>> Saturday, October 30, 2010
இலங்கையில் மாணவர் தலைவர் கைது
பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள்-(ஆவணப்படம்)
அகில இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பின் தலைவர் உதுல் பிரேமரத்ன பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர்களை சந்தித்துவிட்டு வெளியேறும் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் உயர்கல்வி அமைச்சின் கட்டடத்திற்குள் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அங்கு அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட குற்றச்சாட்டில் நீதவானின் பகிரங்க பிடியாணை உத்தரவின் பேரிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
முன்னதாக இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 21 பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொழும்பு நீதவான் பிணை வழங்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடந்த சில வாரங்களாகவே பேராதனை, களனி,ரஜரட்ட, ஜயவர்தனபுர உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளையும் நிர்வாகங்களுக்கும் மாணவர் அமைப்புகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்ற காரணங்களையும் காட்டி பிரச்சனைகள் எழுந்த வண்ணமே உள்ளன.
சில பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையே இன்னும் தொடர்கின்றது.
இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைய அரசாங்கம் அனுமதியளித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களை நசுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுவதாக தற்போது கைதாகியுள்ள மாணவர் அமைப்புத் தலைவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களை சந்தித்த மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள், அரசாங்கம் பல்கலைக்கழக பீடங்களை மூடிவிட்டு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு எதிரான குரல்களை நசுக்க முற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் விடுதலை முன்னணியின் பின்புலத்திலேயே சில மாணவர் அமைப்புகள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றபோதும், இந்தப் பிரச்சனைகளுக்கும் தமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது
0 comments:
Post a Comment