>> Saturday, December 26, 2009
2005 இல் எடுத்த முடிவே இன்றைய தமிழரின் மோசமான நிலைக்கு காரணம் என்கிறார் இரா. சம்பந்தன்
இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தான் விடுதலைப்புலிகளிடம் நீண்ட நேரம் வாதிட்டதாகக் கூறும் இரா. சம்பந்தன், அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காவிட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம் என்றும், மக்களின் வாழ்விலும் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினார்.
இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கின்ற போது இந்த விடயத்தை எல்லாரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களைச் சந்தித்து பல விடயங்கள் குறித்து ஆராய்ந்துவருவதாக கூறிய இரா. சம்பந்தன் அவர்கள், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தாம் இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றும் கூறினார்.
--------------------------------------------------------------------------------
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 32 பேர் விடுதலை
புனர்வாழ்வு நிலையத்தில் சில முன்னாள் சிறார் போராளிகள்
இலங்கையின் வடக்கே சிறுவர் போராளிகளாக இருந்தவர்களில் 32 பேர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்காக விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்தத் தகவலை, சிறுவர் புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்கா தெரிவித்திருக்கின்றார். வவுனியா பூந்தோட்டம் பகுதியில் செயற்பட்டு வருகின்ற சிறுவர் போராளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் இவர்களுக்குப் புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புனர்வாழ்வு நிலையத்தை ஒரு தடுப்பு முகாமாகத் தாங்கள் கருதவில்லை என்றும், அது ஒரு பாடசாலையாகவே இயங்கி வருகின்றது என்றும் விடுதலை பெற்றுள்ள சிறுவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கல்வி கற்பதற்கும், தொழில் பயிற்சி பெறுவதற்கும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இங்கு வாய்ப்புக்கள் அளிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.
இந்தச் சிறுவர்களின் விடுதலை குறித்து கருத்து வெளியிட்ட அவர்களின் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க அவர்கள், எஞ்சியுள்ள சிறுவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
புத்துயிர் பெறும் அறமைக் மொழி
அறமைக் - இயேசுக் கிறிஸ்து பேசிய மொழியிது. சிரியாவில் உள்ள கிறிஸ்தவ சமூகத்திரின் மத்தியில் மாத்திரம் பேசப்படுகின்ற இந்த மொழி அண்மைக்காலத்தில் எழுச்சி பெற்றதாக உணரப்படுகின்றது.
சிரியாவில் இருக்கின்ற மூன்று கிராமங்களில் உள்ள குடும்பங்களால் மாத்திரமே இந்த மொழி தற்போது பேசப்படுகின்றது. அதில் ஒரு கிராமம் மலோவ்லா.
இந்த அறமைக் மொழியைப் அழியவிடாமல் காப்பாற்றி பிறந்தது முதலே இந்த மொழியைக் கற்று அதில் பேசிவருகின்ற சுமார் பதினையாயிரம் பேரில் ஒருவர் ஜோர்ஜ் றிஷ்கலா. இந்த மொழியை அதன் எழுத்து வடிவத்தில் கற்பிப்பதை அவர் ஊக்குவிக்கிறார்.
ஆண்டவரே தனது மக்களுக்கான போதனைகளை அறமைக் மொழியில்தான் நிகழ்த்தியுள்ளார் என்றும் தான் சிலுவையில் அறையப் பட்ட போது இறுதியாக அவர் பேசியதும் இந்த மொழியில்தான் என்றும் றிஷ்கலா கூறுகிறார்.
அறமைக் மொழியை எழுதப், படிக்கக் கற்பிப்பதற்காக ரிஷ்கலா மூன்று வருடங்களுக்கு முன்னதாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார்.அவரால் நடத்தப்படும் ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 100 மாணவர்கள் கற்கிறார்கள்.
சிரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பல நூற்றாண்டுகளாக அருகருகே வாழ்ந்துவருகிறார்கள். ஒருவர் மற்றவரது மத நிகழ்வுகளை கொண்டாடுவதும் வழக்கம்.
அந்த வகையில் விவிலிய காலத்து மொழியான அறமைக்கின் புத்துயிர்ப்பும் இந்த நாட்டின் வரலாற்றுச் செழுமையில் மேலும் ஒரு படிமமாக அமையும்.
0 comments:
Post a Comment