>> Saturday, December 5, 2009

தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது: இந்திய வெளியுறவு அமைச்சர்

இலங்கை அரசு 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் நிலை தொடர்பாக இந்திய நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

13-வது அரசியல் சட்டத் திருத்தம் தொடர்பாக இலங்கை அரசுக்கு சில ஆட்சேபங்கள் இருந்தாலும், அந்தச் சட்டத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது என்றும், 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தையும் தாண்டி தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கூறினார்..

தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு இலங்கை அரசுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பதாக எம்.பி.க்கள் கூறிய குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கிருஷ்ணா, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இலங்கைக்கு இந்திய அரசு கொடுத்த நிதியை இலங்கை அரசு பயன்படுத்துவதைக் கண்காணிக்க வழிகாட்டு முறைகள் உள்ளதாகவும், ஐநா. மன்ற அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் மூலமாகவும் கண்காணித்து வருவதாகவும் அமைசச்ர் கிருஷ்ணா தெரிவித்தார்.

இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.

மேலும், எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டபடி, இலங்கைக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அனுப்புவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்தார்.



--------------------------------------------------------------------------------


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரத் ஃபொன்சேகாவை சந்திக்கலாம்: இரா.சம்பந்தர்


அண்மையில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்திருந்தார் இரா.சம்பந்தர்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், தேர்தலில் தாம் யாரை ஆதரிக்கப்போகிறோம் என்பதை பல கட்சிகள் அறிவித்துவிட்டாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது பற்றிய ஒரு நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த புதன் கிழமையன்று இலங்கை ஜனாதிபதியையும் பின்னர் ஐக்கிய தேசியக் கூட்டணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் சந்தித்துப் பேசியுள்ளார்.

தேவைப்பட்டால் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்நிறுத்தப்படும் ஜெனரல் ஃபொன்சேகா அவர்களையும் தாங்கள் சந்திக்க வாய்ப்புண்டு என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன என்றும் சம்பந்தர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடந்த சந்திப்பின்போது தாம் தற்போதைய அரசியல் சூழல் பற்றி பேசவில்லை என்றும், தமிழர்களின் பல்வேறு பிரச்சனைகளை அவரிடம் பேசியதாகவும் சம்பந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்பந்தர் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


இலங்கையில் யுத்தத்தின் பின்னர் 2500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக புகார்கள் வந்துள்ளன



இலங்கையில் கடந்த மே மாதம் முடிவுக்குவந்த யுத்தத்தின் பின்னர் இரண்டாயிரத்து ஐநூறு பேர் வரை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து வந்த சமயத்தில் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டவர்கள், அரசாங்கத்தால் நடத்தப்படும் முகாம்களில் இருந்த சமயத்தில் காணாமல் போனவர்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.

உறவினர் கொடுத்த புகார் மனுக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருவதாக காணாமல் போனோரைத் தேடியறியும் குழு என்ற அமைப்பு தெரிவிக்கின்றது.

இந்த அமைப்பின் பிரதிநிதி மகேந்திரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


உல்ஃபா அமைப்பினரை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது வங்கதேசம்



இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரை வங்கதேசம் கைதுசெய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

ஆங்கிலத்தில் சுருக்கமாக உல்ஃபா என்றழைக்கப்படும் அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரான அரபிந்த ராஜ்கோவாவை சென்ற வாரம் கைது செய்துள்ள வங்கதேச பாதுகாப்புப் படையினர் தற்போது அவரை இந்திய எல்லைக் காவல் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வர ராஜ்கோவா ஆர்வமாக உள்ளார் என்று தெரிகிறது. உல்ஃபா அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது, உல்ஃபா அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதோ என்ற ஊகங்களும் சந்தேகங்களும் எழ வழிவகுத்துள்ளது.

ஆனால் அஸ்ஸாமின் இறையாண்மை குறித்து விவாதிக்க இந்தியா தயாராக இல்லாதவரை அரசாங்கத்துடன் பேசுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இதுவரை கைதாகாமல் தப்பிவரும் உல்ஃபா அமைப்பின் இராணுவப் பிரிவு கடும்போக்குத் தலைவரான பரேஷ் பரூவா பிபிசிடம் தொலைபேசி ஊடாகத் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாத தொடக்கத்திலும் உல்ஃபா அமைப்பின் இரண்டு முக்கியப் பிரமுகர்களை வங்கதேசம் இந்தியாவிடம் ஒப்படைத்திருந்தது.

வங்கதேசத்திலிருந்து செயல்படும் இஸ்லாமிய கடும்போக்காளர்கள் மற்றும் இந்தியப் பிரிவினைவாதிகள் மீது வங்கதேசத்தின் அவாமி லீக் அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.



--------------------------------------------------------------------------------


பருவநிலை மாற்றத்தால் நெல் விளைச்சல் பாதிக்கப்படுமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை



பருவநிலை மாற்றத்தால், தெற்காசிய மக்களின்- அதிலும் குறிப்பாக தமிழர்களின் - பிரதான உணவு தானியமான நெற்பயிரின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் தற்போதைய நிலையில் சராசரியாக இரண்டரை முதல் ஐந்து டன் வரை நெல் விளைகிறது. ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக வேகமாக புவி வெப்படைந்துவருவதால், அடுத்த பத்து ஆண்டுகளில், அதாவது 2020ஆம் ஆண்டுக்குள் தற்போதைய நெல் விளைச்சலில் பதினைந்து முதல் இருபது சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என்று வேளாண் விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

அதைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் இருக்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அத்தகைய ஆராய்ச்சியை செய்துவருகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter