Monday, July 5, 2010


இலங்கைப் பொலிசார்

மட்டக்குளி சம்பவம்- விசாரணையில்



இலங்கையின் தலைநகர் கொழும்பில் மட்டக்குளி பகுதியில் சமிட் புர என்ற இடத்தில் பிரதேசவாசிகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் உடனடி நடவடிக்கையாக மட்டக்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு பொலிசாருக்கும் பிரதேசத்திலுள்ள குழுவொன்றுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பொலிசார் பலரை கைது செய்து தடுத்துவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர் ஒருவரை கைது செய்து தடுத்துவைத்திருந்த பொலிசார், அந்த நபரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட குழுவொன்று அங்கு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

ஆனால் இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புபடாத இளைஞர்கள் பலரையும் பொலிசார் கைது செய்து சென்றுள்ளதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

தமது குடியிருப்பு மற்றும் உடமைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள பொலிசார் பொதுமக்களின் சொத்துக்களை சேதப்படுத்த வேண்டிய எவ்வித காரணமும் தமக்கு இல்லையெனக்கூறியுள்ளனர்.

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் பிரதேசத்தில் பதற்ற நிலையை கட்டுப்படுத்த பொலிஸ் அணிகள் பலவற்றை தாம் அனுப்பி வைத்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

பின்னூட்டமிட்டு செல்க