>> Wednesday, July 10, 2013

"13ஐத் தாண்டிய தீர்வுத் திட்டத்தை இலங்கை முன்னெடுக்க வேண்டும்"

இலங்கை அரசியல் யாப்பின் 13ஆவது சட்டத் திருத்தத்தின் கீழான அதிகாரப் பகிர்ந்தளிப்பையும் தாண்டிய அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்படுவது தொடர்பில் இந்திய அரசாங்கத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் மதித்து நடத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
தவிர இலங்கையின் வட மாகாண சபைக்கு தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும், நம்பத்தகுந்த விதத்திலும் நடத்தப்பட வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இலங்கை தலைவர்களிடம் இவற்றைத் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் உட்பட இலங்கையின் அனைத்து சமூகத்தவரும் சமத்துவமும், நீதியும், சுயமரியாதையும் பெற்று வாழ்வதை உறுதிசெய்யும் விதமான அரசியல் தீர்வையும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்ந்தளிப்பையும், தேசிய நல்லிணக்கத்தையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் சிவசங்கர் மேனன் இலங்கை தலைவர்களிடம் வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவு அமைச்சின் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
தனது பயணத்தின்போது இலங்கை ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், பாதுகாப்புச் செயலர், எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழர் கட்சி பிரதிநிதிகள் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரை சிவசங்கர் மேனன் சந்தித்திருந்ததாக அச்செய்திக் குறிப்பு கூறுகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter