>> Wednesday, July 10, 2013

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் நீக்கம்

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்த மைக்கேல் நாப்ஸ் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஹாக்கி அணியுடன் மைக்கேல் நாப்ஸ்-லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது
தொடர்ச்சியாக இந்திய அணியின் தோல்விமுகம் மற்றும் மோசமான ஆட்டம் காரணமாகவே அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மைக்கேல் நாப்ஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.
எனினும் அவர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆனாலும் அணி எந்த வகையிலும் முன்னேறவில்லை என்பதாலேயே அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு அவர் பதவி நீக்கப்பட்டதாக இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை நிர்வகிக்கும் ஹாக்கி இந்தியா அமைப்பின் செயலர் நரீந்தர் பத்ரா கூறியுள்ளார்.
இந்தியாவின் விளையாட்டு ஆணையம் ஹாக்கி அணியின் செயல்பாடு குறித்து விவாதிக்க நடத்திய ஒரு ஆய்வுக் கூட்டத்திலேயே அணிக்கு புதிய பயிற்சியாளர் தேவை என்கிற முடிவு எட்டப்பட்டதாகவும் பத்ரா கூறுகிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு, 80 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தியா தகுதி பெறாத நிலையிலிருந்து, அடுத்து நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அணியை தகுதி பெறச் செய்தது அவரது ஒரு சாதனை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது

இந்திய ஹாக்கி: தொடரும் தோல்விகள்

இந்தியாவில் ஹாக்கியின் எதிர்காலம் குறித்து கேள்விக்குறிகள்
எனினும் மைக்கேல் நாப்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த சூழலில், கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது, பங்குபெற்ற 12 அணிகளில் கடைசி இடத்தையே பெற்றது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
அதன் பிறகும் இந்திய ஹாக்கி அணியின் தோல்விமுகம் தொடந்து கொண்டே இருந்தது.
தோல்விமேல் தோல்வி கண்டு வரும் இந்திய ஹாக்கி அணி கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டிகளிலும் கடைசி இடத்தையே பெற முடிந்தது.
மைக்கேல் நாப்ஸ் பதவி விலக்கப்பட்டுள்ளதை அடுத்து, அணியின் திறமை மேம்பாட்டுக்கு பொறுப்பாக இருக்கும் நெதர்லாந்து நாட்டின் முன்னாள் ரோலன் அல்ட்மான்ஸ், வேறு ஒரு வெளிநாட்டு பயிற்சியாளர் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு போட்டி அமைப்புகளாக இந்திய ஹாக்கி சம்மேளனம் மற்றும் ஹாக்கி ஆகியவற்றிடையே தொடர்ந்து சிக்கித் தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது தவிர அணியின் பயிற்சியாளாரை நீக்கிவிட்டால் அணி வெற்றிகளை பெற்றுவிடுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter