>> Thursday, December 19, 2013

தேவயானி கைது --- மன்மோஹன் சிங் கண்டனம்


தேவயானி கைதுக்கெதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டங்கள்
நியுயார்க்கில் இருக்கும் இந்தியத் துணைத்தூதர் தேவயானி கோபர்கடே கைது செய்யப்பட்டு ,ஆடை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கண்டனம் செய்திருக்கிறார்.
பாராளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சரியானது இல்லை என்றும் ஏற்புக்கு உரியது இல்லை என்றும் விமர்சித்திருக்கிறார்.

இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது நேரடியான பதிலை அளிக்க மறுத்துவிட்டார். அவ்வாறு தேவயாணி நியமிக்கப் பட்டிருந்தால் ஐ.நா.விடம் அங்கீகார பதிவு செய்துக்கொள்ள வேண்டும், அதன் பின்னர் அவருக்கு ராஜதந்திர விதிவிலக்கு கிடைப்பதும் உறுதி செய்யப்படும்.இதனிடையே, தேவயானி கோபர்கடேயை இந்திய அரசு நியூயார்க்கில் உள்ள ஐ.நா மன்றத்தில் இந்தியாவின் தூதரகத்தில் பிரதிநிதியாக நியமித்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் எதிரொலி

நாடாளுமன்றத்தில் தேவயானி விவகாரம் எதிரொலி

என்.ரவி பேட்டி


இதனிடையே,தேவயானி கைது விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது.
மாநிலங்களவையில் இவ்விவகாரத்தால் ஏற்பட்ட கூச்சலால் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் மாநிலங்களவையில் இதற்கு பதிலளித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்திய அரசின் குரல் அமெரிக்காவில் ஒலித்திருக்கும் என நம்புவதாக கூறியதோடு, நட்பு நாடான அமெரிக்காவிடம் இருந்து இப்படி ஒரு செயலை எதிர்ப்பார்கவில்லை என்றார்.
இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையின் எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜெயிட்லி பேசுகையில் வெளியுறவுக் கொள்கையை பொறுத்தவரையில் இந்தியா மென்மையாக நடந்துக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தினார்.
திமுக உறுப்பினர் கனிமொழி பேசுகையில் ஒரு இந்திய பெண்ணுக்கு நேர்ந்துள்ள கொடுரம் வருத்ததிற்கு உரியது என்றும், வெளியுறவுக் கொள்கைகளை மறுபரிசிலனை செய்ய வேண்டிய காலத்தை இந்தியா எட்டியுள்ளதாகவும் கூறினார்.
கைது செய்யப்பட்ட அதிகாரி தேவயானி
இந்நிலையில் இந்திய பெண் அதிகாரி தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதாலயே மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கியதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரியும் மத்திய அரசு விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறி விட்டதாக தெரிவத்தார்.

புகார் கொடுத்தவரின் கணவர் அமெரிக்கா சென்றார்

இதனிடையே, தேவயானி தனக்குத் தருவதாக உறுதி தந்தபடி சம்பளத்தைத் தரவில்லை என்று புகார் கொடுத்து இந்த சம்பவத்துக்குக் காரணமாக இருந்த, சங்கீதா ரிச்சர்ட்ஸ் என்ற பெண்ணின் கணவர் மீது இந்தியாவில் நீதிமன்றம் வாயிலாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்து இருந்தும், அவருக்கு விசா வழங்கி கடந்த டிசம்பர் 10-ம் தேதி அவர் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல வழி வகை செய்ததன் மூலம்,இந்தக் கைது நடவடிக்கை திட்டமிடப்பட்டதாகக் கருதுவதாகவும இந்திய அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

'அமெரிக்கா திட்டமிட்டு செய்திருக்கிறது'

இந்திய ராஜிய அலுவலர்கள் வெளிநாடுகளில் நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்ய,பணியாளர்களை அமர்த்திக்கொள்ள இந்திய அரசு ஒரு தொகையை அவர்களது சம்பளத்திலேயே சேர்த்து தருகிறது என்றும், அதிலிருந்துதான் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களுக்குத் தரவேண்டியிருக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் செயலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற என்.ரவி கூறினார்.
பணிபெண்கள் ஊதியம் உள்நாட்டு சட்டங்கள்பாற்பட்டே அமைந்திருக்கின்றன, ஆனால் அவர்களுக்கு தரப்படும் ரொக்க சம்பளம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது, அவர்களுக்கு வழங்கப்படும், இலவச வீட்டுவசதி, இலவச உணவு, மின்சாரம், தண்ணீர் செலவு போன்றவைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் பொதுவாக சுமுகமாக இருக்கும் இந்திய அமெரிக்க உறவுகளில் ஒரு தற்காலிக விரிசலை ஏற்படுத்தும் என்றும், ஆனால் போகப்போக இது சரியாகிவிடும் என்றும் அவர் கூறினார். ஆனாலும், இந்தச் சம்பவம் ஏற்படுத்திய காயத்தின் வடு அழியாது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா இந்த சம்பவத்தில் , புகார் கொடுத்த பெண்ணின் கணவருக்கு விசா வழங்கி, அவர் டிசம்பர் 10ம் தேதி இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னரே, டிசம்பர் 11ம்தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது, அமெரிக்கா இதைத் திட்டமிட்டுச் செய்திருக்கிறது என்றுதான் கருதவேண்டியிருக்கிறது என்றார் ரவி.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter