>> Thursday, December 3, 2009
கூடுதலான அமெரிக்க துருப்புக்களை எதிர்ப்போம்:தாலிபான்கள்
தாலிபான் போராளி ஒருவர்
ஆப்கானுக்கு கூடுதலாக 30 ஆயிரம் படையினரை அனுப்புவது என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முடிவு, தங்களின் எதிர்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று ஆப்கானில் உள்ள தாலிபான்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் போர் உக்திகள் வெற்றி பெறாது என்றும், இது வெளிநாட்டுத் துருப்புக்கள் மத்தியில் அதிக அளவில் உயிர் இழப்பைத்தான் ஏற்படுத்தும் என்றும் தாலிபான்கள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளனர்.
தாலிபான்களால் வெல்ல முடியாது என்ற செய்தியை வலுவாக எடுத்துக் கூறவும், கிளர்சியை விட்டு கௌரவமான வழியில் வெளியேற அவர்களுக்கு ஒரு பாதையை அமைக்கவும் தான் கூடுதலாக கொடுக்கப்படும் வளங்களை பயன்படுத்த விரும்புவதாக ஆப்கானில் உள்ள அமெரிக்க மற்றும் நெட்டோ நேசப் படைகளின் தளபதியான ஜெனரல் ஸ்டான்லி மெக்கிரிஸ்டல் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------
18 மாதங்களில் நாட்டின் பாதுகாப்பை பொறுப்பேற்க முடியும் என்கிறார் ஆப்கானின் வெளியுறவு அமைச்சர்
ஆப்கானில் இருக்கும் அமெரிக்க படையினர்
சர்வதேச உதவியுடன், ஆப்கன் ராணுவப்படைகள் நாட்டின் பாதுகாப்புக்கு 18மாதங்களில் பொறுப்பேற்றுக்கொள்ளத் தொடங்க முடியும் என்று ஆப்கன் வெளியுறவு அமைச்சர் ரங்கின் டட்பார் ஸ்பண்டா கூறியுள்ளார்.
ஆயினும், அண்டை நாடான பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள், இந்த திட்டமிடப்பட்ட துருப்பு அதிகரிப்பு அதன் எல்லைகளுக்குள் ஒரு மோசமான விளைவையே ஏற்படுத்தும் என்ற தமது கவலையை மீண்டும் வெளியிட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, நேட்டோவின் தலைவர், ஆண்டர்ஸ் பாக் ராஸ்முசென், கூட்டணியின் உறுப்பு நாடுகளும் அதன் கூட்டாளிகளும் 2010ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு குறைந்தது 5000 கூடுதல் படையினரை அனுப்பப்போவதாகக் கூறியிருக்கிறார்.
--------------------------------------------------------------------------------
போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு
போராடும் ஆர்வலர்கள்
1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி இரவு, இந்தியாவின் போபால் நகரில் இருந்த அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட் ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவில் பலர் இறந்தனர்.
இந்தச் சம்பவம் இடம் பெற்று 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான முழுமையான நிவாரணம் இன்னமும் கிடைக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களின் சம்மதம் இல்லாமலேயே இந்திய அரசு யூனியன் கார்பைட் நிறுவனத்துடன் இழப்பீட்டுக்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
இது தொடர்பில் போபால் விஷவாயு கசிவுச் சமபவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல ஆண்டுகளாக குரல் கொடுத்துவரும் ஜென்னி டாலி அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறி வருவது ஏன்?
தங்கக் கட்டிகள்
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதுவும் கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
தங்கத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பதும், அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதுமே தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் என்று சென்னை பொருளாதாரப் பள்ளியின் முன்னாள் இயக்குநர் டாகட்ர் யூ ஷங்கர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் துவங்கிய உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்களிடையே தங்கத்தின் முதலீடு செய்வது என்பது பாதுகாப்பானது என்கிற எண்ணமும் தங்கத்தின் தேவையை உயர்த்தியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
அமெரிக்காவின் ஏற்றுமதியை விட இறக்குமதியின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதாலேயே அமெரிக்க டாலரின் வீழ்ச்சிக்கான காரணமாகவும் அமைந்துள்ளது என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
இன்னும் பத்தாண்டுகளுக்கு டாலரின் மதிப்பு உயருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
இதே வேளை சீனாவின் ஏற்றுமதி மிக அதிக அளவில் இருப்பதாகவும், அவர்களிடம் இருக்கும் இரண்டாயிரம் பில்லியன் டாலர்கள் அளவுக்கான கையிருப்பை இதுவரை அமெரிக்க அரசின் முதலீடுகளில் செய்து வந்ததாகவும், அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு அந்த பணத்தில் தங்கம் வாங்க முன்வந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டுக்கிறார்.
டாலருக்கு மாற்றாக வேறு ஒரு நாணயம் இன்னமும் உலகளவில் ஏற்றுக் கொள்ளாத நிலை இருப்பதாலும், சர்வதேச வர்த்தகம் இன்னமும் டாலரிலேயே செய்யப்பட்டு வருவதாலும் தங்கம் ஒரு பாதுகாப்பான வைப்பாக கருதப்படுகிறது என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
0 comments:
Post a Comment