>> Friday, December 10, 2010


இலங்கை போர்குற்றம்- ராணுவ தொடர்பா?


சித்திரவதைக்கான சாட்சியங்கள் (ஆவணப்படம்)
இலங்கையில் நடைபெற்ற போரின் போது இலங்கைப் படையினராலும் - விடுதலைப் புலிகளாலும் செய்யப்பட்டிருக்கக் கூடிய போர் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை முழு விசாரணை நடத்த வேண்டும் என்று இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சியும் புலம் பெயர் தமிழர்களால் நடத்தப்படும் இணையதளங்களிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வீடியோவை அடுத்து இந்த கோரிக்கையை அம்னெஸ்டியும் - ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பும் விடுத்துள்ளன.

ஆனால் சுயாதீன விசாரணை வேண்டும் என்று வரும் கோரிக்கைகளை இலங்கை இராணுவம் நிராகரித்துள்ளது.

நிர்வாணப்படுத்தப்பட்டு கைகள் பின்னால் கட்டப்பட்ட கைதிகளை சிப்பாய்கள் தலையிலும் காலிலும் சுட்டுக் கொல்லும் காட்சிகளை இந்த வீடியோ பதிவு காட்டுகிறது. அதில் தரையில் இரண்டு பெண்களின் உடல்கள் இருக்கின்றன. இதில் ஒருவரின் அடையாளத்தை தாம் உறுதி செய்துள்ளதாக அம்னெஸ்டியும், ஹூயூமன் ரைட்ஸ் வாட்சும் தெரிவிக்கின்றன. அவர் விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி அறிவிப்பாளராக இருந்த இசைப்பிரியா என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இறுதிப் போரில் இசைப்பிரியா கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கடந்த ஆண்டு கூறியிருந்தது. ஆனால் இசைப்பிரியா உள்ளிட்ட கைதிகள் நிராயுத பாணிகளாகவும், போர் முனையில் இல்லாத நிலையிலும் கொல்லப்பட்டதாகவே தெரிகிறது என இந்த மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சாட்டுகின்றன.

ஆனால், இந்த வீடியோவுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மேதவல நிராகரிக்கிறார்.

இவை தொழில்நுட்ப ரீதியாக திருத்தி அமைக்கப்பட்ட படங்கள் என்றும் வேறு யாரோ செய்த போர் குற்றங்களை இலங்கை இராணுவம் செய்தது போல காட்டுவதாகவும், இலங்கையில் நற்பெயரை களங்கப்படுத்தவே இந்த முயற்சி நடப்பதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதேசமயம், தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆதாரங்கள் இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்களுக்கும் இலங்கை இராணுவத்தின் 53 ஆவது படை பிரிவினருக்கும் இடையேயான தொடர்பை நிரூபிப்பதாக ஹூயூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியுள்ளது.

போர் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட சிப்பாய்களை மட்டுமல்லாது அவர்களின் தளபதிகளையும் தண்டிக்க போர் குற்றங்கள் தொடர்பான ஐ நா உடன்பாட்டின் 86 ஆவது பிரிவு வழிவகை செய்கிறது. உயர் தளபதிகள் தமக்கு கீழேயுள்ளோர் செய்யும் அத்துமீறல்களை தடுக்கத் தவறினால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது.

சமீபத்தில் இலங்கை ஜனாதிபதியோடு லண்டன் வந்திருந்த இராணுவ மேஜர் ஜெனரல் சாகி கலகேவுக்கு எதிராக பிடியாணை வாங்குவதற்கு, ஐக்கிய ராஜ்ஜியத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களில் ஒரு பிரிவினர் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter