>> Tuesday, February 8, 2011


இலங்கை வெள்ள நெருக்கடி- ஐநா அறிக்கை


அவசர நிதியின் அளவை ஐநா மீளாய்வு செய்கிறது
இலங்கையின் பல மாகாணங்களில் அடுத்தடுத்து இரண்டாவது தடவையாகவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுக்கு அவசர உதவியாக தேவைப்படுகின்ற நிதியாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த தொகையை மீண்டும் மதிப்பீடு செய்து இம்மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஐநா அறிவித்துள்ளது.
51 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவி நிதித்தேவையாக கடந்த மாதம் ஏற்பட்ட முதற்கட்ட வெள்ளப் பாதிப்பின்போது ஐநா அறிவித்திருந்தது.

15 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து 744 தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தங்குமிடம் உணவு, குடிநீர் உள்ளிட்ட உடனடி உதவிகளை செய்வதற்கு இந்த அவசர நிதி தேவைப்படுவதாக ஐநாவின் கொழும்பு தலைமையகம் விடு்த்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விவசாய, கால்நடை வாழ்வாதாரங்கள் நாசம்

இதேவேளை, வெள்ளப் பெருக்கு மக்களின் நாளாந்த செயற்பாடுகளை மட்டுமன்றி அவர்களின் வாழ்வாதாரங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.


இலங்கை வெள்ள நெருக்கடி
விவசாயத்தை நம்பி வாழ்கின்ற பல ஆயிரக்கணக்கான குடும்பங்களும் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏனைய மக்களும் பெரும் துயரங்களை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் கால்நடை பண்ணைத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளவர்களும் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

தமது பயிர்ச் செய்கைகள் வெள்ளத்தில் அழிந்துவிட்ட நிலையில் அரசாங்கம் தமக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் வவுணதீவு பிரதேசத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பயிர்ச்செய்கை மழையில் அழிந்துவிட்டதாக மட்டக்களப்பு வவுணதீவு கமநல அமைப்புக்கள் ஒன்றியத்தின் தலைவர் காத்தமுத்து பிறைசூடி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதேவேளை, பயிர்களுக்கு காப்பீடு செய்யாதவர்கள் தமது சேதங்களுக்கு பெருமளவு இழப்பீட்டை அரசாங்கத்திடம் இடர்முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர பிபிசியி்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பல வாரங்களாக நாட்டில் நீடிக்கின்ற குளிர் காலநிலை காரணமாகவும் வெள்ளப் பெருக்கினால் பரவிவருகின்ற சில நோய்த் தாக்கங்களாலும் பெருமளவிலான கால்நடைகள் அழிவடைகின்ற நிலையில் தமது பால் பண்ணைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பால் உற்பத்தியை நம்பியிருக்கின்ற குடும்பங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

'அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'

2015 இல் நாடு பாலில் தன்னிறைவடைய வேண்டுமென அரசாங்கம் கூறிவருகின்ற நிலையில், அதனை அடைவதற்கான அடிப்படை உதவிகள் எதுவும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வில்லையென இலங்கை பாற் பண்ணையாளர்களின் தேசிய இயக்கத்தின் தலைவர் லொக்கு பண்டா ஜயசுந்தர கூறுகின்றார்.


இலங்கை வெள்ள நெருக்கடி
நாட்டில் ஏற்கனவே தேங்காய் விலையேற்றத்தின் பாதிப்பால் புண்ணாக்கு உள்ளிட்ட மாட்டுத் தீவனங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தாம் தற்போது வெள்ளத்தின் பாதிப்பையும் எதிர்கொண்டுள்ளதாக
லொக்கு பண்டா ஜயசுந்தர சுட்டிக்காட்டுகின்றார்.

தற்போதைய காலநிலை காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் நாட்டில் பாலுற்பத்தி 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டுமென கோரி கால்நடை வளர்ப்புத்துறை அமைச்சருக்கு தமது அமைப்பு கடந்த மாதம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அதுதொடர்பில் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லையெனவும் ஜயசுந்தர கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter