>> Thursday, May 5, 2011
ஒசாமா கொலை: தகவல்களில் மாற்றம்
பின் லாடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை தாங்கள் முதலில் வெளியிட்ட விபரங்களை மாற்றிக்கொண்டுள்ளது.
முதலில் சொல்லப்பட்டதுபோல தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது பின் லாடன் ஆயுதம் எதனையும் ஏந்தியிருக்கவில்லை என்று வெள்ளை மாளிகை இப்போது கூறுகிறது.
அப்படியானால் வேண்டுமென்றே சுட்டுக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை இதுவா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மேலும் பில் லாடனின் மனைவிகளில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொல்லப்பட்டது பின் லாடன் மனைவி அல்ல என்று பிற்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒஸாமா பின் லாடன் தன் மனைவியை முன்னால் பிடித்துக்கொண்டு அவரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க முயன்றிருந்தார் என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் அவர் அப்படி செய்திருக்கவில்லை என்றும் இப்போது கூறப்பட்டுள்ளது.
அவசர அவசரமாக நிறைய தகவல்களை வெளியிட வேண்டி வந்ததால் விபரங்களில் இவ்வாறான திரிபுகள் நிகழ்ந்துவிட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிபரின் ஊடகத்துறைச் செயலர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.
"பின் லாடனின் மனைவி ஒருவர் அமெரிக்காவின் தாக்குதல் அணிச் சிப்பாய் ஒருவரை நோக்கி வேகமாகப் வந்தபோது அவரது காலில் சுடப்பட்டது. ஆனால் அவர் சாகடிக்கப்படவில்லை. பிற்பாடுதான் பின் லாடன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவர் அச்சமயம் ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை." என்று ஜே கார்னி தெரிவித்துள்ளார்.
பின் லாடன் கையில் துப்பாக்கி எதுவும் அச்சயமம் இருந்திருக்கவில்லை என்றாலும் பொதுவாக அந்த இடத்தில் பெருமளவான எதிர்ப்பை அமெரிக்கச் சிப்பாய்கள் சமாளிக்க வேண்டியிருந்தது என்றும், அந்த இடத்தில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்திருந்தது என்றும் ஜே கார்னி கூறியுள்ளார்.
பின்லாடனின் இரண்டு சகோதரர்கள் மற்றும் பெண்ணொருவர் கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் வைத்து கொல்லப்பட்டுள்ளனர் என்று தற்போது தெரிவிக்கப்படுகிறது. பின்லாடனின் மகன் ஒருவர் கொல்லப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிற்பாடு சொல்லப்பபட்டுள்ள விபரங்களில் அது பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை.
இப்படிப்பட்ட குழப்பங்களால், பின் லாடனை உயிரோடு பிடிப்பது என்ற எண்ணமே அமெரிக்காவுக்கு இருந்திருக்கவில்லை என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளடது.
பின் லாடன் சடலத்தின் புகைப்படத்தை வெளியிடுவது பற்றி அமெரிக்க அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிகிறது. மோசமான அந்தப் புகைப்படம் வெளிவந்தால் உணர்வலைகள் தூண்டப்படலாம் என்று வெள்ளை மாளிகைப் ஊடகத் தொடர்பாளர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment