>> Friday, November 12, 2010
ராஜா பதவி விலகமாட்டார்: திமுக
புகாரில் சிக்கியுள்ள ராசா
இந்தியாவில் தொலைத்தொடர்பில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டிருப்பதால் அந்தத் துறைக்கு பொறுப்பான திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஆ ராசா பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் அவர் பதவி விலகமாட்டார் என்று திமுக மீண்டும் அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை அன்றும் நாடாளுமன்றத்தில் அந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் தமது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பதவி விலக மாட்டார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான டி கே எஸ் இளங்கோவன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைமை கணக்காயர் அரசிடம் சமர்பித்துள்ள அறிக்கையிலும் இந்த விடயத்தில் சரியான நடைமுறைகள் பின்பற்றவில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலும், எதிர்கட்சிகள் தமது அரசியல் லாபத்துக்காக கொடுக்கும் அழுத்தங்களுக்கு தமது கட்சி பணியாது என்று இளங்கோவன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
காங்கிரசுக்கு ஆதரவளிக்க தயார்--ஜெயலலிதா
இதற்கிடையே, ராசாவை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கினால் திமுக மத்திய ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப்பெற்றுக்கொள்ளும் என்று காங்கிரம் கவலைப்படத்தேவையில்லை என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவளிக்க தாம் தயார் என்றும், காங்கிரசுக்கு 18 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுத்தர முடியும் என்றும் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தான் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள விரும்புவதாக ஜெயலலிதா சூசகமாக கோடிகாட்டி வந்தார். அதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் சிலர் கூறிவந்தனர்.
இந்தப்பின்னணியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்களுக்குள்ளாயிருக்கும் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ ராசா பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் என்று அஇஅதிமுக் உட்பட பல எதிர்க்கட்சிகள் கோரிவந்தாலும், அவரை வெளியேற்ற் காங்கிரஸ் தயங்குகிறது, காரணம் அப்படிச் செய்தால் திமுக தனது ஆதரவை விலக்கிக்கொள்ளும் என அது அஞ்சுகிறது என்றும் கருத்துக்கள் உலாவந்தன.
அது குறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, காங்கிரஸ் அவ்வாறு அஞ்சத்தேவையில்லை என்றும் திமுகவிற்கு நாடாளுமன்றத்தில் 18 உறுப்பினர்கள் இருக்கிறார்கள், அதை தன்னால் ஈடுகட்டமுடியும் என ஜெயல்லிதா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அஇஅதிமுகவிற்கு தற்போது ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மேலும் ஒன்பது உறுப்பினர்கள் மட்டுமல்ல, கூடுதலாகவே இன்னமும் ஒரு சில உறுப்பினர்களின் ஆதரவையும் தன்னால் காங்கிரசிற்கு பெற்றுத்தரமுடியும் என்று ஜெயலலிதா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
கூட்டணியில் மாற்றமில்லை--காங்கிரஸ்
அதேசமயம், ஜெயலலிதாவின் பேட்டி குறித்து கருத்து வெளியிட்ட காங்கிரசின் அகில இந்திய பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத் தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் ஏற்கெனவே திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அந்த கூட்டணியில் ஏதும் மாற்றமில்லை என்று கூறினார்.
0 comments:
Post a Comment