>> Friday, March 12, 2010

சரத் பொன்சேகாவை விசாரிக்க இரண்டு இராணுவ நீதிமன்றங்கள்
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா அவர்கள் இரண்டு இராணுவ நீதிமன்றங்களை எதிர்கொள்ளவுள்ளார்.
அவற்றின் நீதிபதியாக ஒரு ரியர் அட்மிரல் இருப்பார். அவருக்கு துணையாக மூன்று மேஜர் ஜெனரல்கள் செயற்படுவார்கள்.
சீருடையில் இருந்தபோதே அவர் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டதாகக் கூறும் மூன்று குற்றச்சாட்டுக்களை ஒரு நீதிமன்றம் விசாரிக்கும்.
இராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பில் அவர் விதிகளை மீறியதாக கூறுப்படும் 4 குற்றச்சாட்டுக்களை மற்றொரு நீதிமன்றம் விசாரிக்கும்.
சரத்பொன்சேகா அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அவர் மீது சுமத்தப்படும்.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் முழுமையான விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. அத்துடன் அவர் மீதான விசாரணைகள் மூடிய அறையில் வெளியாருக்கு அனுமதி இல்லாத நிலையில் நடத்தப்படும்.
தான் எந்தவிதமான தவறையும் செய்யவில்லை என்று சரத் பொன்சேகா கூறிவருகிறார்.
சட்டத்தரணிகளை அமர்த்திக் கொள்ள அனுமதி
சொந்த்ட சட்டத்தரணிகளை வைத்துக் கொள்ள சரத் பொன்சேகாவுக்கு அனுமதிஇந்த வழக்குகளில் பொன்சேகா அவர்கள் தனது சொந்த சட்டத்தரணிகள் மூலம் வாதாடலாம் என்றும், விசாரணைகளின் குற்றவாளியாக அவர் காணப்படும் பட்சத்தில், அதனிலும் உயரிய சிவில் நீதிமன்றத்தில் அவர் மேன்முறையீடு செய்யவும் முடியும் என்றும் இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்லவர் பிபிசியிடம் கூறினார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகள் வெகுவிரைவில் முடிந்துவிடும் என்றும் அவர் கூறினார்.
இந்த விசாரணைகளின் முடிவுகள் சரத் பொன்சேகாவுக்கு எதிராக போகும் பட்சத்தில் ஏப்ரலில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியுமா என்பது தெரியவில்லை.
ஆனால், அவர் தேர்தல் பிரச்சார காலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அரசியல் நோக்கம் கொண்ட ஒரு செயல் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
ஒரு இராணுவ சதிப்புரட்சிக்கு திட்டமிட்டதாகவும், ஜனாதிபதி ராஜபக்ஷவை படுகொலை செய்ய முயற்சித்ததாகவும், சரத் பொன்சேகா மீது மூத்த அதிகாரிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டுகிறார்கள். அவருக்கு எதிராக சிவில் நீதிமன்ற வழக்கும் காத்திருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அதனை நிராகரித்துள்ள அவர், இன்றுவரை இராணுவ புலன் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க கோபத்துடன் மறுத்து வருகிறார்.
அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், ஏப்ரல் கடைசியில்தான் அடுத்த விசாரணைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்ப அழைப்பு
நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் நாடு திரும்ப வேண்டும் என அழைப்புஊடகவியலாளர்களை பாதுகாக்க அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு குழுவின் பிரதிநிதிகள் இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். அங்கு அவர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் அரச தரப்பினரை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்புகளுக்கு பிறகு அரசின் தலைமை வழக்கறிஞரான மோஹன் பீரீஸ் அரசுக்கு ஊடகவியலாளர்கள் தேவை என்றும், இலங்கையைவிட்டு வெளியேறி நாடுகடந்த நிலையில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர்கள் நாட்டுக்கு மீண்டும் வந்து பரஸ்பர மரியாதையுடன் இருக்கும் ஒரு சூழலில் வேலை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாகவும், கொழும்பு சென்றுள்ள ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
அப்படியாக நாடுகடந்த நிலையில் வாழும் இலங்கை ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்பினால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்கும் என்று தமது தரப்பிலிருந்து ஒரு உத்திரவாதம் இருக்க வேண்டும் எனவும் மோஹன் பீரீஸ் தெரிவித்ததாகவும் அந்தக் குழுவினர் கூறுகிறார்கள்.
தொடர்ந்தும் பயத்தில் ஊடகவியலாளர்கள்
கடந்த ஆண்டு கொல்லப்பட்ட லசந்த விக்ரமதுங்கவுக்கு அஞ்சலிஇலங்கையில் ஊடகத்துறையினர் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதை முன்னர் இலங்கை அரசு மறுத்துவந்துள்ளது.
கடந்த ஆண்டு அங்கு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டது தொடர்பில் ஆறு இராணுவத்தினரை தாங்கள் தடுத்து வைத்துள்ளதாக இலங்கை அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.
ஆனாலும் ஊடக்த்துறை தொடர்பான செயற்பாட்டுக் குழுக்களால் நடத்தப்படும் மதிப்பீடுகளில் மிகவும் குறைந்த மதிபெண்களே பெறுகின்றன. எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாகக் கூறப்படும் ஒரு ஊடகவியலாளர் மாயமான முறையில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனார்.
அவரை இலங்கை அரசைத் தவர வேறு யாரும் கடத்தியிருக்க முடியும் என்று தான் கருதவில்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார். ஆனால் விளம்பரம் தேடும் நோக்கில் அவர் எங்காவது மறைந்திருக்கலாம் என்று அரசு கூறுகிறது.
அப்படி காணாமல் போன அந்த ஊடகவியலாளர் பணி செயத நிறுவனத்தின் ஆசிரியர் தற்போது நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படியான சூழலில் நாடுகடந்த நிலையில் வாழும் ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்பி பாதுகாப்பான சூழலில் பணியாற்ற வேண்டும் என்றால், அவர்கள் இலங்கை அரசிடமிருந்து உறுதியான வார்த்தைகள் மட்டுமல்ல செயற்பாடுகளையும் எதிர்பார்பார்கள்.
இலங்கையின் கிழக்கு பல்கலைகழகத்தின் மாணவர் பேரவை கலைப்பு
பதவி விலகியுள்ள துணை வேந்தர் பத்மநாதன்இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி என் பத்மநாதன் தனது பதவியலிருந்து ராஜனாமா செய்துள்ளதையடுத்து மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை இன்றுடன் கலைக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே மாணவர் பேரவை பிரதிநிதிகளாக அங்கம் வகித்தவர்கள் உட்பட சில மாணவர்கள் நேற்று துணை வேந்தரை சந்தித்து பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகவும்
இதன் காரணமாகவே அவர் பதவி விலகியதாகவும் கூறப்படும் நிலையிலேயே பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவையும் கலைக்கப்பட்டுள்ளது
துனை வேந்தர் பதவி விலக வேண்டும் என குறிப்பிபட்ட மாணவர் பேரவை பிரதிநிதிகளால் கொடுக்கப்டப்ட அழுத்தத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என அநேகமான மாணவர்கள் இன்று எழுத்து மூலம் பல்கலைக்கழ நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளனர்
அநேகமான மாணவர்களின் வேண்டுகோளின் பேரிலேர்யே பல்கலைக்கழக மாணவர் பேரவை கலைக்க தீர்மானிக்கப்பட்டதாக பதில் துணை வேந்தர் கலாநிதி கே பிரேம்குமார் கூறுகின்றார்
உலகக் கோப்பை ஹாக்கி-இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி தகுதி
உலகக் கோப்பை ஹாக்கி இறுதி ஆட்டம் வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளதுஉலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஜெர்மனி தகுதி பெற்றுள்ளது. இன்று மாலை இடம் பெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி இங்கிலாந்து அணியை 4-1 என்கிற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
புதுடில்லியில் நடைபெற்று வரும் ஆடவர்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆட்டத்தின் முதல் 11 நிமிடங்களிலேயே ஜெர்மனி இரண்டு கோல்களை போட்டு போட்டியை தன்வசப்படுத்திக் கொண்டது. அந்த அணியின் சார்பில் யான் மார்கோ மோட்டங்கும் ஆலிவர் கார்ணும் இந்த முதல் இரு கோல்களைப் போட்டனர்.
இங்கிலாந்து அணியின் சார்பில் போடப்பட்ட ஒரே கோலை ரிச்சர்ட் ஸ்மித் அடித்தார்.
கடைசி இடத்தில் பாகிஸ்தான் அணி
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானுக்கு கடைசியிடம்இதனிடையே இதுவரை இல்லாத வகையில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி இடைத்தை பெற்றுள்ளது. போட்டியில் பங்குபெற்ற 12 அணிகளில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது. கடைசி இடத்துக்கான போட்டியில் கனடா நாட்டு அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இதையடுத்து பாகிஸ்தான் அணியின் அனைத்து வீரர்களுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று தேசிய அணியிலிருந்து விலகியுள்ளனர். அந்நாட்டு அணியின் தேர்வுக் குழுவினரையும் அணியின் நிர்வாகக் குழுவினரையும் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் கடைசி இடத்தை தமது அணி பெற்றுள்ளது வெட்கக்கேடான ஒரு விடயம் என பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவரான காசிம் ஜியா கருத்து வெளியிட்டுள்ளார்.
தமது அணியின் தோல்வி குறித்து முழுமையான ஒரு விசாரணை நடைபெறும் எனவும் காசிம் ஜியா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து நாட்டு அணிகள் மோதுகின்றன.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter