>> Monday, December 20, 2010


50வது சதம் அடித்தார் சச்சின்


சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐம்பது சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

தனது 175 ஆவது போட்டியிலேயே டெண்டூல்கர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையும் ஏற்படுத்தி விட்டார்.

சச்சின் டெண்டூல்கர் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். கராச்சியின் தேசிய மைதானத்தில் இடம்பெற்ற அப்போட்டியில் அவர் 15 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தனது முதல் சதத்தை டெண்டூல்கர் அடித்தார். அப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் 119 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகப்படியான சதங்களை அடித்தவர்களின் வரிசையில் டெண்டூல்கருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ரிக்கி பாண்டிங் இருக்கிறார்.

அவர் இதுவரை 39 சதங்களை அடித்துள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter