>> Friday, December 11, 2009
புதிய தெலுங்கானா மாநிலம் உருவாகிறது
புதிய மாநிலம் கேட்டு போராடியவர்கள்
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து புதிய மாநிலம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பல நாட்கள் தொடர்ந்த வன்செயல் மிகுந்த போராட்டங்களை அடுத்து, தெலுங்கானா என்ற புதிய மாநிலத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆந்திரபிரதேசத்தின் 10 வடமாவட்டங்களை உள்ளடக்கி உருவாக்கப்படவுள்ள இந்த மாநிலத்தில் மூன்றரைக் கோடி மக்கள் இருப்பார்கள்.
இந்த முடிவு அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கு ஆதரவானவர்கள் பட்டாசுக்களை வெடித்து, தலைநகர் ஹைதராபாத்தில் நடனமாடிக் கொண்டாடினார்கள்.
அதேவேளை, புதிய மாநிலம் ஏற்படுத்தப்படுவதை கண்டித்து ஆந்திர மாநிலத்தின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை துறப்பதாக அறிவித்துள்ளனர்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்
இலங்கை சிறைச்சாலைச்சாலைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி; வவுனியாவில் இன்று அமைதிப்பேரணி நடைபெற்றுள்ளது.
உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்தப்பேரணி நடந்தது.
அரசியல் கைதிகளின் உறவினர்கள் பாதுகாவலர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தப் பேரணி வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணையக அலுவலகத்தின் எதிரில் இருந்து ஆரம்பமாகி வவுனியா அரச செயலகத்தில் சென்று முடிவடைந்தது.
மனித உரிமைகள் அமைச்சருக்கு எழுதப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்களினால் மனித உரிமைகள் ஆணையகத்தின் வவுனியா அலுவலக அதிகாரிகள், வவுனியா அரச செயலக அதிகாரிகள் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
பேரணியில் கலந்து கொண்டவர்களைச் சந்தித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சட்டமா அதிபர் அலுவலகத்தில் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------
இந்தியாவில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது குறித்து பரிசீலிக்கக் கோரிக்கை
கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பாலியல் தொழிலாளி
இந்தியாவில் பாலியல் தொழிலை பலனளிக்கும் வகையில் தடைசெய்ய அரசாங்கத்தால் இயலவில்லை என்கிற ஓர் நிலையில், பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது பற்றி இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கினால் அது பாலியல் தொழிலாளிகளுக்கு புனர்வாழ்வு கிடைக்க உதவும் என்றும், பெண்கள் பாலியல் தொழிலுக்காக சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தவிர்க்க உதவும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியாவில் சிறுமி ஒருத்தி பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசு சாரா உதவி அமைப்பு ஒன்று தொடுத்திருந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விபச்சாரம் சட்டப்படி குற்றமென்றாலும், இந்தியாவெங்கும் பாலியல் தொழில் வெகுவாக நடந்துவரவே செய்கிறது.
0 comments:
Post a Comment