>> Tuesday, November 2, 2010
'ஒச்சாயி' -தொடரும் வரிவிலக்கு சர்ச்சை
ஒச்சாயி படத்தின் காட்சி
தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிப்பதில் பாரபட்சம் இல்லை, கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
‘ஒச்சாயி’ என்ற திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க முதலில் தமிழக அரசு மறுத்தது. அது தமிழ்ச்சொல் அல்ல என்று சம்பந்தப்பட்ட குழுவினர் நினைப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் ஒச்சாயி என்பது பரவலாக மதுரைப் பகுதியில் பல பெண்களுக்கு இருக்கும் பெயர், ஆங்கிலம் கலந்த சொற்களைப் பெயர்களாகக் கொண்ட திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் தமிழக அரசு ஒச்சாயிக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது உள்நோக்கமுடையது என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அப்படத்திற்கும் விலக்கு அளிக்கப்பட்டது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது என்ற முடிவின் படி தான் ‘சிவாஜி’, ‘ஏகன்’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’, ‘கோவா’, ‘எந்திரன்’ போன்ற திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து இறுதி முடிவெடுப்பதே தமிழக அரசின் வணிகவரித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகிய அதிகாரிகள் கொண்ட ஒரு குழுதான் என்றும் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
இப்பிரச்சினை பற்றி கருத்துக்கூறிய வளர்ந்துவரும் திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், 'இப்படியெல்லாம் செய்வதால் தமிழ் வளர்ந்து விடும் என்று நினைப்பதே தவறு, பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் தமிழ்ப் பண்பாட்டை பிரதிபலிப்பதில்லை, தமிழ் ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, அக்குழுவின் பார்வையில் எத்தகைய திரைப்படங்கள் தமிழ்ப் பண்பாட்டிற்கு இசைவாக இருப்பதாக கருதப்படுகிறதோ அவற்றிற்கு மட்டுமே அரசின் சலுகைகள் சென்றடைய வேண்டும்' என்றார்.
0 comments:
Post a Comment