிலும் இந்த விடயத்தில் சரியான நடைமுறைகள் பின்பற்றவில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலும், எதிர்கட்சிகள் தமது அரசியல் லாபத்துக்காக கொடுக்கும் அழுத்தங்களுக்கு தமது கட்சி பணியாது என்று இளங்கோவன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

காங்கிரசுக்கு ஆதரவளிக்க தயார்--ஜெயலலிதா

இதற்கிடையே, ராசாவை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கினால் திமுக மத்திய ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப்பெற்றுக்கொள்ளும் என்று காங்கிரம் கவலைப்படத்தேவையில்லை என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவளிக்க தாம் தயார் என்றும், காங்கிரசுக்கு 18 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுத்தர முடியும் என்றும் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தான் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள விரும்புவதாக ஜெயலலிதா சூசகமாக கோடிகாட்டி வந்தார். அதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் சிலர் கூறிவந்தனர்.

இந்தப்பின்னணியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்களுக்குள்ளாயிருக்கும் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ ராசா பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் என்று அஇஅதிமுக் உட்பட பல எதிர்க்கட்சிகள் கோரிவந்தாலும், அவரை வெளியேற்ற் காங்கிரஸ் தயங்குகிறது, காரணம் அப்படிச் செய்தால் திமுக தனது ஆதரவை விலக்கிக்கொள்ளும் என அது அஞ்சுகிறது என்றும் கருத்துக்கள் உலாவந்தன.

அது குறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, காங்கிரஸ் அவ்வாறு அஞ்சத்தேவையில்லை என்றும் திமுகவிற்கு நாடாளுமன்றத்தில் 18 உறுப்பினர்கள் இருக்கிறார்கள், அதை தன்னால் ஈடுகட்டமுடியும் என ஜெயல்லிதா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அஇஅதிமுகவிற்கு தற்போது ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மேலும் ஒன்பது உறுப்பினர்கள் மட்டுமல்ல, கூடுதலாகவே இன்னமும் ஒரு சில உறுப்பினர்களின் ஆதரவையும் தன்னால் காங்கிரசிற்கு பெற்றுத்தரமுடியும் என்று ஜெயலலிதா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

கூட்டணியில் மாற்றமில்லை--காங்கிரஸ்

அதேசமயம், ஜெயலலிதாவின் பேட்டி குறித்து கருத்து வெளியிட்ட காங்கிரசின் அகில இந்திய பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் ஏற்கெனவே திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அந்த கூட்டணியில் ஏதும் மாற்றமில்லை என்று கூறினார்.

Read more...


யோகி, புதுவை மனைவிமார் சாட்சியம்


விசாரணை ஆணையம்


யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்திய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகிய யோகரட்ணம் யோகி, புதுவை இரத்தினதுரை ஆகியோரின் மனைவிமார் தோன்றி சாட்சியமளித்துள்ளார்கள்.

கடந்த வருடம் மே மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனது கணவர் யோகரட்ணம் யோகி மற்றும் புதுவை இரத்தினதுரை, லோரன்ஸ் திலகர், பேபி சுப்பிரமணியம் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்படும் என இராணுவத்தினர் அளித்த உறுதிமொழியை ஏற்று அவர்களிடம் சரணடைந்ததாக யோகரட்ணம் யோகியின் மனைவி ஜெயவதி தமது சாட்சியத்தில் தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு சரணடைந்தவர்கள் பேரூந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதைத் தான் கண்டதாகவும், அதன்பின்னர் அவர்களைத் தேடிக்கண்டுபிடிப்பதற்கு பலவழிகளிலும் முயற்சித்த போதிலும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்றும் யோகரட்ணம் யோகியின் மனைவி தனது சாட்சியத்தில் கூறியிருக்கின்றார்.

அத்துடன் அவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்களா என்பது பற்றிய தகவல்களை அரசாங்கம் தெரிவிக்கவில்லை என்றும், எனவே அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என யோகரட்ணம் யோகியின் மனைவி ஜெயவதி ஆணைக்குழுவினரிடம் கோரியிருக்கின்றார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பமாகவிருந்த போதிலும் கொழும்பில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக அவர்கள் விமானம் மூலம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அரியாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசாரணைகள் பிற்பகல் 3.30 மணிக்கே ஆரம்பமாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரியாலையில் நடைபெற்ற விசாரணைகளின்போது காணாமல் போயுள்ள தமது கணவர்கள், பிள்ளைகள் தொடர்பான முறைப்பாடுகளே கூடுதலாக ஆணைக்குழுவின் முன்னால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அரியாலையில் நடைபெற்ற விசாரணைகளையடுத்து, நீர்வேலியில் இந்த ஆணைக்குழுவின் அமர்வு இரவு 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் நாளையும் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில் வடமாகாணத்தில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைப் போன்று மன்னாரிலும் இந்த ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இந்த வேண்டுகோளை ஆணைக்குழு ஏற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், மன்னாரில் எப்போது இந்த ஆணைக்குழு தனது அமர்வை நடத்தும் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Read more...

>> Thursday, November 11, 2010


வட இலங்கையில் மருத்துவர்கள் பற்றாக்குறை


வட இலங்கையில் மருத்துவர்கள் பற்றாக்குறை என செய்திகள்
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட மருத்துவமனைகளில் வைத்தியர்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்தப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் பணியாற்றுகின்ற வைத்தியர்களை வந்து பணியாற்றுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

போர்ச்சூழல் காரணமாகவும், போர் நடைபெற்ற காலங்களில் யாழ் குடாநாடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்து தரைவழித் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டிருந்ததனாலும், அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட போதிலும், அநேகமான வைத்தியர்கள் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை. அல்லது அத்தகைய நியமனங்களை ரத்து செய்துவிட்டு அவர்கள் வெளிமாவட்டங்களில் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

இதனால் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை யாழ் மாவட்டத்தில் பல வருடங்களாகத் தொடர்ந்து நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அவ்வாறான விண்ணப்பங்களுக்கு இடம் மாற்ற உத்தரவு சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் என சுகாதார அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டு அதற்கான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையையும். யாழ் மாவட்டத்தின் இன்றைய நிலைமைகளையும் கருத்திற்கொண்டு, தற்போது வெளிமாவட்டங்களில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட வைத்தியர்களை யாழ் மாவட்டத்திற்குத் திரும்பி வருமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

Read more...


தொண்டு நிறுவனங்களுக்கு "கிடுக்கிப்பிடி"


வடபகுதியில் பெருமளவில் உதவி தேவைப்படும் நிலை உள்ளது
இலங்கையில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தொடர்பான 1980 ஆம் ஆண்டின் சட்டத்தில் அரசு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
இதன்படி இதுவரை அரசிடம் பதிவு செய்து கொள்ளாத நிறுவனங்கள் உடனடியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படி பதிவு செய்து கொள்ளும் நிறுவனங்கள் அரசால் எழுத்துபூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அரசு கொண்டுள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துவதாகவே கருத வேண்டியுள்ளது என்று தன்னார்வ தொண்டு அமைப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன.

அப்படியான சந்தேகம் ஏன் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உருவாகியுள்ளது என்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த புதிய நடைமுறை இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்கட்டுமான நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என இலங்கையின் கிழக்கே செயற்பட்டு வரும் உள்ளூர் அரச சார்பற்ற தன்னர்வ தொண்டு நிறுவனங்களின் இணையத்தின் தலைவரான வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில், பாதுகாப்பு பிரிவினரால் அரச சார்பற்ற நிறுவனங்களின் மீது கொண்டுவரப்பட்ட நெருக்கடிகளை மீண்டும் நினைவூட்டுவதாகவே இருக்கின்றது எனவும் அவர் கூறுகிறார்.

அரசின் இந்தச் செயற்பாடு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தினரிடையே ஒரு அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது எனவும் கமலதாஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசால் மட்டுமே உதவிகளையும் முன்னேற்றங்களியும் செய்ய முடியாது

இலங்கையில் போருக்கு பின்னரான காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மீள்கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த தேவையான முன்னெடுப்புகளை செய்ய அரசால் மட்டும் முடியாது எனவும் கமலதாஸ் கூறுகிறார்.


நிதி வரும் போது வேகமான அபிவிருத்தி வரும், நிதிகள் மட்டுப்படுத்தபடும் போது அல்லது பணியாளர்கள் மட்டுப்படுத்தப்படும் போது, உதவி தேவைப்படும் பிரதேசம் வளராமல் போய்விடலாம்


வர்ணகுலசிங்கம் கமலதாஸ்

தொண்டு நிறுவனங்கள் இப்படியான பணிகளில் ஈடுபடும் போது, அந்தப் பணிகளுக்கான நிதியுதவி பல்தரப்பிலிருந்து கூடுதலாக கிடைக்கும் எனவும், அது தடைபடும் போது நிவாரண மற்றும் முன்னேற்றப் பணிகள் தடைபடும் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

நிவாரண உதவிகளை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான நிதியுதவிகளை சர்வதேசத்திடமிருந்து பெறும் வல்லமை அரசுக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

நாடாளுமன்றம் ஒதுக்கும் நிதியிலிருந்தே அரசு உதவி தேவைப்படும் மக்களுக்கு அதை செய்து வருகிறது எனவும் கூறுகிறார் கமலதாஸ்.

Read more...

>> Tuesday, November 2, 2010



'போதை மருந்தைவிட மது மோசம்'


சமூக மட்டத்தில் மதுவின் பாதகந்தான் அதிகம்
ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும் பாதிப்புத்தான் அதிகம் என்று பலராலும் மதிக்கப்படுகின்ற த லான்செட் மருத்துவ சஞ்சிகை கூறுகிறது.
போதை மருந்துகளால் தனி நபர்களுக்கு மாத்திரமல்லாமல், பரந்துபட்ட சமூகத்துக்கே ஏற்றபடக் கூடிய ஆபத்துக்களை அளவிடுவதற்கான புதிய மதிப்பீட்டு முறை ஒன்றை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

மதுபான பாவனை பாதக விளைவுகள் குறித்து இங்கு பிரிட்டிஷ் சமூகத்தில் பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இந்த அறிக்கை இந்த விவகாரத்தை மேலும் ஒரு படி முன்னே கொண்டு செல்கிறது.

கொக்கெயின் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றினால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை விட மதுபானம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.



சுகாதார ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும், பொருளாதர ரீதியாகவும் 16 வகையிலான பாதகத்தை ஏற்படுத்தும் 20 போதைப் பொருட்களை பட்டியலிட்டபோது, அதில் மது 72 புள்ளிகளையும், ஹெரோயின் 55 புள்ளிகளையும், முகரும் கொக்கெயின் 54 புள்ளிகளையும் பெற்றன.

ஒரு தனி நபரின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டியலில் வது மது நான்காவது மோசமான மூலமாக இருக்கிறது. ஆனால் அந்த அறிக்கையின் முடிவு, மதுபானம் தான் பரந்துபட்ட சமூக மட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை பிரதிபலிக்கின்றது.

இந்தத அறிக்கையை தயாரித்துள்ள முக்கியமானவர்களில் ஒருவர் பிரிட்டிஷ்
அரசாங்கத்தின் போதைப்பொருள் குறித்த முன்னாள் ஆலோசகரான பேராசிரியர் டேவிட் நட். போதைப்பொருள் குறித்த கொள்கைகள் பற்றிய வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்ததற்காக ஒரு வருடத்துக்கு முன்னதாகவே பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பிரிட்டனில் போதைப்பொருட்கள் குறித்த சட்டங்கள் காலாவதியானவை என்று அவர் கூறுகிறார். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புக்களை அரச கொள்கையாக்கத்தின் போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ஆனால், இந்தக் கருத்துடன் மாறுபடுபவர்கள் இந்த ஆய்வு ஒரு போலி விஞ்ஞானம் என்று விபரிக்கிறார்கள். அந்த போதைப் பொருட்களின் பட்டியலில் இருப்பவற்றில் மது மாத்திரமே சட்டபூர்வமான போதை மருந்து என்பதால், அது சமூகத்தில் பரந்துபட்ட அளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற முடிவில் எந்தவிதமான ஆச்சரியமும் கிடையாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

லண்டனில் உள்ள மதுபானக் கடைகளில் மது அருந்துபவர்கள் கூட இந்த ஆய்வின் முடிவு குறித்து திருப்தி அடையவில்லை.

எதிர்காலத்தில் இந்த விடயம் குறித்து மேலும் விவாதங்கள் தொடர்வதற்கு தற்போதைய விவாதம் மிகவும் முக்கியமானது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிரிட்டனை விட அரைவாசியளவுக்கே மது அருந்தப்படுகின்ற ஸ்வீடன் போன்ற நாடுகளிடம் இருந்து பிரிட்டன் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறன.

அரசாங்கம் இந்த விடயத்தில் புதுமையான அணுகுமுறையை கைக்கொண்டால் தான் அது முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Read more...


'ஒச்சாயி' -தொடரும் வரிவிலக்கு சர்ச்சை


ஒச்சாயி படத்தின் காட்சி
தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிப்பதில் பாரபட்சம் இல்லை, கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
‘ஒச்சாயி’ என்ற திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க முதலில் தமிழக அரசு மறுத்தது. அது தமிழ்ச்சொல் அல்ல என்று சம்பந்தப்பட்ட குழுவினர் நினைப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால் ஒச்சாயி என்பது பரவலாக மதுரைப் பகுதியில் பல பெண்களுக்கு இருக்கும் பெயர், ஆங்கிலம் கலந்த சொற்களைப் பெயர்களாகக் கொண்ட திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் தமிழக அரசு ஒச்சாயிக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது உள்நோக்கமுடையது என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அப்படத்திற்கும் விலக்கு அளிக்கப்பட்டது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது என்ற முடிவின் படி தான் ‘சிவாஜி’, ‘ஏகன்’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’, ‘கோவா’, ‘எந்திரன்’ போன்ற திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து இறுதி முடிவெடுப்பதே தமிழக அரசின் வணிகவரித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகிய அதிகாரிகள் கொண்ட ஒரு குழுதான் என்றும் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இப்பிரச்சினை பற்றி கருத்துக்கூறிய வளர்ந்துவரும் திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், 'இப்படியெல்லாம் செய்வதால் தமிழ் வளர்ந்து விடும் என்று நினைப்பதே தவறு, பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் தமிழ்ப் பண்பாட்டை பிரதிபலிப்பதில்லை, தமிழ் ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, அக்குழுவின் பார்வையில் எத்தகைய திரைப்படங்கள் தமிழ்ப் பண்பாட்டிற்கு இசைவாக இருப்பதாக கருதப்படுகிறதோ அவற்றிற்கு மட்டுமே அரசின் சலுகைகள் சென்றடைய வேண்டும்' என்றார்.

Read more...


இன்றளவும் தொடரும் அவலம்


மனித மலம் வெற்றுக் கையால் அள்ளப்படுகின்றது
மனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலம் இந்தியாவில் சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும், பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் இன்னமும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கூறும் தலித் சமூகத்தினர் அதை முற்றாக ஒழிக்கக்கோரி புது தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்தியா முழுவதிலிருந்தும் இந்திய தலைநகர் தில்லியில் திரண்ட ஆயிரக்கணக்கான மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள், தங்களை இந்த இழிவான பணியிலிருந்து மீட்குமாறு இந்திய நடுவணரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்தியாவில் மனித கழிவை மனிதர்கள் அள்ளும் நடைமுறை தேசிய அளவில் 1993ம் ஆண்டிலேயே சட்டரீதியாக ஒழிக்கப்பட்டாலும், இன்னும் பல மாநிலங்களில் இது தொடர்வதாக கூறுகிறார் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய தேசிய துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான, பெசவாடா வில்சன். இந்த இழிவை சுமப்பவர்கள் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சமூகத்தின் மற்ற பகுதியினர் மத்தியில் இதை ஒழிப்பதில் அதிக அக்கறை இல்லை என்கிறார் அவர்.

