>> Thursday, July 28, 2011


திமுக பாமக உறவு முறிந்தது


திமுக-பாமக: உறவும் பிரிவும்
தமிழகத்தில் தி.மு.க உடனான தனது உறவை பா.மா.க முறித்துக் கொண்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி மு க கூட்டணியிலிருந்து விலகி அ இ அ தி மு க கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அந்தக் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அண்மையில் இடம் பெற்ற சட்டமன்ற தேர்தல்களின் போது மீண்டும் தி மு க கூட்டணியில் இணைந்து கொண்டது.

பாட்டாளி மக்கள் கட்சி இனி வருங்காலங்களில் எக்கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், தன் தலைமையிலேயே மாற்றணி ஒன்று அமைத்து அனைத்து தேர்தல்களையும் சந்திப்பதென்று முடிவு செய்திருக்கிறது.

தமிழகத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தனி அணியே அமைக்கப் போவதாகவும், பா.ம.கவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளும் இயக்கங்களும் அவ்வணியில் இணையவேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்று சென்னையில் கூடிய அக்கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு துறைகளில் தமிழகம் பின் தங்கிவிட்டதாகவும், மதுவினால் இளைஞர்கள் சீரழிவதாகவும், ஊடகங்கள் மனிதர்களை சிந்திக்கவிடாமல் செய்வதாகவும், தமிழர்களின் உரிமை பறிபோவதாகவும், ஈழத்தமிழர்களைக் காப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென்றும், இந்நிலையில் பா.ம.கவின் கொள்கைகளுக்காகப் பாடுபட தனித்து நின்றே போராடவிருப்பதாகவும் அத்தீர்மானம் மேலும் கூறுகிறது.

முன்னதாக பொதுக்குழுவில் பேசிய மூத்த தலைவர்கள் அனைவரும் திமுக, அ.இ.அ.தி.மு.க இரண்டையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடத்தால் வீழ்ந்தோம், எனவே தான் தனித்து தமிழர் நலன் காக்கப் புறப்படும் முடிவு என்றார்.

இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அ இ அ தி மு க கூட்டணியில் இடம்பெற்ற பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியுற்றது.

அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 30 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி 3 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில் தனி அணி அமைக்கப் போவதாக தீர்மானம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

>> Tuesday, July 26, 2011


நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்


நடிகர் ரவிச்சந்திரன்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த ரவிச்சந்திரன் 25.7.11 அன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.
காலஞ்சென்ற இயக்குநர் ஸ்ரீதர் அவர்களால் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் ரவிச்சந்திரன். பின்னர் தொடர்ச்சியாக பல படங்களில் அவர் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார்.

அவர் நடித்த வெற்றிப் படங்களில், அதே கண்கள், நான், மூன்றெழுத்து, குமரிப்பெண் உள்ளிட்ட பல படங்கள் குறிப்பிடத்தக்கவை.

பிரபல மலையாள திரைப்பட நடிகையான ஷீலாவை அவர் மணந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர்.

எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்த நேரத்திலும், 1960 ஆம் ஆண்டுகளின் பின்பகுதியில் ஜெய்ஷங்கர் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தமக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டு நடித்து வந்தனர்.

திருச்சியில் பிறந்த ரவிச்சந்திரன், தனது ஆரம்ப படிப்புக்காக மலேஷியா சென்றார். பின்னர் இந்தியா திரும்பி திருச்சி புனித ஜோசஃப் கல்லூரியில் பயின்றார்.

150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், பெரும்பாலும் கதாநாயகனாகவே நடித்தார். மேலும் நகைச்சுவை பாத்திரங்களிலும் அவர் பரிமளித்தார்.

சிறந்த நடிகராக விளங்கிய ரவிச்சந்திரன், திரைப்படங்களை இயக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதில் அவர் பெரிய அளவில் அவர் வெற்றி பெறவில்லை.

Read more...


'இலங்கை தோற்று விட்டது'- சந்திரிகா


சந்திரிகா குமாரதுங்க
போரில் வெற்றியடைந்த பின்னர், இலங்கை அரசாங்கம் இனங்கிளுக்கிடையிலான சமாதானத்தை வென்றெடுப்பதில் தோல்வியடைந்து விட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக, சிறுபான்மை இன மக்கள் நாட்டை விட்டு வெளியேறிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் நீதியரசர் அனந்த் பாலகிட்ணர் ஞாபகார்த்த நிகழ்வில் ஆற்றிய நினைவுப் பேருரையிலேயே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் எவ்வித அக்கறையும் இன்றி இருப்பதாகவும் சந்திரிகா கூறியிருக்கிறார்.

சானல் 4 வீடியோ


சந்திரிகா மற்றும் மகிந்த -2005 இல்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றி சானல் 4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்ட விவரணப் படத்தில் தெரியவந்த கொடூரங்களைப் பார்த்த பின்னர், தொலைபேசியில் பேசிய அவரது வெளிநாட்டிலுள்ள இரண்டு பிள்ளைகளில் ஒருவர் தேம்பி அழுததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது உரையில் கூறியுள்ளார்.

அவரது மகன், தன்னை சிங்களவர் என்றோ இலங்கையர் என்றோ சொல்லிக் கொள்வதில் வெட்கமடைவதாக கூறியதாகவும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.

சானல் 4 விவரணப்படத்தை போலியானது என்று இலங்கை அரசாங்கம் நிராகரித்துவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இரண்டு தவணைகள் ஜனாதிபதியாக இருந்துள்ள சந்திரிகா, தாம் தேசம் என்ற ரீதியில் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இலங்கையர்கள் வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது தந்தை, பிரதமர் பண்டாரநாயக்க தனிச்சிங்கள சட்டத்தைக் கொண்டுவந்த நடவடிக்கையையும் சந்திரிக்கா கடுமையாக விமர்சித்தார்.

அதுவே இனக்கலவரங்களை உருவாகவும் சிறுபான்மை சமூகங்கள் வெளியேறவும் போருக்கும் காரணமாகியது எனவும் சந்திரிகா சுட்டிக்காட்டினார்.

நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் அமோக வெற்றியீட்டி, ஜனாதிபதி மகிந்தவின் ஆளும் கட்சி நாட்டின் மற்ற பாகங்களில் வெற்றியீட்டியுள்ளமை இலங்கையின் இனங்களுக்கிடையிலான
வேறுபாட்டை தெளிவாகப் புலப்படுத்தியுள்ள நிலையிலேயே முன்னாள் சந்திரிகாவின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter