>> Monday, February 7, 2011
கிழக்கில் தொடரும் பாதிப்பு
மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக வாவிகளிலும் ஆறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு முதலைகள் மற்றும் பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள மக்கள் வீடுகளைப் பார்வையிட சென்றிருந்த போது முதலைகளின் நடமாட்டத்தை அங்கு காண முடிவதாக கூறுகின்றார்கள்.
வாவி மற்றும் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தங்கள் கால்நடைகளும், வளர்ப்பு பிராணிகளும் முதலைகளினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பழுகாமம் நலன்புரி முகாமொன்றில் தங்கியிருப்பவர்கள் கூறுகின்றார்கள்.
நேற்று சனிக்கிழமை இரவு கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலுள்ள அம்பிலாந்துறையில் விவசாயியொருவர் முதலைக் கடிக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
தனது வீடு வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள நிலையில் வீட்டிற்கு வெளியேயுள்ள மலசல கூடத்திற்கு சென்று சுத்தம் செய்வதற்காக பாத்திரமொன்றில் வெள்ள நீரை அள்ளிய போது முதலையொன்று தனது கையைக் கவ்வியதாக சம்பவம் தொடர்பாக 45 வயதான விவசாயி நாகப்பன் பரமானந்தம் கூறுகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ள நிலையில் ஒரு சிறுவன் பாம்புக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ள அதே வேளை மேலும் இரண்டு சிறுவர்கள் காணமடைந்துள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்தில் வெள்ள நீர் வடிந்து ஓடுவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் தொடரும் சீரற்ற கால நிலை காரணமாக மக்கள் அச்சம், வாழ்வாதாரங்களில் உறுதியற்ற தன்மை போன்ற காரணங்களினால் வீடுகளுக்கு திரும்ப தயங்குகின்றனர்.
குற்றச்சாட்டு
இதற்கிடையே, இலங்கையில் விவசாயத்திலும் மீன்பிடி தொழிலிலும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டுகின்றது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி சுற்றுநிரூபங்களை அனுப்பியுள்ள போதிலும், கடந்த கால அழிவுகளின் போது ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்கு தயங்குவதாக அந்தக்கட்சியின் பிரசாரச் செயலாளர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் இவ்வாறான அழிவுகளின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, பொது நிகழ்வுகளிலும் பெரிய அமைச்சரவையை அமைத்து வரிச்சலுகையுடன் கூடிய வாகனங்களை இறக்குமதிசெய்து அமைச்சர்களின் நலன்களிலும் அதிகளவு வீண் செலவினங்களைச் செய்வதாகவும் விஜித்த ஹேரத் கூறினார்.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் குற்றச்சாட்டை இலங்கையின் இடர்முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர மறுத்துள்ளார்.
அரச அதிகாரிகளுக்கு நிவாரணங்களில் பணச்சிக்கல் வராதவாறு மாவட்டச் செயலாளர்கள் ஊடாக போதுமான நிதியை தாம் அனுப்பிக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர பிபிசிக்குத் தெரிவித்தார்,
0 comments:
Post a Comment