எனவே, இந்திய அரசால் சட்டவிரோதமாக்கப்பட்ட மனித கழிவை மனிதர்களே அகற்றும் அவலத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு அதிகபட்ச அக்கறை காட்டி குறிப்பிட்ட கால எல்லைக்குள் இதை ஒழித்து இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடைமுறைகளை செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட இந்த அவலம், இந்தியாவில் பரவலாக தொடர்வதை ஒப்புக்கொள்கிறார் இந்திய நடுவணரசின் ஓய்வு பெற்ற அமைச்சரவைச் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன். பழமையில் ஊறிப்போன இந்திய சமூகத்தில் மாற்றங்கள் மிகவும் தாமதமாகவே ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

Read more...

>> Monday, November 1, 2010



தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா?


தமிழ் எழுத்துருக்கள்
தமிழ் எழுத்துருக்கள்

கணினியில் தமிழ் எழுத்துக்களை உள்ளிடுவதற்கான யூனிகோட் ஒருங்குறி முறையில் 26 சமஸ்கிருத எழுத்துருக்களைச் சேர்க்க திராவிடர் கழகத்தலைவர் கி வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், யுனிகோட் எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகெங்கும் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறை என்றும், அதில் தமிழ் ஒருங்குறி முறைக்குள் சமஸ்கிருத எழுத்துக்களை திணிக்க "ஆரிய சக்திகள்" முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மணிவண்ணன் செவ்வி

இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் குறிப்பிட்ட இடங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையத்தளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதனால் தனியாக எந்த ஒரு புதிய தரவிறக்கமும் இன்றி சீனம் முதல் அரேபியம் வரை எந்தவொரு மொழி எழுத்தையும் யாரும் படிக்கலாம்; பயன்படுத்தலாம்.

தமிழில் எழுதுவதற்கும் அந்த ஒருங்குறி முறை இப்போது பயன்படுத்தப்படுவதால் உலகளாவிய அளவில் அனைவரும் இணையத்தின் மூலம் தமிழிலேயே தகவல்களைப் பறிமாறிக்கொள்ள முடிகிறது, யூனிகோடில் தமிழ் எழுத்துக்களுக்கு 128 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆயினும் அந்தக் குறுகிய அளவிற்குள்ளும் அனைத்துத் தமிழ் எழுத்துகளையும் ஒருவாறாக உள்ளே கொண்டு வந்துள்ளனர்.

அதை அதிகப்படுத்தினால் அனைத்துத் தமிழ் எழுத்துகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கி எளிமையான பயன்பாட்டை உருவாக்க முடியும் என தமிழ் கணினி வல்லுநர்கள் யுனிகோடு சேர்த்தியம் அமைப்பிடம் முறையிட்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த ஜூலையில் சிறீ ரமண சர்மா என்பவர் தமிழ் எழுத்துகளுக்கான இடத்தை அதிகப்படுத்தி அதில் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று யுனிகோடு சேர்த்தியம் அமைப்பிடம் கோரியிருப்பதாகவும் அப்படிச்செய்தால் தமிழின் தனித்தன்மை கெட்டுவிடுமென்றும், தமிழை சமஸ்கிருதமாக்கும் முயற்சியே இது என்றும், இத்தகைய சதிகள் வெற்றிபெற அனுமதிக்கக்கூடாது என்றும் வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கணித்தமிழ் நிபுணரின் கருத்து


கணித்தமிழ் நிபுணர் மணி மு மணிவண்ணன்
கணித்தமிழ் நிபுணர் மணி மு மணிவண்ணன்

தொழில் நுட்ப அடிப்படையிலும், மொழித்தேவையின் அடிப்படையிலும் இந்த கூடுதல் எழுத்துருக்கள் தமிழ் ஒருங்குறிக்குள் தேவையில்லை என்கிறார் கணினித்தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட உத்தமம் என்கிற உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவரான மணி மு மணிவண்ணன்.

இந்த சர்ச்சைகுறித்து பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில், தமிழின் மொழியியல் தேவையை ஏற்கெனவே இருக்கும் அடிப்படை எழுத்துருக்களே ஈடுசெய்யவல்லது என்று கூறும் மணிவண்ணன், கூடுதலாக 26 கிரந்த எழுத்துருக்களை தமிழ் ஒருங்குறிக்குள் கொண்டுவருவது தேவையற்றது என்கிறார்.

அதேசமயம், இந்த விடயத்தை யூனிகோட் நிறுவனம், உணர்வுரீதியாக அணுகாது என்றும், வெறும் தொழில்நுட்ப பிரச்சினையாக மட்டுமே இந்த விடயத்தை அது பார்க்கும் என்றும் அவர் கூறினார்.

Read more...



தென்னாப்ரிக்க தமிழர்களின் 150 ஆண்டுகள்


டர்பனில் தமிழர்களின் மாரியம்மன் கோவில்
டர்பனில் தமிழர்களின் மாரியம்மன் கோவில்
தென்னாப்பிரிக்காவுக்கு தமிழர்கள் சென்று குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைவதை மிகப்பெரிய விழாவாக கொண்டாட அந்நாட்டு தமிழர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த கொண்டாட்டங்களில் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா கலந்துகொள்ள இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், தென் ஆப்ரிக்காவில் உள்ள கரும்புத் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்வதற்கெனத் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உள்ளிட்ட பல இந்தியர்களை அங்கு கொண்டுசென்றனர்.

1860 ஆம் ஆண்டு துவங்கி 1911 வரை இப்படி கொண்டு செல்லப்பட்டவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். இன்றைய நிலையில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்ட சுமார் பதினான்கு லட்சம் இந்திய வம்சாவளியினர் தென் ஆப்ரிக்காவில் தற்போது வாழ்கின்றனர். அவர்களில் சுமார் பத்து லட்சம் பேர் தமிழர்கள் என்று சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த இந்திய வம்சாவளியினர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றதன் நூற்றி ஐம்பதாவது ஆண்டை இந்த ஆண்டு கொண்டாடுகின்றனர். இதன் ஒருபகுதியாக நவம்பர் 29 ஆம் தேதி தென்னாப்ரிக்காவில் இருக்கும் டர்பன் நகரில் மிகப்பெரும் விழா ஒன்றை அவர்கள் நடத்த உள்ளனர். அதில் தென்னாப்ரிக்க அதிபர் ஜூமா கலந்துகொள்ள இருக்கிறார்.

தென்னாபிரிக்கத் தமிழர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் மற்றும் அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் துணையுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு கருணாநிதியை அவர்கள் சந்தித்தனர்.

தென் ஆப்ரிக்காவில் நடக்க இருக்கும் 150 ஆம் ஆண்டு கொண்டாட் டங்களில் கலந்துகொள்ள தமிழக அரசின் பிரதிநிதிகளை அனுப்புமாறு கோரிய இந்த குழுவினர், தமிழக அரசிடம் சில கோரிக்கைகளை வைத்ததாக ரவிக்குமார் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

தமிழ் கற்றுத்தர கோரிக்கை


இந்தியர்களின் கட்டடம்-1900களில்
இந்தியர்களின் கட்டடம்-1900களில்
தென்னாப்ரிக்காவில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலோர் இப்போது தமிழைப் பேசவோ படிக்கவோ இயலாத நிலையில் இருந்தாலும் தமது குழந்தைகளுக்குத் தமிழைப் பயிற்றுவிக்க விரும்புவதால் அதற்கு உதவும் வகையில் தமிழக அரசு தமிழ் பாடநூல்களையும், ஆசிரியர்களையும் அளித்து உதவ வேண்டும் என்று கோரியதாக ரவிக்குமார் தெரிவித்தார்.

மேலும், தென்னாப்ரிக்காவில் தமிழர்கள் செறிந்து வாழும் டர்பன் நகரில் தமிழ் நூல்கள் அடங்கிய நூலகம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றும், தென்னாப்ரிக்கப் பல்கலைக் கழகங்கள் ஏதேனும் ஒன்றில் தமிழ் இருக்கை ஒன்றை நிறுவ வேண்டும் என்றும், தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகளை தென்னாப்ரிக்காவில் அறிமுகப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டு கலைஞர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரியதாக்வும் அவர் கூறினார்.

அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவெடுப்பதாக கருணாநிதி உறுதியளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Read more...


ரிஸானாவுக்கு கருணை கோரி பிரார்த்தனைகள்


ரிஸானாவின் குடும்பத்தினர்(ஆவணப்படம்-2007)
ரிஸானாவின் குடும்பத்தினர் (ஆவணப்படம்-2007)
சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய போது குழந்தை ஒன்றின் மரணத்திற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணுக்கு கருணை கிட்ட வேண்டுமெனக் கோரி பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன.

