>> Monday, May 3, 2010


சஜீத் பிரேமதாஸ


''கட்சிக்குள் ஜனநாயகம் தேவை''



ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகக் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டுமென்பதை 2004 ஆம் ஆண்டில் இருந்தே வலியுறுத்திவருவதாக அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாஸ தமிழோசையிடம் தெரிவித்தார்.

சஜீத் பிரேமதாஸ கருத்துக்கள்

கட்சி பொறுப்புகளுக்கு நபர்களை தெரிவுசெய்யும் நடைமுறையில் ஜனநாயக வரைமுறையும் தீர்மானங்கள் எடுக்கும் வழிமுறைகளில் வெளிப்படைத் தன்மையும் அவசியப்படுவதாக அவர் கூறுகிறார்.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் தான் மோதல் போக்கை கடைப்பிடிக்கவில்லை எனவும் கட்சியின் நலனுக்காகவே கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் சஜீத் கூறினார்.

ஆனால் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் யாராக இருக்கவேண்டுமென்பதை தன்னால் மட்டும் தீர்மானிக்க முடியாது எனவும் அந்த தீர்மானத்தில் கட்சியின் அனைத்து மட்டங்களிலுள்ளவர்களும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.

''சீர்திருத்தங்கள் பரிசீலிக்கப்படும்''


ரணில் விக்ரமசிங்க
ஐக்கிய தேசியக் கட்சியின் சீர்திருத்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு கட்சித் தலைமை தயாராகவே உள்ளதாக அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாளருமான டி.எம். சுவாமிநாதன் கூறுகிறார்.


சுவாமிநாதன் பேட்டி

கட்சி மறுசீரமைப்புகளுக்கான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க தலைமைத்துவம் தயாராகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்சித் தலைவர் தீர்மானங்களை எடுக்கும் நடைமுறைகளில் தன்னிச்சையாகவே செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு நியாயமற்றது எனவும் சுவாமிநாதன் கூறினார்.

பத்திரிகைகளில் வெளிவரும் கருத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சியிலுள்ள குறைபாடுகள் பற்றி ஆராய்வது அர்த்தமற்றது எனவும் அவர் கருத்து வௌயிடுகின்றார்.

கட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமானால் அவற்றுக்கான கோரிக்கைகள் கட்சியின் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரினால் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியும் எனவும் சுவாமிநாதன் தெரிவித்தார்.

Read more...


வாழ்வாதாரத்துக்கு சிரமப்படும் பெண்களில் இவரும் ஒருவர்

இலங்கையின் கிழக்கில் 50,000 விதவைகள்



இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 50,000 விதவைகள் இருப்பதாக இலங்கை அரசின் மகளிர் மற்றும் சிறார்கள் நலத்துறையின் துணை அமைச்சரான ஹிஸ்புல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா பேட்டி

அந்த எண்ணிக்கையிலும் நாற்பது சதவீதமானவர்கள் நாட்டில் இடம் பெற்ற உள்நாட்டு போரின் காரணமாக கணவனை இழந்தவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.

இப்படியான பெண்கள் மிகவும் பலவீனமான நிலையிலும், அடிப்படை வாழ்வாதாரங்களை எதிர்நோகியுள்ள நிலையிலும் அவர்களுக்கான உதவிகள் உடனடியாக தேவை என்கிற கருத்துக்கள் இலங்கையில் வெளியாகி வருகின்றன.

அண்மையில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த மகளிர் குழுவொன்று கிழக்கு மாகாணத்தில் சுற்று பயணத்தை மேற்கொண்டு அங்குள்ள விதவைகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் ஹிஸ்புல்லா கூறுகிறார்.

இந்தியா திரும்பிய அந்தக் குழுவினர் இலங்கையிலுள்ள இப்படியான பெண்மணிகளுக்கு உதவி வழங்குவது தொடர்பில் சில கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர்.

உடனடி உதவியாக ஆயிரம் பேருக்கு சுயதொழில் கல்வி மற்றும் உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாகவும், இதை கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் உறுதி செய்துள்ளதாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தியா போலவே இலங்கையிலுள்ள விதவைகளின் வாழ்க்கையினை மேம்படுத்த பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

மட்டக்களப்பில் கூடுதல் எண்ணிக்கையினர்


குடும்பத் தலைவனை இழந்த ஒரு குடும்பம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற விதவைகளிலே 25,000 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருப்பதாகவும் அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன எனவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிக்கிறார்.

இவர்களில் 12,000 பேர் அளவிலானவர்கள் மூன்று பிள்ளைகளுக்கு தாயான நிலையில் இருக்கிறார்கள் என்றும் அரசின் கணக்கெடுப்புகள் கூறுகின்றன எனவும் இலங்கை அரசின் மகளிர் மற்றும் சிறார்கள் நலத்துறையின் துணை அமைச்சர் கூறுகிறார்.

கிழக்கு மாகாண சபைக்கு மத்திய அரசிடமிருந்து போதிய நிதியுதவிகள் கிடைக்கப் பெறாத காரணத்தாலேயே, கிழக்கு பகுதியில் போர் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியும் விதவைகள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை முன்னர் பெரிய அளவில் முன்னெடுக்க முடியவில்லை என்றும் ஹிஸ்புல்லா கூறுகிறார்.


கிழக்கு மாகாணத்தில் இருக்கும் விதவைகளில் 40 சதவீதமானவர்கள் நாற்பது வயதுக்கும் குறைந்தவர்கள் என்பது கவலையளிக்கக் கூடிய விடயம்


அமைச்சர் ஹிஸ்புல்லா

கிழக்கு மாகாண சபையில் அண்மைக் காலம் வரை மகளிர் மற்றும் சிறார்கள் நலத்துறையின் அமைச்சராக ஹிஸ்புல்லா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தைப் போலவே வடக்கு மற்றும் இதர மாகாணங்களிலும் போரினால் விதவையானவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

தற்போது அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஒரு ஆரம்பக்கட்டமே எனவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றார்.

Read more...


தமிழக முதல்வர் மு கருணாநிதி

ராசா பதவி விலக மாட்டார்

ஸ்பெக்ட்ரம் எனப்படும் தொலைத் தொடர்புத்துறை அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் திமுகவைச் சேர்ந்த மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா பதவி விலக மாட்டார் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. கருணாநிதி சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி வந்த முதல்வர் கருணாநிதி, குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீலை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்

இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் முறைகேடுகள் நடந்ததாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா மீது குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அதுபற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விவாதிப்பீர்களா, அமைச்சர் பதவி விலக வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டபோது, "நீங்கள் மகிழ்ச்சியடையத்தக்க செய்தியை நான் கொண்டுவரவில்லை", என்று நகைச்சுவையாகப் பதில் கூறி, அதே நேரத்தில் ராசா பதவி விலக வாய்ப்பில்லை என்பதை மறைமுகமாகத் தெளிவுபடுத்தவிட்டார் முதல்வர்.

இதனிடையே,மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினை மாநிலங்களுக்கிடையிலானது என்று விட்டுவிடாமல், அதைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கருணாநிதி புதுடில்லியில் வலியுறுத்தியுள்ளார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter