>> Tuesday, October 12, 2010


கர்நாடகம்: வாக்கெடுப்பு வெற்றியில் சர்ச்சை


வெற்றிக் களிப்பில் எடியூரப்பா
கர்நாடக மாநிலத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசு வெற்றி பெற்றதாகக் முதல்வர் எடியூரப்பா கூறுகிறார்.
ஆனால், குரல் வாக்கெடுப்பு மூலம் பெறப்பட்ட அந்த வெற்றி, சட்டவிதிகளுக்குப் புறம்பானது என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன.

மேலும், அந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது, போலியானது என்று கூறி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்து மாநில ஆளுநர் பரத்வாஜ் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எடியூரப்பா எதிராகப் போர்க்கொடி
பா ஜ க வைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களும், எடியூரப்பா அரசுக்கு ஆதரவளிக்கும் ஐந்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த மாதத் துவக்கத்தில் திடீரென அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.

இவர்கள் அனைவரும் வேறு மாநிலங்களில் முகாமிட்டு, மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பலப்பரிட்சை

இந்த மாதம் 12-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க யெதியூரப்பாவுக்கு ஆளுநர் உத்தரவிட்ட நிலையில், திங்களன்று சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக, 16 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்வதாக பேரவைத் தலைவர் போபையா அறிவித்தார்.

224 பேர் கொண்ட அவையில் 16 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பாஜக அரசுக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த நிலையில் சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் எடியூரப்பா நம்பி்க்கை வாக்கு கோரினார்.

குரல் வாக்கெடுப்பு மூலம் வாக்கெடுப்பு முடிந்து, எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சட்டை கிழிப்பு

ஆனால், எதிர்க்கட்சிகள் அதைக் கடுமையாக ஆட்சேபித்தன. அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. பல உறுப்பினர்கள் உள்ளே வராமல் தடுக்கப்பட்டதாகவும், அவைக்குள் போலீசார் நுழைந்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக அவைக்குள் கடுமையாக கோஷமிட்டார்கள். அவர்களில் ஒருவர் தனது மேல்சட்டையைக் கிழித்துக் கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தார்.

ஆனால், பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாக எடியூரப்பா தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் மறுப்பு

இதை ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா ஆட்சேபம் தெரிவித்தார் .

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, பாஜக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தகுதி நீக்கம் செய்யப்ட்ட 16 உறுப்பினர்களும் திங்களன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிமன்றம், விசாரணைய செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

இதனிடையே, பேரவையில் நடைபெற்றது சட்டவிரோதம் என மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் திங்கட்கிழமை மாலை டெல்லியில் இந்தப் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter