>> Monday, August 1, 2011


எடியூரப்பா ராஜினாமா


எடியூரப்பா
எடியூரப்பா

கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை எடியூரப்பா கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.

ஆளுநர் மாளிகைக்கு தன்னுடைய ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் சென்று எடியூரப்பா ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

சட்டத்திற்கு புறம்பான சுரங்கத்தொழிலில் எடியூரப்பாவுக்கு தொடர்பு இருப்பதாக லோகயுக்தாவில் குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து, பதவியை விட்டு விலகுமாறு எடியூரப்பாவுக்கு பாரதிய ஜனதா மேலிடம் அறிவுறுத்தியது.

ஆனால் அது தொடர்பில் மேலிடத்துடன் முறுகல் நிலையில் இருந்த நிலையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ள எடியூரப்பா தன் மீது குற்றமில்லை என தெரிவித்துள்ளார்.

அத்தோடு சதானந்த கவுடாவை முதலமைச்சராக்கவும் அவர் வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

>> Friday, July 29, 2011




'போர்க் குற்றம்'- மீண்டும் சானல் 4 செய்தி


இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது, நிகழ்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்குற்றங்கள் பற்றி பிரிட்டனிலுள்ள சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம் புதிய விவரணச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் கொன்று விடுமாறு, அங்கு இறுதிக்கட்ட படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 58ம் பிரிவு படையணியின் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாக இலங்கை இராணுவ வீரர்கள் என்று கூறப்படும் இருவரை மேற்கோள் காட்டி சானல் 4 செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய மற்றும் ஷவேந்திர மீது குற்றச்சாட்டு


மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா
‘எந்தவழியிலாவது அவர்களைக் கொன்று முடித்து விடுங்கள்’ என்ற அனுமதியை படைத்தளபதி ஷவேந்திர சி்ல்வாவுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியிருந்ததாக, இறுதிக்கட்டப் போரின்போது, 58ம் பிரிவு படையணியில் கடமையில் இருந்ததாக கூறும், ஃபெர்ணான்டோ என்று மட்டும் தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட ஒருவர் சானல் 4வுக்கு தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, ஷவேந்திர சில்வாக்கு வழங்கிய உத்தரவையே படைவீரர்கள் கொலைகளைப் புரிவதற்கான அனுமதியாக எடுத்துக் கொண்டு செயற்பட்டதாக பெர்ணான்டோவை மேற்கோள்காட்டி சானல் 4 கூறுகிறது.

பாதுகாப்புக் கருதி குறித்த இராணுவ சிப்பாயின் உருவ அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறும் சானல் 4 ஆங்கில மொழி பெயர்ப்புடன் அவரது கருத்தை வெளியிட்டுள்ளது.

வௌ்ளைக் கொடிச் சம்பவம்


நிராயுத பாணிகள் சுட்டு்க் கொல்லப்படும் காட்சி- சானல் 4
விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட இறுதிநாட்களில், இலங்கைப் படையினர் நிராயுதபாணிகளாக இருந்த பெண்களையும், சிறுவர்களையும், முதியவர்களையும் கோரமாக சுட்டுக் கொன்றதாகவும், பலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாகவும், நாக்குகள் அறுக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டதை தான் கண்டதாகவும் ஃபெர்ணாண்டோ சானல் 4 செய்தியில் கூறுகிறார்.

இதற்கிடையே, ஐநாவுக்கான இலங்கையின் பிரதிதூதுவராக தற்போதுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை அவரது அமெரிக்காவில் அவரது தூதரகத்துக்கு வெளியே சானல் 4 செய்தியாளர் சந்துத்துள்ளார்.

இலங்கைப் படையினர், கொலைகள் மற்றும் பாலியல் கொடூரங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

பாதுகாப்புச் செயலர் உத்தரவு வழங்கியதாக கூறும் அந்த இராணுவ அதிகாரியின் விபரத்தைக் கூறுமாறும், சானல் 4வே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறிவிட்டார்.

இலங்கை அரசின் உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவாதத்தை அடுத்து, சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாக கூறப்படும், ‘வெள்ளைக் கொடி’ சம்பவத்துடன் தொடர்பு பட்டதாகவே ஃபெர்ணான்டோவின் சாட்சியம் அமைந்துள்ளதாக சானல் 4 கூறியுள்ளது.

இதற்கிடையே, சானல் 4 வில் வெளியாகியுள்ள இந்த செய்தியில் உண்மையில்லையென்று என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தமிழோசையிடம் மறுத்தார்.

Read more...

>> Thursday, July 28, 2011



திரைப்பட வரி விலக்கு- புதிய நிபந்தனைகள்


அதிமுக அரசின் புதிய நிபந்தனைகள் அறிமுகம்
தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தாலே கேளிக்கை வரியிலிருந்து விலக்கு என்று கடந்த திமுக ஆட்சியின் போது இடப்பட்ட ஆணையில் இன்றைய அ இஅதிமுக அரசு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.
அதன்படி வன்முறை, ஆபாசம் அதிகளவில் இடம்பெற்றிருந்தால் அத்திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படாது.

வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பார்க்கலாம் என்பதை சுட்டும் விதமாக அளிக்கப்படும் ‘U’ சான்றிதழ் பெறும் திரைப்படங்களே வரிவிலக்கு பெற தகுதியுடையவை என வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் வெளியிட்ட உத்தரவு ஒன்று கூறுகிறது.

திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிடப்படுவதால் மட்டுமே அவை தமிழ் பண்பாட்டுக்கு உகந்ததாகவும் கண்ணியமானதாகவும் உள்ளன என உறுதி செய்ய இயலவில்லை.

சில நேரங்களில், தரமில்லாத திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்படுவதைக் காரணம் காட்டி கேளிக்கை வரியிலிருந்து விலக்கு பெற்று விடுகின்றன.
எனவே, கூடுதல் தகுதி வரையறைகளாக தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக திரைப்படக் கதையின் கரு இருக்க வேண்டும்.

நிலுவையிலுள்ள விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்


'U' சான்றிதழ் பெறும் படங்களுக்கே வரிவிலக்கு
திரைப்படத்தின் தேவையைத் கருதி பிற மொழிகளைப் பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்றும், கேளிக்கை வரிவிலக்கு கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும் என்றும், வரிவிலக்குக்குப் பரிந்துரை செய்ய ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்படும் என்றும் பாலிவால் வெளியுட்டுள்ள உத்தரவு தெரிவிக்கிறது.

திரைப்படப் பெயர்களில் ஆங்கிலத்திலேயே வைக்கிறார்கள், இப்போக்கு நிறுத்தப்படவேண்டும், தமிழ் பெயர்கள் சூட்டும் பழக்கம் மீண்டும் நடைமுறைக்கு வரவேண்டும் என்று கூறி திமுக ஆட்சியில் அவ்வாறு தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு என்று அறிவிக்கப்பட்டது.

அவ்வாறு ரத்து செய்வதால் 50 கோடி ரூபாய் ஆண்டிற்கு இழப்பேற்படும், ஆனால் தமிழ்ப் பற்று பெருக, தமிழ் வளர்ச்சியடைய அவ்விழப்பை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.

ஆனாலும் திமுக அரசின் அறிவிப்பு அப்போதே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது என்பதை இங்கே நினைவு கூறலாம்.

புதிய ஆணையில் குறிப்பிடப்பட்டதைப் போலல்லாமல் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு கேளிக்கை வரிக்காக மனுச் செய்திருக்கும் படங்களை புதிய ஆணைப்படி மதிப்பிடக்கூடாது என ஒரு சிலர் கோருகின்றனர்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter