>> Wednesday, May 16, 2012

ஆ ராசா சிறையிலிருந்து விடுதலையானார் 2ஜி எனப்படும், இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா ஜாமீனில் விடுதலையாகியிருக்கிறார்.. ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, 20 லட்சம் ரூபாய் உத்தரவாதத் தொகையாக ராசா செலுத்த வேண்டும் என்றும், அதே அளவு தொகைக்கு மேலும் இருவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதன் மூலம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் கடைசியாக ஜாமீன் பெறும் நபர் ராசா என்பது குறிப்பிடத்தக்கது. காலையில் நீதிமன்ற உத்தரவு கிடைத்த்தும், அதுதொடர்பான நடைமுறைகள் நிறைவேற்றப்பட்டு, மாலை 7 மணியளவில் அவர் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கைது செய்யப்பட்ட ராசாவுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. அவர், நீதிமன்ற அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டுக்குச் செல்லக் கூடாது. அதேபோல், தொலைத் தொடர்புத்துறை அலுவலகத்துக்கு செல்லக் கூடாது. சாட்சிகளைக் கலைப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது. அவர் தனது பாஸ்போர்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டுள்ள காலம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவரை தொடர்ந்து காவலில் வைத்திருப்பதும் எந்தப் பலனும் விளையப் போவதில்லை என்று கருதி அவருக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதி சைனி தனது உத்தரவில் தெரிவித்தார். ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் சாட்சகளைக் கலைத்துவிடுவார் என்ற சிபிஐ வாதத்தை நீதிபதி நிராகரித்துவிட்டார். ராசாவுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்த விடயங்களை நீதிமன்றம் கவனத்தில் கொண்டிருப்பாக நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், ஏறத்தாழ எல்லா சாட்சிகள் மற்றும் ஆவணங்களும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளன என்றும் நீதிபது தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார். ராசாவுக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதி அறிவித்தவுடன், நீதிமன்றத்தில் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள், ஆரவாரமாகக் கூச்சலிட்டார்கள். திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ராசாவை வாழ்த்தி நீதிமன்ற வளாகத்தில் கோஷமிட்டார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 13 பேருக்கு ஜாமீன் வழங்கப்படும் வரை காத்திருந்த ராசா, கடந்த வாரம்தான் தனது ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சித்தார்த பெஹூராவுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், அரசு ஊழியரையும் மற்றவர்களையும் தனித்தனியாக வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்பதை ராசா தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்கினால், விசாரணை பாதிக்கப்படும் என்றும், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது ராசா மீதான குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது என்றும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ராசாவும் இன்னும் சிலரும், தங்கள் கண்காணிப்பில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து 200 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருப்பது புதிய விசாரணையில்தான் தெரியவந்ததாகவும் அதுபற்றி மேலும் விசாரிக்க வேண்டியிருக்கிறது என்றும் சிபிஐ தெரிவித்தது. இதனிடையே, ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது வழக்கு விசாரணையை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார். அதே நேரத்தில், ராசாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter