>> Wednesday, March 3, 2010

நாகா பிரிவினைவாதிகள் இந்தியப் பிரதமரைச் சந்தித்தனர்
இந்தியாவின் வடகிழக்கே பல ஆண்டுகளாக தனி நாகா கோரி போராடிவந்த நாகா கிளர்ச்சிக்குழுவின் தலைவர் துய்ங்கலெங் முய்வா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியுள்ளார்.
12 ஆண்டுகளாக மெதுவாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தேசிய சோஸலிச நாகலாந்து கவுன்சில் தனது பிரிவினைவாதக் கோரிக்கையை கைவிட்டுள்ளதாக தெரிகிறது.
நாகாலாந்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் தமது அமைப்பு உறுதியாக இருப்பதாக முய்வா தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பினைத் தொடர்ந்து துய்ங்கலெங் முய்வா தலைமையிலான குழுவினர் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இது பற்றிய மேலதிக தகவல்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
‘’துணிச்சல் மிக்கப் பெண்’’ இலங்கை முஸ்லிம் பெண்ணுக்கு சர்வதேச விருது
மொகமட் மஜீத் ஜென்சிலா இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளராகப் புத்தளம் பகுதியில் பணியாற்றி வரும் மொகமட் மஜீத் ஜென்சிலா அவர்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மகளிருக்கான உயர் விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
சர்வதேச மட்டத்தில் தலைமைத்துவம், பெண்ணுரிமை, பெண்களின் முன்னேற்றத்திற்காகத் துணிவுடன் சிறப்பாகப் பணியாற்றிய பெண்கள் பத்துப் பேர் இந்த விருதுக்காக வருடந்தோறும் தெரிவு செய்யப்படுகின்றார்கள். இந்த வருடம் இந்த விருது இலங்கைப் பெண்ணுக்கும் கிடைத்திருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான், சைப்பிரஸ், டொமினிக்கன் குடியரசு, இரான், கென்யா, கொரியா, சிரியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் 9 பேரும் இந்த விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். சர்வதேச மட்டத்திலான இந்த விருது கிடைத்தமை குறித்து பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகத் தெரிவித்த ஜென்சிலா அவர்கள், சமூக நம்பிக்கை நிதியம் என்ற நிறுவனத்தைக் கடந்த 7 வருடங்களாக நடத்தி வருவதாகக் கூறுகின்றார்.
இவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர். விடுதலைப்புலிகளினால் முஸ்லிம் மக்கள் வடபகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது ஜென்சிலாவின் குடும்பமும் இடம்பெயர்ந்து புத்தளத்தில் தஞ்சமடைந்திருந்தது.
சந்திரனில் பெருமளவு உறைபனி கண்டுபிடிப்பு
சந்திரயாண் 1இந்தியாவின் சந்திரனுக்கான விண்கலப்பயணமான சந்திர யாண் விண்கலத்தில் அனுப்பப்பட்ட அமெரிக்காவின் ஆய்வுக் கலம் சந்திரனில் தண்ணீர் இருப்பதை ஏற்கெனவே உறுதி செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கழகமான நாசாவால் அனுப்பபட்ட மற்றொரு விண் ஆய்வுக்கலம், தற்போது நிலவின் வடதுருவப் பிரதேசத்தில் ஏராளமான உறைபனி இருப்பதை உறுதி செய்திருக்கிறது.
டெக்சாஸில் நடந்த விண்கோள் அறிவியல் மாநாட்டில் இந்த புதிய கண்டுபிடிப்பை அறிவித்த நாசா விஞ்ஞானிகள், நிலவின் வடதுருவத்தில் இருக்கும் மிகப்பெரும்பள்ளங்களில் நீராக இருந்து உறைபனியாக மாறிய உறை பனிப்படிமங்களை தங்களின் சமீபத்திய ஆய்வு கண்டறிந்திருப்பதாக அறிவித்தனர்.
சில பள்ளங்களில் இருக்கும் உறைபனிப்பாறைகள் இரண்டு முதல் 15 கிலோமீட்டர் விட்டம் கொண்டதாக இருப்பதாகவும், இந்த பனிப்பாறைகளின் அடர்த்தி என்பது பல மீட்டர்களாக இருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.
இந்த உறைபனியின் மொத்த அளவு குறைந்தது 600 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருக்கும் என்று கூறிய ஹஸ்டனில் இருக்கும் நிலவு மற்றும் விண்கோள் ஆய்வு மையத்தைச்சேர்ந்த முனைவர் பால் ஸ்புடிஸ் அவர்கள்,இந்த உறைபனியில் இருக்கும் நீரின் மூலக்கூறுகளை ராக் கெட்டுக்கான எரிபொருளாக பயன்படுத்தினால், பூமிக்கும் நிலவுக்கும் இடையில் 2200 ஆண்டுகளுக்கு தினமும் ஒரு விண்ஓடத்தை இயக்க முடியும் என்றும் கூறினார்.
இத்தகைய பெருமளவான உறைபனி நிலவில் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதன் மூலம், நிலவுக்குள் இருக்கும் இயற்கை வளங் களை கொண்டு மனிதன் தொடர்ந்து அங்கே வசிப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter