>> Monday, November 1, 2010



தென்னாப்ரிக்க தமிழர்களின் 150 ஆண்டுகள்


டர்பனில் தமிழர்களின் மாரியம்மன் கோவில்
டர்பனில் தமிழர்களின் மாரியம்மன் கோவில்
தென்னாப்பிரிக்காவுக்கு தமிழர்கள் சென்று குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைவதை மிகப்பெரிய விழாவாக கொண்டாட அந்நாட்டு தமிழர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த கொண்டாட்டங்களில் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா கலந்துகொள்ள இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், தென் ஆப்ரிக்காவில் உள்ள கரும்புத் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்வதற்கெனத் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உள்ளிட்ட பல இந்தியர்களை அங்கு கொண்டுசென்றனர்.

1860 ஆம் ஆண்டு துவங்கி 1911 வரை இப்படி கொண்டு செல்லப்பட்டவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். இன்றைய நிலையில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்ட சுமார் பதினான்கு லட்சம் இந்திய வம்சாவளியினர் தென் ஆப்ரிக்காவில் தற்போது வாழ்கின்றனர். அவர்களில் சுமார் பத்து லட்சம் பேர் தமிழர்கள் என்று சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த இந்திய வம்சாவளியினர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றதன் நூற்றி ஐம்பதாவது ஆண்டை இந்த ஆண்டு கொண்டாடுகின்றனர். இதன் ஒருபகுதியாக நவம்பர் 29 ஆம் தேதி தென்னாப்ரிக்காவில் இருக்கும் டர்பன் நகரில் மிகப்பெரும் விழா ஒன்றை அவர்கள் நடத்த உள்ளனர். அதில் தென்னாப்ரிக்க அதிபர் ஜூமா கலந்துகொள்ள இருக்கிறார்.

தென்னாபிரிக்கத் தமிழர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் மற்றும் அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் துணையுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு கருணாநிதியை அவர்கள் சந்தித்தனர்.

தென் ஆப்ரிக்காவில் நடக்க இருக்கும் 150 ஆம் ஆண்டு கொண்டாட் டங்களில் கலந்துகொள்ள தமிழக அரசின் பிரதிநிதிகளை அனுப்புமாறு கோரிய இந்த குழுவினர், தமிழக அரசிடம் சில கோரிக்கைகளை வைத்ததாக ரவிக்குமார் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

தமிழ் கற்றுத்தர கோரிக்கை


இந்தியர்களின் கட்டடம்-1900களில்
இந்தியர்களின் கட்டடம்-1900களில்
தென்னாப்ரிக்காவில் இருக்கும் தமிழர்களில் பெரும்பாலோர் இப்போது தமிழைப் பேசவோ படிக்கவோ இயலாத நிலையில் இருந்தாலும் தமது குழந்தைகளுக்குத் தமிழைப் பயிற்றுவிக்க விரும்புவதால் அதற்கு உதவும் வகையில் தமிழக அரசு தமிழ் பாடநூல்களையும், ஆசிரியர்களையும் அளித்து உதவ வேண்டும் என்று கோரியதாக ரவிக்குமார் தெரிவித்தார்.

மேலும், தென்னாப்ரிக்காவில் தமிழர்கள் செறிந்து வாழும் டர்பன் நகரில் தமிழ் நூல்கள் அடங்கிய நூலகம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றும், தென்னாப்ரிக்கப் பல்கலைக் கழகங்கள் ஏதேனும் ஒன்றில் தமிழ் இருக்கை ஒன்றை நிறுவ வேண்டும் என்றும், தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகளை தென்னாப்ரிக்காவில் அறிமுகப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டு கலைஞர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரியதாக்வும் அவர் கூறினார்.

அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவெடுப்பதாக கருணாநிதி உறுதியளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter