>> Thursday, November 11, 2010
தொண்டு நிறுவனங்களுக்கு "கிடுக்கிப்பிடி"
வடபகுதியில் பெருமளவில் உதவி தேவைப்படும் நிலை உள்ளது
இலங்கையில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தொடர்பான 1980 ஆம் ஆண்டின் சட்டத்தில் அரசு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
இதன்படி இதுவரை அரசிடம் பதிவு செய்து கொள்ளாத நிறுவனங்கள் உடனடியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படி பதிவு செய்து கொள்ளும் நிறுவனங்கள் அரசால் எழுத்துபூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அரசு கொண்டுள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துவதாகவே கருத வேண்டியுள்ளது என்று தன்னார்வ தொண்டு அமைப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன.
அப்படியான சந்தேகம் ஏன் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உருவாகியுள்ளது என்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த புதிய நடைமுறை இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்கட்டுமான நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என இலங்கையின் கிழக்கே செயற்பட்டு வரும் உள்ளூர் அரச சார்பற்ற தன்னர்வ தொண்டு நிறுவனங்களின் இணையத்தின் தலைவரான வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில், பாதுகாப்பு பிரிவினரால் அரச சார்பற்ற நிறுவனங்களின் மீது கொண்டுவரப்பட்ட நெருக்கடிகளை மீண்டும் நினைவூட்டுவதாகவே இருக்கின்றது எனவும் அவர் கூறுகிறார்.
அரசின் இந்தச் செயற்பாடு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தினரிடையே ஒரு அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது எனவும் கமலதாஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
அரசால் மட்டுமே உதவிகளையும் முன்னேற்றங்களியும் செய்ய முடியாது
இலங்கையில் போருக்கு பின்னரான காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மீள்கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த தேவையான முன்னெடுப்புகளை செய்ய அரசால் மட்டும் முடியாது எனவும் கமலதாஸ் கூறுகிறார்.
நிதி வரும் போது வேகமான அபிவிருத்தி வரும், நிதிகள் மட்டுப்படுத்தபடும் போது அல்லது பணியாளர்கள் மட்டுப்படுத்தப்படும் போது, உதவி தேவைப்படும் பிரதேசம் வளராமல் போய்விடலாம்
வர்ணகுலசிங்கம் கமலதாஸ்
தொண்டு நிறுவனங்கள் இப்படியான பணிகளில் ஈடுபடும் போது, அந்தப் பணிகளுக்கான நிதியுதவி பல்தரப்பிலிருந்து கூடுதலாக கிடைக்கும் எனவும், அது தடைபடும் போது நிவாரண மற்றும் முன்னேற்றப் பணிகள் தடைபடும் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
நிவாரண உதவிகளை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான நிதியுதவிகளை சர்வதேசத்திடமிருந்து பெறும் வல்லமை அரசுக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
நாடாளுமன்றம் ஒதுக்கும் நிதியிலிருந்தே அரசு உதவி தேவைப்படும் மக்களுக்கு அதை செய்து வருகிறது எனவும் கூறுகிறார் கமலதாஸ்.
0 comments:
Post a Comment