>> Saturday, December 4, 2010


பிரிட்டனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டம்
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரிட்டனிலிருந்து கொழும்பை சென்றடைவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அங்கு இரண்டு ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக நடத்தப்பட்ட கண்டனப் பேரணி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஆளுங்கட்சி அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையில் நடந்தது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை எனவும், பிரித்தானியா தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருப்பதன் காரணத்தினாலேயே ஜனாதிபதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.


புலிப் பயங்கரவாதிகள் விமான நிலையத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் போது பிரித்தானியா கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. பிரித்தானி்ய அதிகாரிகளின் ஆதரவு இருந்தபடியால்தான் அவர்கள் புலிக்கொடிகளை அங்கு கொண்டு போராட்டம் நடத்தினார்கள் பொய்யான போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி எமது தேசத்தின் முன்னேற்றப் பாதையைத் தடுக்கத்தான் பிரி்த்தானிய காலனித்துவவாதிகள் முயற்சிக்கிறார்கள்.


விமல் வீரவன்ச

இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே மீண்டும் புலிகளை தூண்டிவிடும் நடவடிக்கையில் பிரித்தானியா ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் வீரவன்ச கோசமிட்டார்.

இதேவேளை, தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளரும் மேல்மாகாண ஆளுநருமான அலவி மௌலானா கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஏற்பாடு செய்திருந்த கண்டனப் பேரணியிலும் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைப் பாதுகாப்பதற்காக இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கத் தயாராக இருப்பதாக அலவி மௌலானா இங்கு தெரிவித்தார்.


ஜனாதிபதிக்கு எதிராக ஏதாவது நடந்திருந்தால், இலங்கை மட்டுமல்ல முழு ஆசியாவும் பொங்கியெழும்.


அலவி மௌலானா

இராக் போன்ற நாடுகளில் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு இலங்கை விடயத்தில் மட்டும் பிரித்தானியா இரட்டை வேடம்போடுவதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையே, பிரிட்டனிலிருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைச்சர்களும் அவரது ஆதரவாளர்களும் பெரும் உற்சாக வரவேற்பளித்து அழைத்துச் சென்றனர்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter