>> Tuesday, December 15, 2009
அகில இந்திய வானொலியின் ராஜாராம் - சிறப்பு செவ்வி
வானொலித் துறையானது பல்வேறு வடிவங்களில் மாற்றம் அடைந்து வருகிறது. ஒப்பீட்டு அளவில் உங்களின் கருத்து?
வானொலி மற்றும் ஒலிபரப்பு நுட்பங்கள் முன்னேறி வருகிறது. அன்மையில் எங்களுக்கு அகில இந்திய வானொலியில் ஒரு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வானொலியில் இருந்து அந்த பயிற்சியை வழங்கினர். வானொலித் தொடர்பான பல வேலைகளை ஒருவரே எப்படி செய்வது என்பது தான் அந்தப் பயிற்சியின் நோக்கம்.
உதாரனமாக ஒரு விவசாய நிகழ்ச்சியை அந்த விவசாயி இருக்கும் பகுதிக்கே சென்று நிகழ்ச்சியை பதிவு செய்து அங்கேயே அதனை எடிட் செய்து செயற்கைக்கோள் மூலம் நிலையத்திற்கு அனுப்பி அப்படியே ஒலிபரப்பும் வகையில் அந்தப் பயிற்சி இருந்தது.
அந்தப் பயிற்சியின் நிறைவில் கூறினேன், பயிற்சி நன்றாக இருக்கிறது ஆனால் இதனை செயல்படுத்தினால் பலருக்கு வேலை இழப்பு ஏற்படும். ஆனால் பயிற்சி அளித்தவர் கூறினார், இதன் மூலம் பல புதிய செய்திகனை உடனுக்குடன் வழங்கலாம். ஆனாலும் அதற்கான நுட்பங்கள் மற்றும் சாதனங்கள் இன்னும் எமக்கு கிடைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் தற்பொழுது சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆள்பற்றாக்குறை, புதிய ஆட்களையும் சமீபகாலமாக நியமிப்பதில்லை.
தமிழ் செய்தி அறிக்கையில் தங்களின் அனுபவம் குறித்து கூறுங்கள்?
டெல்லியில் இருந்து ஒலிபரப்பாகும் செய்தி அறிக்கைகளில் ஆங்கிலம், ஹிந்தி, உருது ஆகிய செய்தி அறிக்கைகள் மட்டுமல்லாமல் தமிழ் செய்திகளும் இணையத்திலும் கேட்கலாம். நியூஸ் ஆன் டிமான்ட் இணையதளத்தில் தமிழ் செய்திகளை கேட்பதோடு படிக்கவும் செய்யலாம்.
தமிழ் செய்திப் பிரிவில் நானும் சபீதா குமாரும் முழு நேர ஊழியர்கள். மற்றவர்கள் அனைவரும் பகுதி நேர பணியாளர்கள். தமிழில் டைப் செய்வதற்கு உதவியாக ஒரு மென் பொருளை ஹிந்திப் பிரிவில் கொடுத்தார்கள். அதன் துணை கொண்டு தமிழிலேயே தட்டச்சு செய்து படிக்க ஆரம்பித்தோம். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
இணையம் தங்களுக்கு எந்த அளவிற்கு செய்தி தயாரிப்பில் பயன்படுகிறது?
சென்னை வானொலி நிலையம் காலை தயாரிக்கும் மாநிலச் செய்திகள் மற்றும் திருச்சி வானொலி நிலையம் மதியம் தயாரிக்கும் முக்கியமான மத்திய செய்திகளை தற்பொழுது இணையத்தில் பார்த்துக்கொள்வதால் அவற்றையெல்லாம் மத்திய செய்திப்பிரிவுக்கு எடுத்துக்கொள்வோம். இது எங்களது செய்திப் பிரிவு டைரக்டருக்கு பிடித்துவிட்டது.
பொங்கல் விழாவின் போது எங்களால் தொடங்கப்பட்ட இந்த சேவை மற்ற மொழி பிரிவினர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் எங்களது இயக்குனர் தமிழ் பிரிவினர் எல்லாவற்றிற்கும் முன்னோடியாக உள்ளனர் என்றது தான். அங்கு வந்த குஜராத்தி மொழி பிரிவின் தலைவர் “நாங்கள் இந்த பணியினை ஏற்கனவே செய்து வருகிறோம்” என்றார். அதற்கு இயக்குனர் “தமிழ் பிரிவினர் அதனை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதை அறிந்துள்ளனர்” என்றது மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது எனலாம்.
புது தில்லியில் உள்ள அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவு எப்படி செயல்படுகிறது?
முதலில் செய்திகள் “பொது செய்திப்பிரிவு அறைக்கு” வரும். அதனை அங்குள்ள எடிட்டர் பெற்று மொழிப்பிரிவுக்கு அனுப்புவார். அவர் நல்ல எடிட்டராக இருந்தால் முக்கிய செய்திகள் அனைத்தினையும் எங்களுக்கு அனுப்புவார். ஒரு சிலர் தமிழ் நாடு என்று வந்தால் மட்டுமே அந்த செய்தியை எங்களுக்கு அனுப்புவர். இப்படி ஒவ்வொரு பிரிவாக கடந்து வரும்பொழுது, ஒரு சில முக்கியச்செய்திகள் விடுபட்டுவிடும். ஆனால் இந்த இணையதள வசதி வந்த பிறகு அது ஓரளவுக்கு சரி செய்யப்பட்டுவிட்டது எனலாம்.
வானொலி பணிக்கு தாங்கள் எந்த ஆண்டில் நுழைந்தீர்கள்?
1973 மே மாதம் அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு பிரிவில் செய்தி எழுத்தராக பணியில் சேர்ந்தேன். அதற்கு முன் திருநெல்வேலி தினமலரில் பணியில் இருந்தேன். அதன் பின் மதுரை மற்றும் சென்னை தினமலரில் பணியாற்றினேன்.
தங்களின் படிப்பு எங்கே தொடங்கியது?
எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்னடப்பள்ளி. எனது உயர் நிலைப்படிப்பு எங்கள் ஊரின் அருகேயேத் தொடங்கியது. அதன் பின் பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் பயின்றேன். என்னுடைய பேராசிரியர் தா. வளனரசு, அவர் என்னை வழிநடத்திடா விடில் நான் ஏதேனும் ஒரு அரசு அலுவலகத்தில் கிளர்க்காக பணியை முடித்திருப்பேன். தமிழ் மேல் ஒரு பற்றுதலை உருவாக்கியவர் எனலாம். காரணம் அவர் ஒரு நல்ல பேச்சாளர். நான் இளங்கலை பொருளாதாரம் படித்துவிட்டு வேலைத் தேடிக்கொண்டு இருந்த சமைத்தில் இவர் தான் என்னை தினமலரில் சேர்த்துவிட்டார். (தொடரும்)
Labels: அகில இந்திய வானொலி, ராஜாராம்
0 comments:
Post a Comment