>> Thursday, May 5, 2011
தேர்வு முறையில் மாற்றம் இல்லை
தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஏற்கெனவே உள்ள நடைமுறையே தொடரும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை தொடர்பான இந்திய தொழில்நுட்பக் குழுமத்தின் புதிய நெறிமுறைகள் பிற்படுத்தப்பட்டோரின் நலனை பாதிக்கும் எனவும் தமிழக முதல்வர் கூறியிருக்கிறார்.
சமூக நீதியைக் காக்கும் வகையில் புதிய மதிப்பெண் வரையறைகள் திரும்பப் பெறப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
தற்போது மாநிலத்தில் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதியாக பொதுப் பிரிவினருக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 45 சதவீத மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 40 சதவீத மதிப்பெண்களும், பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு 35 சதவீத மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று கூறுகிறார் கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் துணை வேந்தர் கே.கருணாகரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
கே கருணாகரன் பேட்டி
கடந்த கல்வியாண்டு முதல் தற்போது இருக்கும் நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் எதிர்வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, சம்பந்தப்பட்ட பாடங்களில் குறைந்தபட்சமாக பொதுப் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், ஒதுக்கீடு பெறும் இனத்தவர் 45 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று அறிவித்திருக்கிறது.
புதிய நெறிமுறைகளின் விளைவாய் பட்டியல் இனத்தவர், சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் புறக்கணிக்கப்படுவதோடு, இது சமூக நீதிக் கொள்கையையே பொருளற்றதாகிவிடும் என முதல்வர் கருதுவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டாமல், அனைத்துப் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில், புதிய ஆணையினை திரும்பப் பெறவேண்டுமென்றும் தமிழக அரசு கோருவதாக அச்செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
0 comments:
Post a Comment