>> Wednesday, September 30, 2009
'முகாம் மக்கள் மீள்குடியேற்றப்படாவிட்டால் கசப்புணர்வு ஏற்படும்'- ஐ.நா தலைமைச் செயலர்
இலங்கையின் வடக்கே இடைத்தங்கல் முகாம்களில் மிகவும் மோசமான நிலையில் தங்கியுள்ள சுமார் மூன்று லட்சம் மக்களை மிக விரைவாக மீள்குடியேற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் அங்கு மேலும் கசப்புணர்வுகள் உருவாகும் என்று இலங்கை பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்கவிடம் ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளதாக ஐ. நா வின் செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.
இலங்கையில் பருவ மழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இது தொடர்பில் உடனடி நடவடிக்கை தேவை என்கிற தனது கவலையை பான் கீ மூன் அவர்கள் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்கவுடன் நியூயார்க்கில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் இலங்கையில் போருக்கு பிறகான சவால்களை சந்திக்க இலங்கை அரசு எடுத்து வரும் முயற்சிகளை அவர் வரவேற்றுள்ளார்.
வவுனியாவில் பான் கி மூன்
இலங்கை ஜனாதிபதியுடன் தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடத்திய உரையாடல்களின் போது, மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு மற்றும் இணக்கப்பாட்டுக்கான வழிமுறைகள், மற்றும் அங்கு நீண்ட காலம் இடம்பெற்ற இனப் போரில் எற்பட்ட வன்முறைகள் ஆகியவை குறித்த விசாரணைகள் தேவை என்பவை பற்றி தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளதாகவும் பான் கீ மூன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மானிக் ஃபார்ம் பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அங்கு இருப்பவர்களிடையே ஏற்பட்டுள்ள விரக்தியை வெளிக்காட்டுகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் அனைத்து இடம்பெயர்ந்த மக்களையும் மீள்குடியேற்றம் செய்ய அரசு முன்னர் கொடுத்திருந்த உறுதிமொழிகளை நடைமுறைபடுத்த இலங்கை அரசு ஆர்வமாக உள்ளதாக அதன் பிரதமர், பான் கீ மூன் அவர்களிடம் உறுதியளித்துள்ளதாகவும் ஐ நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரட்ணஸ்ரீறி விக்கிரமநாயக்க
இந்தச் சந்திப்பின் போது வடபகுதியில் இருக்கும் மக்களின் நம்பிக்கையை அரசு பெறுவது மிகவும் முக்கியம் என்றும், அப்படி செய்யத் தவறுவது ஒரு இணக்கப்பாட்டுக்கான சாத்தியக் கூறுகளை குறைத்து மதிப்பிடுவது போல ஆகிவிடும் என்றும் பான் கீ மூன், ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த இலங்கை பிரதமர் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பில் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நெருங்கிச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளதாகவும் ஐ. நா செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
போர்க் காலங்களில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக ஒரு சுயாதீனமான விசாரணை தேவை என்கிற கருத்தையும் பான் கீ மூன் இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு ஒரு முக்கியமான முன்னெடுப்பாக இருக்கும் என்றும் ஐ. நா வின் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தி வெளியீடு கூறுகிறது.
வால்டர் கெலின்
இதனிடையே இலங்கையின் வடக்கேயுள்ள முகாம்களில் ஜன நெருக்கடியை குறைக்க உடனடி நடவடிக்கைகள் தேவை என்று ஐ நா வின் தலைமைச் செயலரின் சிறப்புத் தூதராக இலங்கை சென்று திரும்பியுள்ள பேராசிரியர் வால்டர் கெலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர்கள் முகாம்களில் மிகவும் அபாயகரமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது மிகவும் அவசியமானது என்றும் வால்டர் கெலின் கூறியுள்ளார்.
மன்னார் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள பெருமளவிலான கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் அரசு எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றும் அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------
தாயகம் திரும்பிய அகதிகளின் குழந்தைகளுக்கு இலங்கைக் குடியுரிமை
குழந்தைகளுக்கு குடியுரிமை பெற வந்த சிலர்
இலங்கையின் வடக்கே யுத்தச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து, இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த பின்னர் தாயகம் திரும்பியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்று திங்களன்று வவுனியாவில் நடைபெற்றது.
ஐக்கியநாடுகளின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ''நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின்'' அனுசரணையோடு, இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இணைந்து இந்த நடமாடும் சேவையை ஒழுங்கு செய்திருந்தது.
குடியுரிமைப் பத்திரம் மட்டுமல்லாமல் ஏனைய அத்தியாவசிய ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கியநாடுகளின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ''நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின்'' வடபிராந்திய இணைப்பதிகாரியான ஹனிபா மொகமட் சியால் கூறுகின்றார்.
இவை பற்றிய மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேல்கலாம்.
--------------------------------------------------------------------------------
'கிழக்கு மாகாண விதவைகளுக்கு உதவ இந்திய சேவா நிறுவனம் முன்வந்துள்ளது'- மாகாண அமைச்சர்
கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
கிழக்கு மாகாணத்தில் சுனாமி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 48,000 விதவைகளுக்கு நல்வாழ்வளிக்க இந்திய சேவா நிறுவனம் முன்வந்துள்ளதாக இலங்கையின் கிழக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் மேற்கொண்ட சந்திப்பினைத் தொடர்ந்து மூவர் கொண்ட குழுவினர் கிழக்கு மாகாணத்துக்கு வந்து இது குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தியா, சார்க் பெண்கள் அபிவிருத்தி நிதியம் மூலம் 100 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இந்தியாவுக்கு வெளியே இந்த நிதி செலவிடப்படும் நிலையில் கிழக்கு மாகாணமும் இதற்கான கணிசமான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்திருக்கின்றார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
^^ மேலே செல்க
முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள
0 comments:
Post a Comment