>> Tuesday, January 19, 2010

இலங்கை ஜனாதிபதி தேர்தல் - தமிழ்பேசும் மக்களின் மனநிலை


வவுனியா முகாம்களில் உள்ள மக்கள்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே எஞ்சியிருக்கின்றது. இந்த நிலையிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் வவுனியா பிரதேசத்தில் போதிய அளவில் சூடு பிடித்ததாகத் தெரியவில்லை.

தேர்தல் பிரசார கூட்டங்கள் முழு அளவில் நடைபெற இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்த நிலையில், இடம்பெயர்ந்து வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் இந்தத் தேர்தல் தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.


சரத் பொன்சேகா
சிலர் இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து முடிவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், தேர்தலில் முன்னணியில் உள்ள இரண்டு வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பதனால் தமக்கு என்ன பயன் விளையப்போகின்றது என்பதில் சிலர் பெரும் சந்தேகம் கொண்டிருப்பதாகவும் கருதுகின்றார்கள்.


மகிந்த ராஜபக்ஸ
இடம்பெயர்ந்துள்ள தங்களின் நலன்களைக் கவனிப்பதில் அரசாங்கம் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையும் சிலர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.




--------------------------------------------------------------------------------


ஹைட்டியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு பாதகமான நிலமைகளை ஏற்படுத்தும்- ஐ.நா எச்சரிக்கை


ஹைட்டி மக்களுக்கு உணவு விநியோகம்
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டியில் மோசமான எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவருவது அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான உதவிகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

எரிபொருள் இல்லையென்றால் சாலைகள் வழியாக நிவாரணப் பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல முடியாது என்பதோடு, மின்சாரம் இல்லையென்றால் செல்லிட தொலைபேசி வலையமைப்புகள் கூட வேலை செய்யாது என்று ஐ.நா.வின் மனிதாபிமானப் பணிகள் ஒருங்கிணைப்பு நிறுவனம் கூறியுள்ளது.

பூகம்பத்தில் வீடிழந்த மக்களிடம் கூடாரத் துணிகளை விநியோகிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்றும், தேவைப்படும் விசேட மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

ஹைதியிலும் அண்டையிலுள்ள டொமினிகன் குடியரசிலும் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்த மக்களால் நிரம்பி வழிவதாக ஐ.நா. கூறுகிறது.



--------------------------------------------------------------------------------


"சென்னை உயர்நீதிமன்ற வளாக மோதல் குறித்த சீ.பி.ஐயின் குற்றப் பத்திரிகைகளை ஏற்கக்கூடாது" - வழக்கறிஞர்கள் மனு


பொலிசார்- வழக்கறிஞர்கள் மோதலின் போது
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே நடந்த மோதல்கள் குறித்து மத்திய புலனாய்வுத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகைகளை சென்னை கூடுதல் பெருநகர மாஜிஸ்ட்ரேட் ஏற்றுக்கொள்ளக்கூடாது எனக்கோரி வழக்கறிஞர்கள் மனுச் செய்திருக்கின்றனர்.

31 வழக்கறிஞர்கள், மேலும் ஒரு சட்டக்கல்லூரி மாணவர் மீது கலவரத்தில் ஈடுபடுவது குறித்த பல்வேறு இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குக்கள் தொடர்ந்திருக்கும் சி.பி.ஐ யின் இரு குற்றப்பத்திரிகைகளில், 6 காவல்துறையினரின் பெயர்கள் மட்டுமே காணப்படுகிறது.

மேலும் 22 காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சி.பி.ஐ சிபாரிசு செய்திருந்தாலும் கூட, வழக்கு 6 பேர் மீதுதான். அது தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்கின்றனர் வழக்கறிஞர்கள்.



--------------------------------------------------------------------------------

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter