>> Saturday, November 27, 2010
அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையில்
மகிந்தவை சந்தித்தார் எஸ்.எம்.கிரிஷ்ணா
மகிந்தவை சந்தித்தார் எஸ்.எம்.கிரிஷ்ணா
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அந்நாட்டின் இரண்டு புதிய துணைத் தூதரகங்களை இலங்கையில் திறந்துவைக்கவுள்ளார்.
தென்னிலங்கை துறைமுக நகரமான ஹம்பாந்தோட்டையிலும் வடக்கே யாழ்ப்பாணத்திலும் இந்த துணைத் தூதரகங்கள் திறந்துவைக்கப்படவுள்ளன.
மூன்று நாள் விஜயமாக வியாழன்று மாலை இலங்கை சென்றடைந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்,இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்கள் பலரையும் வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார்.
வெள்ளியன்று காலை ஜீ.எல்.பீரி்ஸூடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்த இந்திய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், போர் ஓய்ந்துள்ள இலங்கையில் இதுவரை தீர்க்கப்படாதுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சந்தப்பர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற எந்தவொரு விடயங்களையும் புரிந்துணர்வுடனும் ஒழுங்கமைந்த பேச்சுவார்த்தைகளூடாகவும் தீர்த்துக்கொள்ள முடியுமென நம்புவதாகவும் கிருஷ்ணா சுட்டிக்காட்டினார்.
பிராந்திய பலப்பரீட்சை
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்ததன் பின்னர் அந்நாட்டுடனான இந்திய இராஜதந்திர உறவுகளின் ஒரு அங்கமாக தனது துணைத் தூதரகங்களை திறக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக தெற்காசியாவில் பாகிஸ்தான்,பங்களதேஷ் போன்ற நாடுகளில் சீனாவின் அனுசரணையில்அமைந்துள்ள பல துறைமுகங்களுக்குப் புறம்பாக இலங்கையில் ஹம்பாந்தோட்டை நகரில் அண்மையில் திறக்கப்பட்ட துறைமுகத்திற்கும் சீனாவே மொத்த நிதியுதவியும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீன உதவியில் நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட துறைமுகம்
ஹம்பாந்தோட்டையில் சீன உதவியில் நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட துறைமுகம்
இதற்கிடையே தற்போது இந்தியா ஒன்று புள்ளி ஏழு பில்லியன் டொலர்கள் மதிப்பிலான நிதியுதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிதியுதவிகள் அடுத்த மூன்று வருடகாலத்தில் யாழ்ப்பாணத்தில் துறைமுகமொன்றை நவீனமயப்படுத்தவும் மற்ற இடங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த பின் கருத்து தெரிவித்த எஸ்.எம்.கிருஷ்ணா, இந்தியாவைத் தவிர வேறெந்த நாடும் சரித்திர ரீதியாக இலங்கையுடன் இந்தளவு நெருக்கமான உறவைக் கொண்டிருக்க வில்லை எனத்தெரிவித்தார்.
இறுதிக்கட்டப் போரின்போது இலங்கையில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டதாக மேற்குலக நாடுகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பாகிஸ்தான் அதிபர் அசிப் அலி சர்தாரியும் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை செல்கின்றார்.
0 comments:
Post a Comment