இலங்கையில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்த நடவடிக்கை

>> Friday, October 23, 2009

இலங்கையில் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களில் முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதற்கு முன்பு விடுவிக்கப்பட்டிருந்தாலும், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த இடங்களைச் சேர்ந்த மக்கள் விடுவிக்கப்படுவதென்பது இதுவே முதல் முறை.

முல்லைத் தீவு, கிளிநொச்சி அல்லாது வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அடங்கலாக நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மாத காலத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நடவடிக்கையின் முதற்கட்டமாக 5960 பேர் வியாழனன்று வவுனியா முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீள்குடியேற்றத்துக்கான ஆரம்ப வைபவங்கள் மன்னாரின் அடம்பன், முல்லைத் தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச பாலிநகர் பாடசாலை, வவுனியா நகரம் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன.

இலங்கையில் மோதல் காலத்தில் மனித குலத்துக்கெதிரான போர்க்குற்றங்கள்: அமெரிக்க அரசுத்துறை விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்துடைய இராணுவ நடவடிக்கையின் இறுதி மாதங்களில் நடந்த சம்பவங்கள் மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றங்களாக இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸ் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வெளியுறவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.

யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பினரின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த அறிக்கையில், போர்க்குற்றங்கள் என்று வருணிக்கப்படுகின்ற சம்பவங்களில் பெரும்பான்மையானவை மோதலற்ற பிரதேசம் என்று அரசாங்கத்தால் குறிக்கப்பட்டிருந்த இடங்களில் நடந்திருந்தன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்காவின் இந்த அறிக்கை முகாந்திரமற்ற ஒன்றாகத் தெரிகிறது என்று கூறியுள்ள இலங்கை அரசாங்கம், பொதுமக்களைக் காப்பாற்றுவதில் ஆயுதப் படையினர் மனசாட்சியுடன் செயல்பட்டனர் என்று கூறுகிறது.

மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வெற்றிகள்
இந்தியாவில் மூன்று மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கின்றன.

அருணாசலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆனால், ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்திருந்தாலும் அதனால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.

மகாராஷ்டிர மாநிலத்தில், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 144 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க அவர்களுக்கு மேலும் ஓர் இடம் தேவை.

அருணாசலப் பிரதேசத்தில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 42 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை. அதற்கு மேலும் ஐந்து இடங்கள் தேவை. ஓம்பிரகாஷ் செளதாலா தலைமையிலான இந்திய தேசிய லோக் தளக் கூட்டணி 32 இடங்களிலும், பாஜக நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. யார் ஆட்சியமைப்பது என்பதை முடிவு செய்வதில், சுயேச்சைகள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் எனத் தெரிகிறது.

பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தீவிர வலதுசாரிக் கட்சித் தலைவருக்கு வாய்ப்பளிப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது பி.என்.பி. தலைவர் நிக் க்ரிஃபின்பிபிசி தொலைக்காட்சியின் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக லண்டனில் உள்ள பிபிசி தொலைக்காட்சி மையத்துக்கு பிரிட்டனின் தீவிர வலதுசாரிக் கட்சியான பிரிட்டிஷ் தேசியவாதக் கட்சியின் தலைவர் வருவதையிட்டு அங்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பி.என்.பி. தலைவர் நிக் க்ரிஃபின் வரும்போது தொலைக்காட்சி மையத்தில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக பாஸிஸ எதிர்ப்பு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்களின் கேள்விகளுக்கு அரசியல்வாதிகளும் பிற முக்கியஸ்தர்களும் பதில் அளிக்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பி.என்.பி. தலைவர் தோன்றுவது என்பது இதுவே முதல் முறை.

வெள்ளையினத்தவருக்கே பிரிட்டன் என்ற வாதத்தை முன்வைத்து அரசியலில் ஈடுபட்டுவரும் பி.என்.பி கட்சி ஐரோப்பிய தேர்தலில் சில ஆசனங்களை வென்றுள்ள நிலையில், அக்கட்சிக்கு நிகழ்ச்சியில் இடம் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என பிபிசி நிறுவனம் வாதிட்டுள்ளது.

இந்த சர்ச்சை குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter