>> Wednesday, December 16, 2009

இலங்கையில் தமிழர் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ உண்மை -பிரிட்டிஷ் பத்திரிக்கை

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக் காலப்பகுதியில், இலங்கை இராணுவத்தினர் கைதிகளை சுட்டுக் கொல்லுவதாக குற்றஞ்சாட்டி அது தொடர்பில் வெளியான வீடியோப் படங்கள் ஆதாரமானவையே என்று பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று கூறுகிறது.

ஜனவரியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ ஐரோப்பாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு மனித உரிமை அமைப்பு வெளியிட்டிருந்தது.

இந்த வீடியோப் படப்பதிவில் இலங்கை இராணுவ சீருடையில் இருப்பதைப் போன்று தோன்றும் ஒருவர் நிர்வாணமாகவும், கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் இருந்த இருவரை சுட்டுக் கொல்வதாக காண்பிக்கிறது.

பிபிசி உட்பட இந்த வீடியோப் படப் பதிவு பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது.

ஆனால் இந்த வீடியோ புனையப்பட்ட ஒன்று என்று இலங்கை இராணுவம் கூறுகிறது.

எனினும் சுயாதீனமான தடயவியல் நிபுணர் ஒருவர் நடத்திய ஒரு ஆய்வில் அந்த வீடியோ படப்பதிவில் ஏமாற்றும் செயலோ அல்லது ஒட்டி வெட்டும் வேலையோ இடம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளதாக அந்த அந்த நாளிதழ் கூறுகிறது.



--------------------------------------------------------------------------------


ஐனாதிபதித் தேர்தலில் போட்டி -சிவாஜிலிங்கம் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்

இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்திருக்கிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்று இதுவரை அறிவிக்காத நிலையில். சிவாஜிலிங்கம் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இப்போது இருக்கும் பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிக்கக் கூடிய சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

தமிழ் இனத்தின் பேரம் பேசும் திறனை அதிகப்படுத்தவே தான் போட்டியில் இறங்குவதாக அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய நடவடிக்கையின் ஒழுங்கு நடவடிக்கையை தான் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறிய சிவாஜிலிங்கம், தான் டெலோ அமைப்பில் வகித்து வந்த அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகப்போவதாகவும் அறிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


கீரிமலை சிவன்கோயில் திறப்பு

கீரிமலை ஆலயம்

இலங்கையில் உள்ள மிகவும் தொன்மை வாய்ந்த சிவத்தலங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்குப் பொது மக்கள் இன்று முதல் இராணுவத்தின் முன்னனுமதியின்றி சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கமைய பொதுமக்கள் சென்று வழிபடுவதற்காகத் திறந்துவிடப்பட்டிருக்கின்றது என வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.

சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், சேந்தான்குளத்திலிருந்து கீரிமலைக்குச் செல்லும் வீதியை இன்று காலை வைபவரீதியாகத் திறந்து வைத்து நகுலேஸ்வரம் ஆலயத்திற்கான பொதுமக்களின் பிரயாணத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த வைபவத்தில் யாழ் அரச அதிபர் கே.கணேஸ், முக்கிய இராணுவ அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஆலயத்தைச் சென்றடைந்த இவர்கள் அங்கு இடம்பெற்ற விசேட பூசையில் கலந்து கொண்டார்கள்.


யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம்

ஆலயத்திற்குச் செல்கின்ற பொதுமக்களின் வசதிக்காக யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்து போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. எனினும் அங்கு எவரும் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பத்தொன்பது வருடங்களின் பின்னர் பொதுமக்கள் சென்று வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ள இந்த ஆலயம் பெரும் அழிவுக்கு உள்ளாகியிருந்ததாகவும் தற்போது அது புனரமைக்கப்பட்டு வருவதாகவும், ஆலய கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் ஆதீனகர்த்தா நகுலேஸ்வரக் குருக்கள் தெரிவித்திருக்கின்றார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter