>> Thursday, October 1, 2009
கேரளா தேக்கடியில் படகு விபத்து - சுற்றுலா பயணிகள் பலர் பலி
கேரள மாநிலம் தேக்கடியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
பிரபல சுற்றுலா மையமான தேக்கடியில் உள்ள ஏரியில் தினசரி மாலை 4 மணிக்கு சுற்றுலாப் பயணிகளுக்காக படகு சவாரி நடத்தப்படும். அதன்படி, இன்று ஒரு படகில் 74 பயணிகள் ஏறினார்கள். இரண்டு அடுக்குகள் கொண்ட அந்தப் படகில் மேல் அடுக்கிலும் பயணிகள் இருந்தார்கள்.
அடர்ந்த வனப்பகுதியான அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பயணிகள் படகில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். மணக்கப்பாரா என்ற இடத்தில், காட்டு எருமைகள் நிற்பதை சிலர் பார்த்தனர். அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், படகின் மேல் அடுக்கில் இருந்த பயணிகள் அனைவரும் ஒருபுறமாக சேர்ந்தபோது, நிலை தடுமாறி படகு கவிழ்ந்தது.
அதையடுத்து, படகில் இருந்த பயணிகள் தண்ணீரில் மூழ்கினார்கள். இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்டவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 30 பேரைக் காணவில்லை என்று அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தப்படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
அந்தப் பகுதியில் வெளிச்சம் இல்லாத காரணத்தால், மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, பிகார் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த இரண்டு படகு விபத்துக்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
--------------------------------------------------------------------------------
ஏர் இந்தியா விமான சேவை வழமைக்குத் திரும்பியது
ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செலவு வெட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய விமான ஓட்டிகள் அதனை கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்த சர்ச்சைக்கு காரணமான விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
சுமார் 200 விமான ஓட்டிகள் சுகவீன விடுப்பு போராட்டத்தை ஆரம்பித்ததை அடுத்து சனிக்கிழமை முதல் பல விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.
இந்த மாத முற்பகுதியில், மற்றுமொரு விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமான ஓட்டிகளும் இதேபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டதால், 5 நாட்களுக்கு விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.
--------------------------------------------------------------------------------
இலங்கையின் கிழக்கில் அபிவிருத்திக்குட்படாத கிராமங்கள்
கிழக்கு கிராம வாசிகள்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பரவலாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் சில பிரதேசங்களில் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படவில்லையென மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கடந்த காலங்களில் மோதல்கள் நடைபெற்ற வாகரைப் பிரதேசத்திலிருந்து தொலைவாக அமைந்துள்ள கட்டுமுறிவு, ஆண்டான்குளம், மருதன்கேணிகுளம்,கிரிமிச்சை போன்ற கிராமங்களில்
எந்தவிதமான மருத்துவ வசதிகளும் இன்றி மக்கள் பெரும் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர்.
வாகரையிலிருந்து சுமார் 25 மைல் தூரத்திலுள்ள இந்த கிராமங்களுக்கு சீரான பேருந்து சேவையும் இல்லாதுள்ளதாகவும், மாகாண அமைச்சர்கள் அங்கு சென்று பார்ப்பது கூட இல்லையெனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சசிதரன் கவலை தெரிவிக்கின்றார்.
இது தொடர்பாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் கேட்டபோது, அதிகாரிகள் குழு ஒன்றினை சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி வைத்து அங்குள்ள நிலைமையை கண்டறிந்து,
தேவையானால் அங்கு வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------
இந்தியாவில் கடும் வறட்சி
நீரின்றி வறண்ட நிலங்கள்
இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை, சராசரி அளவைவிட 23 சதம் குறைவாகப் பெய்திருப்பதை அடுத்து, கடந்த 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு கடும் வறட்சியைச் சந்தித்துள்ளது.
நான்கு மாத பருவமழைக் காலம் இன்றுடன் முடிவடைவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, இந்தக் காலகட்டத்தில் சராசரி அளவைவிட 23 சதம், மழை குறைவாகப் பெய்துள்ளது.
அதிகபட்சமாக, இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் 36 சதம் மழை குறைவாகப் பெய்துள்ளது. குறைந்தபட்சமாக, தென்மாநிலங்களில் ஏழு சதம் அளவுக்கு மழை பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ஜூன் மாதத்தில் கடும் வறட்சி ஏற்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் கணிசமாக பருவமழை பெய்தது. இருந்தபோதிலும், சராசரி அளவுக்கு மழை கிடைக்கவில்லை.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
0 comments:
Post a Comment