>> Thursday, July 28, 2011
திமுக பாமக உறவு முறிந்தது
திமுக-பாமக: உறவும் பிரிவும்
தமிழகத்தில் தி.மு.க உடனான தனது உறவை பா.மா.க முறித்துக் கொண்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி மு க கூட்டணியிலிருந்து விலகி அ இ அ தி மு க கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அந்தக் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அண்மையில் இடம் பெற்ற சட்டமன்ற தேர்தல்களின் போது மீண்டும் தி மு க கூட்டணியில் இணைந்து கொண்டது.
பாட்டாளி மக்கள் கட்சி இனி வருங்காலங்களில் எக்கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், தன் தலைமையிலேயே மாற்றணி ஒன்று அமைத்து அனைத்து தேர்தல்களையும் சந்திப்பதென்று முடிவு செய்திருக்கிறது.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தனி அணியே அமைக்கப் போவதாகவும், பா.ம.கவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளும் இயக்கங்களும் அவ்வணியில் இணையவேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்று சென்னையில் கூடிய அக்கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
பல்வேறு துறைகளில் தமிழகம் பின் தங்கிவிட்டதாகவும், மதுவினால் இளைஞர்கள் சீரழிவதாகவும், ஊடகங்கள் மனிதர்களை சிந்திக்கவிடாமல் செய்வதாகவும், தமிழர்களின் உரிமை பறிபோவதாகவும், ஈழத்தமிழர்களைக் காப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென்றும், இந்நிலையில் பா.ம.கவின் கொள்கைகளுக்காகப் பாடுபட தனித்து நின்றே போராடவிருப்பதாகவும் அத்தீர்மானம் மேலும் கூறுகிறது.
முன்னதாக பொதுக்குழுவில் பேசிய மூத்த தலைவர்கள் அனைவரும் திமுக, அ.இ.அ.தி.மு.க இரண்டையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடத்தால் வீழ்ந்தோம், எனவே தான் தனித்து தமிழர் நலன் காக்கப் புறப்படும் முடிவு என்றார்.
இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அ இ அ தி மு க கூட்டணியில் இடம்பெற்ற பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியுற்றது.
அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 30 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி 3 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில் தனி அணி அமைக்கப் போவதாக தீர்மானம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment