>> Friday, October 1, 2010
பாபர்மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து தீர்ப்பு
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் அயோத்தியில் பாபர்மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதி முஸ்லீம்களுக்கும், இரண்டாவது பகுதி நிர்மோகி அகாரா என்கிற இந்து சாதுக்களின் அமைப்புக்கும், மூன்றாவது பகுதி மற்ற இந்து அமைப்புகளுக்கும் அளிக்கும்படி அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பளித்திருக்கிறது.
அதே நேரத்தில், ஹிந்து கடவுளான ராமர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுவரும் இடம், ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவில், 60 ஆண்டுகளாக நீடித்துவந்த சர்ச்சைக்குரிய அயோத்திப்பிரச்சினை வழக்கின் தீர்ப்பை, அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பெஞ்ச் வியாழனன்று பிற்பகல் வழங்கியது.
அந்தத் தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து, ஒரு பகுதியை ஹிந்து மகாசபைக்கும், இன்னொரு பகுதியை, ஹி்ந்து சாதுக்களின் கூட்டமைப்பான நிர்மோகி அகாராவுக்கும், இன்னொரு பகுதியை முஸ்லிம்களின் சுனி வக்ஃப் வாரியத்துக்கும் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நீதிதிகள் அகர்வால் மற்றும் எஸ்.வி. கான் ஆகியோர், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று பெரும்பான்மை தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி தரம்வீர் ஷர்மா மட்டும், அந்தப் பகுதி முழுவதும் ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
குறிப்பாக, கடந்த 1992-ம் ஆண்டு ஹி்ந்து கடு்ம்போக்குவாதிகளால் இடிக்கப்பட்ட மசூதியின் மையப்பகுதி இருந்த சர்ச்சைக் குரிய இடம், ஹிந்து மகாசபைக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மூன்று நீதிபதிகளும் ஒருமித்த கருத்தைக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில்தான் முதலில் 1949 ஆண்டும் பிறகு 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ராமர் சிலைகள் வைக்கப்பட்டன.
அதேபோல், சீதா தேவியின் சமையலறை மற்றும் ராமரின் உடைமைகள் இருந்ததாகக் கூறப்படும் பகுதிகளை நிர்மோகி அகாராவுக்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
சில இந்து அமைப்புக்கள் தீர்ப்பை வரவேற்றுள்ளன
முஸ்லிம்களைப் பொருத்தவரை, அவர்களுக்கும் மூன்றில் ஒரு பகுதி வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எந்த ஒரு தரப்புக்கும் மூன்றில் ஒரு பகுதி சரியாகக் கிடைக்காவிட்டால், மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ள அருகில் உள்ள பகுதியிலிருந்து தேவையான இடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை இந்திய நடுவணரசு ஏற்கெனவே கையகப்படுத்தி வைத்துள்ளது.
சர்ச்சைக்குரிய இடத்தில், முதலில் கோயில் இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் ஆவணங்களின் மூலம் அது நிரூபணமாகியுள்ளதாகவும் இரண்டு நீதிபதிகள் தெரிவித்துள் ளனர். கோயிலை இடித்துவிட்டு பாபர் அந்த மசூதியைக்கட்டி யது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அதை மசூதியாகக் கருத முடியாது என்றும் அந்த நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆனால், மசூதியைக்கட்ட கோயில் இடிக்கப்படவில்லை என்றும், இடிந்துகிடந்த கோயிலின் மீதுதான் மசூதி கட்டப்பட்ட தாகவும் நீதிபதி எஸ்.வி. கான் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
மசூதி கட்டப்படும் வரை, பரந்த அந்த நிலப்பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் ராமர் பிறந்தார் என்று ஹிந்துக்கள் நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், ஆனால், எந்த குறிப்பிட்ட இடத்தில் ராமர் பிறந்தார் என்பது குறித்த தெளிவான ஆதாரம் இல்லை என்றும் நீதிபதி கான் குறிப்பிட்டிருக்கிறார்.
சர்ச்சைக்குரிய கட்டிடம் அல்லது மசூதி பாபரால் கட்டப்பட்டது என்பதே கேள்விக்குறியாக உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய இடம் முழுவதும் தங்களுக்குச் சொந்தம் என்று கோரி சுனி வக்ஃப் வாரியம் தாக்கல் செய்த மனு, சட்டவிதி களின்படி காலம் கடந்து செய்யப்பட்டதால், அதைத் தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
மேலும், சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதுள்ள நிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித் துள்ளனர். தங்களுக்கான பகுதிகளை எவ்வாறு பகிர்ந்து கொள் வது என்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் யோசனைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment