>> Thursday, July 28, 2011
திரைப்பட வரி விலக்கு- புதிய நிபந்தனைகள்
அதிமுக அரசின் புதிய நிபந்தனைகள் அறிமுகம்
தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தாலே கேளிக்கை வரியிலிருந்து விலக்கு என்று கடந்த திமுக ஆட்சியின் போது இடப்பட்ட ஆணையில் இன்றைய அ இஅதிமுக அரசு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.
அதன்படி வன்முறை, ஆபாசம் அதிகளவில் இடம்பெற்றிருந்தால் அத்திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படாது.
வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பார்க்கலாம் என்பதை சுட்டும் விதமாக அளிக்கப்படும் ‘U’ சான்றிதழ் பெறும் திரைப்படங்களே வரிவிலக்கு பெற தகுதியுடையவை என வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் வெளியிட்ட உத்தரவு ஒன்று கூறுகிறது.
திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிடப்படுவதால் மட்டுமே அவை தமிழ் பண்பாட்டுக்கு உகந்ததாகவும் கண்ணியமானதாகவும் உள்ளன என உறுதி செய்ய இயலவில்லை.
சில நேரங்களில், தரமில்லாத திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்படுவதைக் காரணம் காட்டி கேளிக்கை வரியிலிருந்து விலக்கு பெற்று விடுகின்றன.
எனவே, கூடுதல் தகுதி வரையறைகளாக தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக திரைப்படக் கதையின் கரு இருக்க வேண்டும்.
நிலுவையிலுள்ள விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்
'U' சான்றிதழ் பெறும் படங்களுக்கே வரிவிலக்கு
திரைப்படத்தின் தேவையைத் கருதி பிற மொழிகளைப் பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்றும், கேளிக்கை வரிவிலக்கு கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும் என்றும், வரிவிலக்குக்குப் பரிந்துரை செய்ய ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்படும் என்றும் பாலிவால் வெளியுட்டுள்ள உத்தரவு தெரிவிக்கிறது.
திரைப்படப் பெயர்களில் ஆங்கிலத்திலேயே வைக்கிறார்கள், இப்போக்கு நிறுத்தப்படவேண்டும், தமிழ் பெயர்கள் சூட்டும் பழக்கம் மீண்டும் நடைமுறைக்கு வரவேண்டும் என்று கூறி திமுக ஆட்சியில் அவ்வாறு தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு என்று அறிவிக்கப்பட்டது.
அவ்வாறு ரத்து செய்வதால் 50 கோடி ரூபாய் ஆண்டிற்கு இழப்பேற்படும், ஆனால் தமிழ்ப் பற்று பெருக, தமிழ் வளர்ச்சியடைய அவ்விழப்பை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.
ஆனாலும் திமுக அரசின் அறிவிப்பு அப்போதே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது என்பதை இங்கே நினைவு கூறலாம்.
புதிய ஆணையில் குறிப்பிடப்பட்டதைப் போலல்லாமல் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு கேளிக்கை வரிக்காக மனுச் செய்திருக்கும் படங்களை புதிய ஆணைப்படி மதிப்பிடக்கூடாது என ஒரு சிலர் கோருகின்றனர்.
0 comments:
Post a Comment