>> Friday, January 29, 2010

வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக பதவியேற்க மாட்டார் என்கிறார் அமைச்சர்
இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தற்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பை உடனடியாக செய்து கொள்ள வேண்டிய அவசரம் இல்லை என்று அரசின் மூத்த அமைச்சரான ஜி எல் பீரிஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
பதவியேற்பதற்கு உரிய காலம் வரும் போது மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக மீண்டும் தேர்வாகியுள்ள மஹிந்த ராஜபக்ஷ எப்போது மீண்டும் பதவியேற்பார் என்கிற விடயம் இலங்கையில் வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.
இதனிடையே தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ஜெனரல் சரத் ஃபொன்சேகா மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இயக்குநரான லக்ஷ்மண் ஹுலுகல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கு பின்னர் வன்முறை
தேர்தலுக்கு பின்னர் வன்முறை தாக்குதலுக்கு உள்ளான ஒரு வாகனம்இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்கள் முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக போலீஸ் மற்றும் அரசியல் கட்சிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாநகர மேயர் அதிகாரபூர்வ இல்லத்தில் கைக்குண்டுத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இதுவன்றி அவரது தனிப்பட்ட இல்லத்தின் மீதும் தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதே போல ஓட்டமாவடி பகுதியிலும், காத்தான்குடி பகுதியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் இல்லங்கள் மீதும் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன.
தேர்தலில் தோல்வியடைந்த பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் ஃபொன்சேகாவின் தேர்தல் முகவராக பணியாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவரது வியாபார நிறுவனம் ஏறாவூர் பகுதியில் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது.
இந்த சம்பவங்களுக்கு ஆளும் கட்சியே காரணம் என்று கூறப்படுவதை அவர்கள் மறுத்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன
ஜனாதிபதி தேர்தல் வெற்றி சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த அடி என்கிறார் கருணா
அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன்இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த ஒரு அடி என்று இலங்கை அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
தோல்வியடைந்த வேட்பாளரான சரத் ஃபொன்சேகா மூலம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்த்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழ் பிரதேசங்களிலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்குகள் குறைவாக விழுந்துள்ளதையும் அவர் ஏற்றுக் கொள்கிறார்.
தமிழ் பகுதிகளில் தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்குகள் குறைவாக விழுந்ததற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்த "துரோகம்" காரணம் எனவும் அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் கூறுகிறார்.
மேலும் இந்தத் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வெல்வதற்கான வேலைத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்பதை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
மஹிந்தவின் வெற்றிக்கான காரணங்கள் என்ன-ஆய்வு
யுத்த வெற்றியே மஹிந்தவின் தேர்தல் வெற்றிக்கு காரணம்-ஆய்வாளர் கீத பொன்கலன்ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளது அவரது கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக கருதப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் கீத பொன்கலன் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அவரது தலைமையிலான அரசு வெற்றி பெற்றது அவரது தேர்தல் வெற்றிக்கு ஒரு பிரதான காரணியாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார். அதுமட்டமல்லாமல் யுத்த வெற்றியின் காரணமாக எதிர் கட்சிகளுடைய வாக்குகளும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பக்கம் திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே வி பி யின் வாக்கு வங்கி பலவீனமாக இருப்பதன் காரணமாகவும் இந்த வெற்றி அவருக்கு கிட்டியுள்ளது என்று தான் கருதுவதாகவும் பேராதனை பல்கலைகழகத்தின் அரசியில் துறையின் தலைவரான பேராசிரியர் பொன்கலன் தெரிவிக்கிறார்.
பொதுவாக சிறுபான்மையினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக எடுக்கும் நிலைப்பாட்டையே இந்த முறையும் எடுத்துள்ளதாகவும், அதன் காரணமாகவே வடக்கு கிழக்கு பகுதியில் சரத் ஃபொன்சேகாவுக்கு கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
சரத் ஃபொன்சேகாவுக்கு கிடைத்த வாக்குகள் அரசுக்கு எதிராக சிறுபான்மையினர் கொண்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடாகவும் கருத முடியும் என்றும் பேராசிரியர் பொன்கலன் கருத்து வெளியிடுகிறார்.
தற்போதைய சூழலில் அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகள் செய்யப்படுவதற்கான அவசியம் இல்லை என அரசாங்கம் கருதவும் வாய்ப்பு இருக்கிறது எனறு தான் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter