>> Thursday, December 19, 2013

தேவயானி கைது சர்ச்சை : ஜான் கெர்ரி வருத்தம்

தேவயானி சர்ச்சை
நியுயார்க்கில் இந்தியத் துணைத் தூதர் தேவயானி கைது செய்யப்பட்ட சர்ச்சையில், அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர மேனனுடன் புதன்கிழமை தொலைபேசியில் பேசிய அவர், இந்த "துரதிருஷ்டவசமான சம்பவம், இந்திய அமெரிக்க உறவுகளைப் பாதிக்கக்கூடாது" என்று கூறியிருக்கிறார்.

"தேவயானி கண்ணியமாகவே நடத்தப்பட்டார்" --அமெரிக்க அரச வழக்கறிஞர்
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு ராஜீய அலுவலர்கள், வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்க ராஜிய அலுவலர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படும் அதே மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படவேண்டும் என்பதே ஜான் கெர்ரியின் எதிர்பார்ப்பு என்று , அமெரிக்க வெளியுறவுச் செயலகப் பேச்சாளர் மேரி ஹார்ப் கூறினார்.
தேவயானியைக் கைது செய்ய உத்தரவிட்ட ப்ரீத் பராரா
இதனிடையே, தேவயானி கோபர்கடேயைக் கைது செய்ய உத்தரவிட்ட , அமெரிக்க நீதித்துறை அரச வழக்கறிஞர், ப்ரீத் பராரா விடுத்த ஒரு அறிக்கையில், கைது செய்யப்படும் அமெரிக்கப் பிரஜைகள் நடத்தப்படுவதை விட அதிகமான மரியாதைகள் தேவயானிக்கு தரப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
" தேவயானி ஒரு பெண் காவலரால், தனி அறையில் சோதனையிடப்பட்டார், ஆனால் இது எல்லாக் குற்றம் சாட்டப்பவர்களுக்கும் செய்யப்படும் அதே முறைதான் , அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, அமெரிக்கர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி" என்றார் ப்ரீத் பராரா.
ஒரு இந்தியர் நடத்தப்பட்ட விதம் என்று கூறப்படும் இது குறித்து எழுந்திருக்கும் கோபாவேசம் மற்றொரு இந்தியரும், ( பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸ்) அவரது கணவரும் நடத்தப்பட்ட விதம்
குறித்து எழவில்லை என்பது வியப்பாக இருக்கிறது என்றும் ப்ரீத் பராரா குறிப்பிட்டார்.
இதனிடையே, தேவயானிக்கு இருக்கும் ராஜிய பாதுகாப்பை மேலும் அதிகரிக்க இந்தியா அவரை ஐநா மன்ற இந்திய தூதரகப் பிரதிநிதியாக நியமித்தது.
ஆனால் இது குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு எந்த ஒரு வேண்டுகோளும் இது வரை வரவில்லை என்று அமைச்சகப் பேச்சாளர் மேரி ஹார்ப் கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter