>> Wednesday, March 9, 2011
ஆண்-பெண் சமத்துவப் பட்டியல்
பெண்கள் தினம்
சர்வதேச பெண்கள் தினமான இன்று ஆண் - பெண் சமத்துவத்தில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்தி உலக பொருளாதார மன்றம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெண்ணிய எழுத்தாளரான வ. கீதா செவ்வி
இந்தப் பட்டியலில் சிறிய ஆப்பிரிக்க நாடான லெசோதோ முன்னணியில் வந்துள்ளதென்பதும், முஸ்லிம் உலகில் முற்போக்கான நாடாகப் பார்க்கப்படும் துருக்கி, இப்பட்டியலில் மிகவும் கீழாக வந்திருப்பதென்பதும் பலருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உரிமைகளில் உள்ள சமத்துவமின்மையைக் குறைப்பதில் ஒரு நாடு அடைந்திருக்கக் கூடிய வெற்றியைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் உலகப் பொருளாதார மன்றம் இந்தப் பட்டியலை தயாரித்துள்ளது.
வ.கீதா கருத்து
ஆசியாவைப் பொறுத்தவரை மேற்காசிய நாடுகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் பெண்ணுரிமை என்பது மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், அங்கு இந்த விடயங்களில் சில சலனங்கள் ஏற்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணிய எழுத்தாளரான வ. கீதா கூறுகிறார்.
இந்தியாவில் நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அங்கு இன்னமும் எவ்வளவோ முன்னேற வேண்டியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
இந்தப் பட்டியலில் ஆப்பிரிக்காவின் சிறிய ராஜ்ஜியமான லெசோதோ எட்டாவது இடத்தில் வந்துள்ளது. மற்ற எந்த ஆப்பிரிக்க நாட்டை விடவும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற செல்வந்த நாடுகளை விடவும் ஆண்- பெண் சமத்துவத்தில் இந்த நாடு முன்னணியில் உள்ளது என்பது பலருக்கு வியப்பைத் தந்துள்ளது.
இந்த நாட்டின் ஜனத்தொகை 18 லட்சம் மட்டுமே, அந்த சிறிய தொகையிலும் பாதிக்கும் அதிமானோர் மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ளனர். ஆனாலும் ஆண்-பெண் சமத்துவத்தில் பல செல்வந்த நாடுகளை லெசோதோ விஞ்சியுள்ளது.
அரசியலில் பெண்களின் பங்கேற்பு, ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் கல்வி நிலை, சுகாதார சேவைகளைப் பெறுவதில் அவர்களுக்குள்ள உரிமைகள் போன்றவற்றை மதிப்பிட்டு ஒரு சமூகத்தில் ஆண் பெண் சமத்துவம் எந்த அளவில் உள்ளதென்பதை உலக பொருளாதார மன்றம் கணக்கிட்டிருந்தது.
அந்த நாட்டின் அமைச்சர்களில் ஐந்தில் ஒருவர் பெண். காவல்துறையின் தலைமை அதிகாரி பெண், ஆண் பிள்ளைகளோடு ஒப்பிடுகையில் அதிக அளவான பெண் பிள்ளைகள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருக்கின்றனராம்.
லெசோதோவில் ஆண் பெண் சமத்துவச் சூழல் வியக்கவைக்கும் நல்ல நிலையில் இருக்கிறதென்றால், வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் துருக்கியோ இந்தப் பட்டியலில் மிகவும் கீழே வந்திருக்கிறது.
பெண்கள் முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவதில் துருக்கிய அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதையே இது காட்டுவதாக அந்நாட்டின் பெண்ணுரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன.
குடும்ப கௌரவத்தை காப்பாற்றிக்கொள்வதாக நினைத்து பெண்களை குடும்ப உறுப்பினர்களே கொல்லும் சம்பவங்கள் அங்கு தினந்தோறும் நடப்பது வாடிக்கையாகிவிட்டதாம். துருக்கியை ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி கடைப்பிடித்துவரும் இஸ்லாமியப் பழமைவாதக் கொள்கைகள்தான் இதற்குக் காரணம் என்று ஆர்வலர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு துருக்கியப் பிரதமர் ரெஜெப் தயிர் எர்தோவான் ஆற்றிய ஒரு உரையில், பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் கண்டித்துள்ளார்.
இதற்கிடையே ஆசியாவைப் பொறுத்தவரை மேற்காசிய நாடுகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் பெண்ணுரிமை என்பது மிகவும் பிந்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், அங்கு இந்த விடயங்களில் சில சலனங்கள் ஏற்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணிய எழுத்தாளரான வ. கீதா கூறுகிறார்.
இந்தியாவில் நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அங்கு இன்னமும் எவ்வளவோ முன்னேற வேண்டியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
0 comments:
Post a Comment