இலங்கையின் கிழக்கே மூதூர் சாபி நகரைச் சேர்ந்த ரிஸானா நபீக் என்ற இந்தப் பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு கிட்ட வேண்டுமென மூதூர் பொது மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை வழிபாடுகளை நடத்தியுள்ளனர்.

இதேவேளை சவுதி அரேபியாவில் ரிஸானாவின் பராமரிப்பிலிருந்த போது உயிரிழந்ததாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரிடமும் ரிஸானாவுக்கு மன்னிப்பளிக்குமாறு கோரும் மக்களின் கையொப்பங்கள் அடங்கிய மனுவினையும் இலங்கையில் உள்ள சவூதி தூதரகத்தின் மூலம் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளையும் அந்த மக்கள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குழந்தையைக் கொன்றதாக ரிஸானா மீது குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 2007ஆம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனைக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளிக்கும் பட்சத்தில் மட்டுமே ரிஸானாவின் விடுதலை சாத்தியமாகும் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், ரிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸவும், சவுதி மன்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

>> Saturday, October 30, 2010




மூன்று மாதமாகத் தவிக்கும் வெள்ள அகதிகள்


பாகிஸ்தானின் ஐந்தில் ஒரு பகுதி வெள்ளத்தில்
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு அதனால் மூழ்கடிக்கப்பட்டு, 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், சுமார் 70 லட்சம் பேர் இன்னமும் தங்க இடமில்லாமல் அவதியுறுகிறார்கள்.
வாந்திபேதியும் மற்றும் போஷாக்கின்மையும் அங்கு பரவி வருகின்றன.

குளிர்காலம் நெருங்கி வருகின்ற நிலையில் நிலைமை மேலும் மோசமான கட்டத்துக்குள் சென்று கொண்டிருப்பதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.

உயிர்களைக் காப்பாற்றுவதற்கு கொடையாளிகளிகளின் உதவி உடனடியாகத் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.



பாகிஸ்தானின் தென்பகுதி மாகாணமான சிந்து மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அண்மையில் சென்று வந்த எமது செய்தியாளர் ''தமக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை'' என்று மக்கள் குறை கூறுவதாகக் கூறினார்.

பலர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட தமது குழந்தைகளுக்கு கொடுக்க உணவின்றி தவிக்கிறார்கள்.

இன்னமும் பல இடங்களில் வெள்ள நீர் வடியவில்லை. எப்போதாவது வரும்

உதவிகள் கூட அங்கு காத்துக்கிடக்கும் மக்களுக்கு போதுமானவையாக இல்லை.

போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கூட மருத்துவமனைகளில் பார்க்க முடிகிறது.

தமது சொந்த அரசாங்கமும், சர்வதேச சமூகமும் தம்மை கைவிட்டு விட்டதாக மக்கள் புலம்புகிறார்கள்.

Read more...


தமிழோசை அலைவரிசை மாற்றம்


பிபிசி உலக சேவை
அக்டோபர் 31 ஆம் தேதி,2010 (ஞாயிற்றுக்கிழமை) முதல் தமிழோசை அலைவரிசைகளில் மாற்றம் இடம்பெறுகின்றது.

தமிழோசை நேயர்கள் மறு அறிவித்தல் வரும் வரை

41 மீட்டரில் 7600 கிலோ ஹேர்ட்ஸ்

31 மீட்டரில் 9605 கிலோ ஹேர்ட்ஸ்

25 மீட்டரில் 11965 கிலோ ஹேர்ட்ஸ்

49 மீட்டரில் 6135 கிலோ ஹேர்ட்ஸ்

ஆகிய சிற்றலை வரிசைகளிலும்

இலங்கை நேயர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாகவும் கேட்கலாம்.

Read more...



'எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும்'


கர்நாடகா-வரைபடம்
கர்நாடக மாநிலத்தில் யெதியூரப்பா தலைமையிலான பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், அந்தக் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தமை செல்லுபடியாகும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
ஏற்கனவே, இரண்டு நீதிபதிகள் கொண்ட குழு இந்த வழக்கில் தீர்ப்பளித்த போது, இருவரும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிலைப்பாட்டுடன் தீர்ப்பளித்தார்கள்.

அதாவது, தலைமை நீதிபதி, ஜே.எஸ். கெஹர், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றும், இன்னொரு நீதிபதி என். குமார், செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.

அதையடுத்து, மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு அந்த வழக்கு அனுப்பப்பட்டது.

நீதிபதி வி.ஜி. சபாஹித், பாஜக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று முடிவெடுத்த நிலையில், பெரும்பான்மை முடிவு என்ற அடிப்படையில், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என முடிவு செய்யப்பட்டது.

பாஜகவைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், அந்தக் கட்சிக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேரும், யெதியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள். அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரிடம் அவர்கள் கடிதம் கொடுத்தனர்.


பாஜக ஆதரவு கூட்டம்(ஆவணப்படம்)
அதையடுத்து, ஆளுநரின் உத்தரவுப்படி, இம் மாதம் 11-ம் தேதி நம்பிக்கை வாக்குக் கோரினார் யெதியூரப்பா. கட்சி விரோத நடவடிக்கைகளைக் காரணம் காட்டி, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும், வாக்கெடுப்புக்கு சற்று முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சட்டப் பேரவைத் தலைவர் போபையா அறிவித்தார்.

குரல் வாக்கெடுப்பு மூலம் யெதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.
ஆனால், அது ஜனநாயக நடைமுறை அல்ல என்று கூறிய ஆளுநர் பரத்வாஜ், அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கினார். அதன்படி, 14-ம் தேதி நடந்த இரண்டாவது வாக்கெடுப்பில், 106க்கு 100 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் யெதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.

இதனிடையே, முதல் வாக்கெடுப்பின்போது, தங்களைத் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, 16 எம்.எல்.ஏ.க்களும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். 11 பாஜக எம்.எல்.ஏ.க்களின் மனு தனியாகவும், 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் மனு தனியாகவும் விசாரிக்கப்பட்டது.

தற்போது, பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, கட்சித் தாவல் தடை சட்டத்தின் 10-வது பிரிவின்படி, பேரவைத் தலைவர் எடுத்த நடவடிக்கை சரியானது தான் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென்னிந்தியாவில், முதலாவது பாஜக அரசான யெதியூரப்பா அரசுக்கு இது பெரும் ஊக்கமளிக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது. இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் மனு நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அதுதொடர்பான தீர்ப்பு எப்படி இருந்தாலும், யெதியூரப்பா அரசுக்கு தற்போதைய நிலையில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

Read more...


இலங்கையில் மாணவர் தலைவர் கைது


பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள்-(ஆவணப்படம்)
அகில இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பின் தலைவர் உதுல் பிரேமரத்ன பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர்களை சந்தித்துவிட்டு வெளியேறும் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் உயர்கல்வி அமைச்சின் கட்டடத்திற்குள் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அங்கு அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட குற்றச்சாட்டில் நீதவானின் பகிரங்க பிடியாணை உத்தரவின் பேரிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

முன்னதாக இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 21 பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொழும்பு நீதவான் பிணை வழங்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடந்த சில வாரங்களாகவே பேராதனை, களனி,ரஜரட்ட, ஜயவர்தனபுர உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளையும் நிர்வாகங்களுக்கும் மாணவர் அமைப்புகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்ற காரணங்களையும் காட்டி பிரச்சனைகள் எழுந்த வண்ணமே உள்ளன.

சில பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையே இன்னும் தொடர்கின்றது.

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைய அரசாங்கம் அனுமதியளித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களை நசுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுவதாக தற்போது கைதாகியுள்ள மாணவர் அமைப்புத் தலைவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களை சந்தித்த மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள், அரசாங்கம் பல்கலைக்கழக பீடங்களை மூடிவிட்டு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு எதிரான குரல்களை நசுக்க முற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணியின் பின்புலத்திலேயே சில மாணவர் அமைப்புகள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றபோதும், இந்தப் பிரச்சனைகளுக்கும் தமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter