இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றிய அமெரிக்க புகார்களை ஆராய உயர்மட்டக்குழு நியமனம்
>> Tuesday, October 27, 2009
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த சண்டைகளின் இறுதி மாதங்களில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க உயர்மட்ட சுயாதீன குழு நியமிக்கப்படும் என்று இலங்கை கூறுகிறது.
இலங்கை இராணுவத்தாலும், விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசமான வன்செயல்கள் குறித்து அமெரிக்க அரசுத்துறை கடந்த வாரம் அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றத்துக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது.
தமது இராணுவத்தினர் தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
இது தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் பிபிசிக்கு அளித்த பேட்டியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
யசீகரனும்,அவரது மனைவியும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திலிருந்து விடுதலை
இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சஞ்சிகை வெளியீட்டாளரும் அச்சக உரிமையாளருமான யசீகரனும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்புசட்டத்தின் கீழான வழக்குகள் இரண்டையும் இலங்கை சட்டமா அதிபர் விலக்கிக்கொண்டதை அடுத்து இவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இனவாத உணர்வுகளை தூண்டும் வகையிலான சஞ்சிகை யொன்றை அச்சிட்டு வெளியிட்டமை, அதற்காக சதிசெய்தமை, சஞ்சிகைக்காக வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றமை போன்ற குற்றச்சாட்டுகள் யசீகரன் மீதும் அவருக்கு உடந்தையாய் இருந்ததாக யசீகரன் மனைவி மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்ததது.
இதே சஞ்சிகையை பிரசுரித்தமை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடுழிய சிறைத்தண்டணையை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்திருந்தது.
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கவில்லை - சிவத்தம்பி
தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பதை தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இன்று தமிழோசையிடம் தெரிவித்தார்.
தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது என சிவத்தம்பி பி.பி.சி தமிழோசைக்கு சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி
ஆனால் இது குறித்து திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட தமிழக முதல்வர் மு கருணாநிதி, கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வார் என்று அறிவித்திருக்கிறார்.
ஆய்வரங்க பணிக்காக முன்னதாகவே வருவதாக சிவத்தம்பி தெரிவித்திருப்பதாகவும், மேலும் விவாதப்பொருட்களாக எடுத்துக்கொள்ள ஐந்து விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார் என்றும் திங்கட்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதி கூறியிருக்கிறார்.
மேலும் சிவத்தம்பி அவர்களின் ஆலோசனையின்பேரில்தான் ஜனவரியில் நடக்கவிருந்த மாநாடு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பின்னணியில் கருணாநிதியின் இன்றைய அறிவிப்பு குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த சிவத் தம்பி அவர்கள், மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பது தொடர்பில் தாம் இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment