>> Friday, March 11, 2011


விடைபெறுகிறேன் - தலாய் லாமா


தலாய் லாமா
நாடு கடந்த நிலையில் செயல்பட்டுவரும் திபெத் அரசாங்கத்தின் அரசியல் தலைவர் பொறுப்பிலிருந்து தான் விலகப் போவதாக திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா அறிவித்துள்ளார்.
அரசியல் அதிகாரங்களை மற்றவரிடம் அளிக்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு உள்ளதை அவர் நெடுங்காலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.

தனது அதிகாரத்தை மற்றவரிடம் முறையாகக் கையளிப்பதென்பது அடுத்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

திபெத்தில் கம்யூனிஸ ஆட்சி வந்ததுக்கு எதிராக 1959ல் நடந்த வெற்றியடையாத கிளர்ச்சியின் ஆண்டு விழாவில் அவர் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.

அந்த கிளர்ச்சி தோல்வியடையவேதான் அவர் திபெத்தை விட்டு வெளியேற நேர்ந்திருந்தது.

தலாய் லாமாவின் தற்போதைய அறிவிப்பு எல்லோரையும் ஏமாற்றுவதற்கான ஒரு சாகசம் என்று சீன அரசு கூறியுள்ளது.

புத்தரின் மறுபிறப்பு

பௌத்த மதத்தைச் சேர்ந்த திபெத்திய மக்கள் தலாய் லாமாவை புத்தரின் மறுபிறப்பாகக் கருதுகின்றனர். தமது ஆன்மிகத் தலைவர்களின் மறுபிறப்பு வரிசையில் தற்போதைய தலாய் லாமாவை 14ஆவது மறுபிறப்பாக அவர்கள் நம்புகின்றனர்.

"திபெத்துக்கு என்று தனியொரு அரசியல் தலைவர் தேவை. அவர் திபெத்திய மக்களால் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் தேர்தெடுக்கப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும்" என்றும் அவரிடம் தன்னுடைய அதிகாரங்களை தான் வழங்க விரும்புவதாகவும் தலாய் லாமா தற்போது கூறியுள்ளார்.

தலாய் லாமா திபெத்தை விட்டு வெளியேறி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது அவருக்கு 75 வயதாகிறது.

திபெத்துக்கு விடுதலை வென்றுதரும் போராட்டத்தில் தான் மனம் தளர்ந்துவிடவில்லை, தன்னுடைய பொறுப்புகளை தான் கைவிடவும் விரும்பவில்லை. ஆனால் மாற்றம் வருவதற்கான தருணம் வந்துவிட்டதால்தான் தான் இந்த அறிவிப்பைச் செய்துள்ளதாக தலாய் லாமா கூறுகிறார்.

நாடு கடந்த திபெத்திய அரசாங்கம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம்தான். அதற்கென பிரதமர் ஒருவரும் இருக்கிறார். ஆகவே தலாய் லாமா தற்போது கையளிக்க விரும்பும் அதிகாரங்கள் என்பவை சட்டங்களில் கையெழுத்திடுவது, பொறுப்புதாரிகளுக்கு சத்தியப்பிரமாணம் செய்துவைப்பது போன்ற சின்னச் சின்ன அதிகாரங்கள்தான்.

திபெத்தின் ஆன்மிகத் தலைவர் என்ற முக்கியமான பங்கில் தலாய் லாமா நீடிக்கவே செய்வார்.

சீனா சாடல்

தலாய் லாமாவின் தற்போதைய அறிவிப்பு சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான ஒரு சாகசம் என்று சீன அரசு கூறியுள்ளது.

தற்போதைய தலாய் லாமா இறந்த பின்னர் அடுத்த தலாய் லாமாவாக வருபவரை யார் தேர்ந்தெடுப்பது என்ற விடயத்தில் பெய்ஜிங்கிற்கும் நாடு கடந்து வாழும் திபெத்தியருக்கும் இடையில் இடையில் நடக்கும் அதிகாரம் போட்டி தற்போதைய விஷயங்களுக்கு பின்னணியில் உள்ளது எனலாம்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter