>> Wednesday, July 10, 2013

சூரியமின்சாரம் தயாரிக்கும் ஹெட்போன்கள்

செல்பேசிகள் மற்றும் எம்பி3 பிளேயர்களிலிருந்து ஒலிகேட்க பயன்படும் ஹெட்போனை பயன்படுத்தி சூரிய எரிசக்தியிலிருந்து மின்சாரம் தயாரித்து, அதைக்கொண்டு செல்பேசிகள் உள்ளிட்ட சிறு மின்னணு உபகரணங்களின் மின்சாரத் தேவையை நிறைவு செய்யமுடியும் என்று கிளாஸ்கோவில் இருக்கும் வடிவமைப்பாளர் ஆண்ட்ரூ ஆண்டர்சன் தெரிவித்திருக்கிறார்.
தமது இந்த புதிய கண்டுபிடிப்பு 2014 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.
ஹெட்போனின் இரண்டு பக்கங்களிலும் மேற்பரப்பிலும் பொறுத்தப்பட்டிருக்கும் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் மின்கலங்கள் தயாரிக்கும் மின்சாரம் ஹெட்போன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் லித்தியம் பேட்டரிகளில் முதலில் சேமிக்கப்படும். பின்னர் அதிலிருந்து ஹெட்போனின் வயர் மூலம் செல்லிட பேசி அல்லது எம்பி3 பிளேயருக்கு இந்த மின்சாரம் பாய்ச்சப்படும். அதாவது இந்த ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு நீங்கள்பாட்டுக்கு பாட்டு கேட்டுக்கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு தொந்தரவும் இல்லாமல் அதுபாட்டுக்கு உங்களின் செல்லிடபேசியோ எம்பி3 பிளேயரோ தானாக சார்ஜ் செய்துகொள்ளும் என்கிறார் ஆட்ரூ ஆண்டர்சன்.
தமது இந்த புதிய கண்டுபிடிப்பை வியாபார ரீதியில் தயாரித்து விற்பனைக்கு விட தமக்கு சுமார் இரண்டாயிரம் பிரிட்டிஷ் பவுண்ட்கள் தேவைப்படும் என்று கூறியிருக்கும் ஆண்டர்சன், இந்த முதலீடு கிடைத்ததும் இந்த ஹெட்போன்களை தயாரிக்கும் பணிகளை தாம் துவக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே அமெரிக்காவில் இருக்கும் சிலர் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் உபகரணத்தை கண்டுபிடித்து விற்பனைக்கு விட்டிருக்கிறார்கள். அதாவது இந்த சின்னஞ்சிறு உபகரணத்தை மனிதர்களின் காலனிக்குள் வைத்துக்கொண்டு நடக்கும்போது அதனால் ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாராகிறது.
இந்த சிறப்புக்காலணிகளை போட்டுக்கொண்டு ஒருவர் சராசரியாக இரண்டரை கிலோமீட்டர் முதல் ஐந்து கிலோ மீட்டர் நடந்தால் ஐபோனை சார்ஜ் செய்யமுடியும் என்று இதை வடிவமைத்திருப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
உலக அளவில் மாற்று மின்சாரத்தின் தேவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில் இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கான மதிப்பும் கூடி வருகிறது.

Read more...

கடற்கொள்ளையர்கள் பிடித்த கப்பல் மூழ்கியது-இலங்கையர்கள் கதி?

சோமாலியக் கடற்கொள்ளையர்களால் பிடிபட்டு பின்னர் மூழ்கிய கப்பல்
சோமாலியக் கடற்கொள்ளையர்களால், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் முன்னர் கைப்பற்றப்பட்ட மலேசியப் பதிவு பெற்ற சரக்குக் கப்பல் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் கடலில் மூழ்கியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
இந்தக் கப்பலின் மாலுமிகள் மற்றும் பணியாளர்களில் சில இலங்கையர்களும் இருந்தனர்.
இவர்களில் பலர் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. ஆனால் இது குறித்து அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தமுடியவில்லை.
இவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்கள் இவர்களை விடுவிக்க பணயத்தொகைக் கேட்டு பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கப்பல் மூழ்கியபோது அதில் இருந்தவர்களில், அந்தக் கப்பலில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த மொஹமது பிஸ்தாமி, என்ற கப்பல் பொறியாளரும் ஒருவர் .
அவரது நிலை குறித்து , தற்போது மாலத்தீவில் வசிக்கும் ,அவரது மகளான பர்ஹானா.
பிஸ்தாமி, தமிழோசையிடம் பேசியபோது, தனது தந்தை ஜுன் மாத இறுதியில் தன்னிடம் பேசியதாகவும், அப்போது கப்பல் மூழ்குவதாக அவர் தன்னிடம் சொல்லவில்லை என்றும் கூறினார்.
ஆனால் இந்த செய்தி கிடைத்த பின்னர், ஐரோப்பிய கடற்படையினருடன் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்கள் தாங்கள் இதுவரை இந்தக் கடற்பகுதியில் தேடியபோது, எந்த உடலும் கிடைக்கவில்லை என்று கூறியதாகத் தெரிவித்தார்.
ஆனாலும், தொடர்ந்து இந்த கப்பலைக் கைப்பற்றிய கடற்கொள்ளையர்களுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும், இது குறித்த தகவல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் கூறினார்.
ஆனால் இலங்கை அரசு கப்பலில் பணயக்கைதிகளாகப் பிடிபட்ட இலங்கைப் பிரஜைகளை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றார் பர்ஹானா.

Read more...

இளவரசன் உடல் மீது மறு பிரேதப் பரிசோதனை: உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

மறுபரிசோதனை : நாளை தீர்ப்பு
தர்மபுரி இளைஞன் இளவரசனின் மரணத்தில் மர்மங்கள் இருக்கின்றன எனவே இரண்டாவது பிரேதப் பரிசோதனை வேண்டுமெனக் கோரி இளவரசனின் நண்பர் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பினை நாளை புதன் சென்னை உயர்நீதிமன்றம் வழங்க இருக்கிறது.
அது குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியானது.
முன்னதாக நீதிபதிகள் தனபாலன் மற்றும் செல்வம் ஆகியோர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் வீடியோ பதிவினை பார்த்தனர். அப்போது மாநில, மத்திய அரசுகள், மற்றும் மனுதாரர் தெரிவு செய்த மருத்துவர்களும் உடனிருந்தனர்.
சில மருத்துவர்கள் மீண்டுமொரு பரிசோதனைக்குப் பரிந்துரை செய்திருப்பதாகத் தெரிகிறது.
இதனிடையே இளவரசனின் மரணம் குறித்த புலன்விசாரணை புகழ்பெற்ற தடவியல் ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலே நடக்கவேண்டும் எனக்கோரி மனுச் செய்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இளவரசனின் பெற்றோர்கள் விரும்பும் வண்ணம் மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்கவேண்டுமெனவும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter