>> Friday, July 29, 2011
'போர்க் குற்றம்'- மீண்டும் சானல் 4 செய்தி
இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது, நிகழ்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்குற்றங்கள் பற்றி பிரிட்டனிலுள்ள சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம் புதிய விவரணச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் கொன்று விடுமாறு, அங்கு இறுதிக்கட்ட படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 58ம் பிரிவு படையணியின் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாக இலங்கை இராணுவ வீரர்கள் என்று கூறப்படும் இருவரை மேற்கோள் காட்டி சானல் 4 செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டாபய மற்றும் ஷவேந்திர மீது குற்றச்சாட்டு
மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா
‘எந்தவழியிலாவது அவர்களைக் கொன்று முடித்து விடுங்கள்’ என்ற அனுமதியை படைத்தளபதி ஷவேந்திர சி்ல்வாவுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியிருந்ததாக, இறுதிக்கட்டப் போரின்போது, 58ம் பிரிவு படையணியில் கடமையில் இருந்ததாக கூறும், ஃபெர்ணான்டோ என்று மட்டும் தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட ஒருவர் சானல் 4வுக்கு தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, ஷவேந்திர சில்வாக்கு வழங்கிய உத்தரவையே படைவீரர்கள் கொலைகளைப் புரிவதற்கான அனுமதியாக எடுத்துக் கொண்டு செயற்பட்டதாக பெர்ணான்டோவை மேற்கோள்காட்டி சானல் 4 கூறுகிறது.
பாதுகாப்புக் கருதி குறித்த இராணுவ சிப்பாயின் உருவ அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறும் சானல் 4 ஆங்கில மொழி பெயர்ப்புடன் அவரது கருத்தை வெளியிட்டுள்ளது.
வௌ்ளைக் கொடிச் சம்பவம்
நிராயுத பாணிகள் சுட்டு்க் கொல்லப்படும் காட்சி- சானல் 4
விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட இறுதிநாட்களில், இலங்கைப் படையினர் நிராயுதபாணிகளாக இருந்த பெண்களையும், சிறுவர்களையும், முதியவர்களையும் கோரமாக சுட்டுக் கொன்றதாகவும், பலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாகவும், நாக்குகள் அறுக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டதை தான் கண்டதாகவும் ஃபெர்ணாண்டோ சானல் 4 செய்தியில் கூறுகிறார்.
இதற்கிடையே, ஐநாவுக்கான இலங்கையின் பிரதிதூதுவராக தற்போதுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை அவரது அமெரிக்காவில் அவரது தூதரகத்துக்கு வெளியே சானல் 4 செய்தியாளர் சந்துத்துள்ளார்.
இலங்கைப் படையினர், கொலைகள் மற்றும் பாலியல் கொடூரங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
பாதுகாப்புச் செயலர் உத்தரவு வழங்கியதாக கூறும் அந்த இராணுவ அதிகாரியின் விபரத்தைக் கூறுமாறும், சானல் 4வே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறிவிட்டார்.
இலங்கை அரசின் உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவாதத்தை அடுத்து, சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாக கூறப்படும், ‘வெள்ளைக் கொடி’ சம்பவத்துடன் தொடர்பு பட்டதாகவே ஃபெர்ணான்டோவின் சாட்சியம் அமைந்துள்ளதாக சானல் 4 கூறியுள்ளது.
இதற்கிடையே, சானல் 4 வில் வெளியாகியுள்ள இந்த செய்தியில் உண்மையில்லையென்று என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தமிழோசையிடம் மறுத்தார்.