கருணா டக்ளஸ் மீது குற்றச்சாட்டு
விக்கிலீக்ஸ்
விக்கிலீக்ஸ் புதிதாக வெளியிட்டிருக்கும் அமெரிக்க அரசின் மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய ராஜாங்க தகவல் பரிமாற்றங்கள், இலங்கை அரசு மற்றும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு இருதரப்பாரையும், கடுமையாக விமர்சிப்பவையாக இருக்கின்றன.
லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களில், இலங்கையில் செயற்படும் துணைப்படையினரின் கொலை, சிறார் கடத்தல் மற்றும் தொழில்ரீதியான விபச்சாரம் ஆகிய செயல்களில் இலங்கை அரசும் துணைபோயிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் கட்டாயமாக படைகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அதேசமயம் இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள ராஜாங்க தகவல்களில், இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமை செயற்பாடுகளை மேம்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த தகவல்கள், இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் முறிந்த பிறகு, அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் நிலைமைகள் குறித்து பெரிதும் கவலைக்குரிய சூழலை குறிப்புணர்த்துகின்றன.
தூதரகத்தின் நம்பிக்கைக்குரிய தொடர்புகளை மேற்கோள் காட்டி, தூதரக அதிகாரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பியிருக்கும் தகவல்களின்படி, விடுதலைப்புலிகள் அமைப்பு, குடும்பத்திற்கு ஒருவரை தமது படையணியில் கட்டாயப்படுத்தி சேர்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வேலைக்கு சென்ற தங்களின் பிள்ளைகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து, ஆயுதம் ஏந்த வைக்க மறுக்கும் குடும்பத்தவரை விடுதலைப்புலிகள் மிரட்டியதாகவும் இந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன.
அதேசமயம், அரசுக்கு ஆதரவான தமிழ் ஆயுதக்குழுக்களின் சட்டவிரோத செயல்களுக்கு அரசு ஆதரவளித்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன.
இலங்கை ஜனாதிபதியுடன் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
இத்தகைய ஆயுதக் குழுக்களை நடத்தியவர்களில் இரண்டுபேர் தற்போது அரசில் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
இவர்களின் குழுக்களின் ஒன்று முகாம்களில் வேலை செய்வதற்காக சிறுவர்களை கடத்தியதாகவும், சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக கடத்தியதாகவும், தூதரகத்திற்கு தகவல் தருவோர் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.
ஆனால் இதில் குற்றம்சாட்டப்படும் தமிழ் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய இருவருமே இந்த குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்தனர். தாங்கள் பணம் பறிப்பதிலோ ஆட்கடத்துவதிலோ ஈடுபடவில்லை என்று இருவருமே பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் மறுத்தனர்.
பணம் மற்றும் உணவை தட்டிப்பறித்த குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள் மற்றும் அரச ஆதரவு தமிழ் ஆயுத குழுக்கள் இரண்டின் மீதுமே இருப்பதாக விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், இந்த ஆண்டு ஜனவரியில் அனுப்பப்பட்ட அமெரிக்க தூதரக தகவலில், இடம்பெயர்ந்த தமிழர்களை நடத்தும் தனது நடவடிக்கைகளை இலங்கை அரசு பெருமளவில் மேம்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருப்பதாகவும் அது கூறுகிறது.
விக்கிலீக்ஸில் இதற்கு முன்பு இலங்கை குறித்து வெளியான தகவல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.
விக்கிலீக்ஸ் தகவல்கள் தொடர்பில் இந்த மாத முற்பகுதியில் கருத்து வெளியிட்ட இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதரகம், இந்தத் தகவல் பரிமாற்றங்கள் தினசரி நிகழ்வுகள் தொடர்பான திறனாய்வு என்றும், இவையெல்லாம் மனம் திறந்த கணிப்பீடுகளேயன்றி, அமெரிக்க அரசின் கொள்கைகளை குறிப்புணர்த்துவதாக கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது.
Read more...