>> Tuesday, December 21, 2010
"என்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை"
இந்தியாவில் இரண்டாவது தலைமுறை செல்லிட தொலைபேசி சேவைக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தன்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழுவினர் செய்யும் விசாரணைக்கு தான் உடன்படத் தயார் என்று காங்கிரஸ் கட்சிக் மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தொலைதொடர்புத்துறை கண்காணிப்பு அமைப்பான டிராய்யின் முன்னாள் தலைவர் பிரதீப் இந்தியாவின் மத்தியப் புலனாய்வுத் துறையினர் திங்களன்று விசாரித்துள்ளனர்.
2006ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக நடத்தப்படுகின்ற காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 15 ஆயிரம் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், இந்த ஊழலை தான் கண்டும் காணாமல் இருந்துவிட்டேன் என்று கூறப்படுவதை மறுத்தார்.
பிரதமர் என்பவர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அதனால்தான் இந்த விசாரணைக்கு நான் உடன்படுகிறேன்.
பிரதமர் மன்மோகன் சிங்
நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவினர் முன்னர் தோன்றி விசாரணைக்கு உட்பட தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று அக்குழுவினருக்கு தான் எழுத்து மூலமாகத் தெரியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றக் கூட்டுக் குழு
இந்த விவகாரம் தொடர்பில் மத்திய அரடின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வழங்கிய அறிக்கையை பல்வேறு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் கணக்குக் குழுவினர் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் அப்போதுதான் இவ்விவகாரத்தை முழுமையாக விசாரிக்க முடியும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
சாதாரணமாக அதிகம் பேசாதவராக அறியப்படுகின்ற பிரதமர் மன்மோகன் சிங், தற்போது வழமைக்கு மாறாக ஆக்ரோஷமாக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் என தில்லியுள்ள பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் கூறுகிறார்.
ஞாயிறன்று கட்சித் தலைவி சோனியா காந்தியால் அறிவிக்கப்பட்ட ஊழலை எதிர்த்து போராடுவதற்கான நேற்று ஐந்து அம்சத் திட்டத்தினை தான் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
சோனியா திட்டம்
அரசு நிர்வாகிகள், அரசியல்வாதிகள், ஆகியோருக்கு எதிரான ஊழல் விசாரணைகளை துரிதமாக நடத்தி முடிப்பது, தேர்தலுக்கு ஒதுக்கப்படுகின்ற அரசு நிதியைக் கண்காணிப்பது, அரசாங்க செயல்பாடுகளில் கூடுதலான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவது, அரசு நிலங்களை தனியாருக்கு ஒதுக்குவதில் அரசியல்வாதிகளுக்குள்ள அதிகாரத்தைக் குறைப்பது போன்ற அம்சங்களை உள்ளடக்கிய திட்டம் ஒன்றை சோனியா அறிவித்திருந்தார்.
மனசாட்சிக்கும் நேர்மைக்கும் விரோதமாக அதிகாரத்தில் உள்ளவர்கள் நடந்துகொள்வதென்பது சமுதாயத்தில் ஒரு தொற்று நோயாகப் பரவி வருகிறது
சோனியா காந்தி
இரண்டாவது தலைமுறை செல்லிட தொலைபேசி சேவைக்கான அலைக்கற்றைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியபோது ஏலம் நடத்தாமல் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற முறையில் மத்திய தொலைதொடர்பு துறை ஒதுக்கீடு செய்ததால் இந்திய அரசாங்கத்துக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதென்று தேசிய கணக்கு தணிக்கை அதிகாரி கூறியிருந்தார்.
0 comments:
Post a Comment