>> Wednesday, July 10, 2013
கடற்கொள்ளையர்கள் பிடித்த கப்பல் மூழ்கியது-இலங்கையர்கள் கதி?
சோமாலியக் கடற்கொள்ளையர்களால், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் முன்னர் கைப்பற்றப்பட்ட மலேசியப் பதிவு பெற்ற சரக்குக் கப்பல் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் கடலில் மூழ்கியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
இந்தக் கப்பலின் மாலுமிகள் மற்றும் பணியாளர்களில் சில இலங்கையர்களும் இருந்தனர்.
இவர்களில் பலர் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. ஆனால் இது குறித்து அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தமுடியவில்லை.
இவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்கள் இவர்களை விடுவிக்க பணயத்தொகைக் கேட்டு பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கப்பல் மூழ்கியபோது அதில் இருந்தவர்களில், அந்தக் கப்பலில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த மொஹமது பிஸ்தாமி, என்ற கப்பல் பொறியாளரும் ஒருவர் .
அவரது நிலை குறித்து , தற்போது மாலத்தீவில் வசிக்கும் ,அவரது மகளான பர்ஹானா.
பிஸ்தாமி, தமிழோசையிடம் பேசியபோது, தனது தந்தை ஜுன் மாத இறுதியில் தன்னிடம் பேசியதாகவும், அப்போது கப்பல் மூழ்குவதாக அவர் தன்னிடம் சொல்லவில்லை என்றும் கூறினார்.
ஆனால் இந்த செய்தி கிடைத்த பின்னர், ஐரோப்பிய கடற்படையினருடன் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்கள் தாங்கள் இதுவரை இந்தக் கடற்பகுதியில் தேடியபோது, எந்த உடலும் கிடைக்கவில்லை என்று கூறியதாகத் தெரிவித்தார்.
ஆனாலும், தொடர்ந்து இந்த கப்பலைக் கைப்பற்றிய கடற்கொள்ளையர்களுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும், இது குறித்த தகவல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் கூறினார்.
ஆனால் இலங்கை அரசு கப்பலில் பணயக்கைதிகளாகப் பிடிபட்ட இலங்கைப் பிரஜைகளை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றார் பர்ஹானா.
0 comments:
Post a Comment