>> Friday, March 5, 2010

இந்தியாவில் கோயில் நெரிசலில் சிக்கி பலர் பலி
வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் உயிரிழந்துவிட்டார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் கிருபாலு மகராஜ் ஆஸ்ரம வளாகத்தில் உள்ள ராம் ஜானகி கோயிலில் இந்த விபத்து ஏற்பட்டது. 37 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் உள்பட 63 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அலகாபாத் நகருக்கு அருகே உள்ள அந்தக் கோயிலில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். அங்கு வழங்கப்பட்ட இலவச உணவு மற்றும் உடைகளைப் பெறுவதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற முயன்றார்கள். அப்போது, நுழைவு வாயில் கதவு தகர்ந்து விழுந்தது. இரும்பினாலான அந்தக் கதவு, அப்போதுதான் நிர்மாணிக்கப்பட்டு வந்தது.
ஒருவர் மேல் ஒருவர் தடுமாறி விழுந்த நிலையில், பின்புறம் இருந்து கூட்டத்தினர் தொடர்ந்து நெருக்கிக் கொண்டே இருந்ததால் கீழே விழுந்தவர்களால் எழ முடியாமல் போனதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைக்கவில்லை என்றும், அருகிலுள்ள நகரங்களில் இருந்து மருத்துவ மற்றும் நிவாரணக் குழுவினர் வந்து சேர சிறிது கால தாமதம் ஏற்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கோயில் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மற்றும் ஹிமாசலப் பிரதேசத்தில் இந்துக் கோயில்களில் ஏற்பட்ட நெரிசலில் 300 பேர் கொல்லப்பட்டார்கள். இதுபோன்ற மேலும் பல சம்பவங்கள் நடந்துள்ளன.
நித்தியானந்தா விவகாரம் தொடர்கிறது
மக்கள் எதிர்ப்பு
தென்னிந்தியாவில் பிரபலமான சாமியாராக கூறப்படுகின்ற நித்தியானந்தா என்பவர் ஒரு பெண்ணுடன் படுக்கையறையில் இருப்பதாக காண்பிப்பதாகக் கூறப்படும் காட்சியைக் கொண்ட ஒரு வீடியோவை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவர்களையும், பக்தி என்ற பெயரில் பாமர மக்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுவர்களை கண்டு தங்கள் அரசு சும்மா இருக்காது என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் அருவருக்கத்தக்க காட்சிகளை வெளியிடுவதில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், சமூகத்தை ஊடகம் மேலும் சீரழித்து விட கூடாது என்றும் கேட்டு கொண்டுள்ளார்.
இவ்வாறு சாமியார்கள் பிரபலமாக இருப்பதற்கு என்ன காரணம் என்று பண்பாட்டு ஆய்வாளரான டாக்டர் பரமசிவம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, வைஷ்ணவ, சிவ மடங்கள் சொத்துக்களை காப்பாற்றுவதிலேயே குறியாக இருப்பதாகவும், இதனால் சாமியார்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டதாகவும், மத்திய மற்றும் உயர்தட்டு மக்களிடையே இருக்கும் நுகர்வு வெறியின் ஒரு பகுதியாகவும் இதனை பார்க்கலாம் என்றும் கூறினார். மேலும் ஊடகங்களும் இதில் பெரும் பங்காற்றுவதாகவும், அவர்கள் ஒரே வாரத்தில் ஒரு நபரை உலக மகா சாமியார் என்று பறைசாற்றுவதாகவும், பின்னர் மூன்றே நாட்களில் அதே நபரை பெண் பித்தன் என்று காட்டுவதும் அவர் குறிப்பிட்டார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
சட்ட விரோதமாக ஆஸ்திரேலிய செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் கைது
மட்டக்களப்பு
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகருக்கு அண்மையிலுள்ள நாவலடி கடலோரக் கிராமத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சட்ட விரோத பயணத்திற்கு தயாராகவிருந்ததாகக் கூறப்படும் 21 பேர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்திலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இப்பயணத்தின் நிமித்தம் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இந்நபர்கள் மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என பொலிசார் கூறுகின்றனர்.
தகவலொன்றின் பேரில் பொலிசாரும் இராணுவத்தினரும்இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையொன்றின் போது இந்நபர்களை கைது செய்ததாகவும், அந்த இடத்தில் வாகனமொன்றும், திசை காட்டும் கருவி, கடல் பயணத்திற்கான வரைபடம் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவிக்கின்றார்.
இந்நபர்கள் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter