>> Monday, December 12, 2011
தமிழகத்தில் கம்பம் பகுதியில் இன்னும் பதற்றம் ஓய்வதாக இல்லை. இரண்டாவது நாளாக இன்று ஞாயிற்றுக் கிழமையும் ஆயிரக்கணக்கான ம்க்கள் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள குமுளி நோக்கிச் சென்றனர்.
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குமுளிக்கு சென்றபோது அவரது காரை மறித்து கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.
தொடர்புடைய விடயங்கள்
ஜெயலலிதா
குமுளி வழியாக கேரளா சென்றுவரும் அனைத்து வாகனப் போக்குவரத்தும் ஒருவாரத்திற்கும் மேலாக தடைப்பட்டுப்போயிருக்கிறது.
பெருங்கூட்டமாகச் சென்று குமுளிக்குள் நுழைய கடந்த இரண்டு நாட்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
சனிக்கிழமை குமுளிக்குள் நுழைந்த சிலர், ஒரு வீட்டின் மீது கற்களை வீசியதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஜெயலலிதா கோரிக்கை
இதனிடையே தமிழக மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிலைநாட்டும் வகையில், எதிர்வரும் டிசம்பர் 15 அன்று சிறப்பு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் கூட்டப்படும். அக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று தவறாக பீதி பரப்பப்படுகிறது என்று சுட்டிக்காட்டியும், அணையில் தேக்கப்படும் நீரில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்று வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
பிரச்சனையை மேலும் சிக்கலாக்காமல் உடனே கலைந்து செல்லும்படி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கேட்டுக்கொண்ட அவர், மக்கள் நிதானமாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்.
மக்களின் உணர்வுகளைத் தான் பகிர்ந்துகொள்வதாகவும், அதே நேரம் கேரள மக்களுக்கும், நமக்கும் எந்தவித சச்சரவும் இல்லை. எனவே அவர்களின் உடமைகளுக்கு சேதம் உண்டாக்குவதும் அல்லது அவர்களை துன்புறுத்துவதும், அதன்மூலம் நமக்கு நாமே பாதிப்பு ஏற்படுத்துவதும் இப்பிரச்சனைக்குதீர்வு ஆகாது எனக்கூறினார்.
நாம் வன்முறையிலும், வெறுப்பிலும் நம்பிக்கையற்றவர்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்துவோம் என்று வலியுறுத்திய அவர், மாநிலத்தில் எவருக்கேனும் பாதிப்பு இருந்தால் தனது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமென்றும் உறுதியளித்திருக்கிறார்.
தேவையான முக்கிய தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான புள்ளிவிவரங்களை காட்டி, நம் பக்கம் உள்ள நியாயத்தை உச்சநீதிமன்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்வதன் மூலமே இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என தான் நம்புவதாகவும் ஜெயலலிதா மேலும் கூறுகிறார்.
மத்திய மற்றும் கேரள மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பாக நாளை திங்கட்கிழமை மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருக்கும் உண்ணா நோன்பு நிகழ்ச்சியினை திமுக தலைவர் மு கருணாநிதி மாலையில் முடித்துவைக்கிறார்.
0 comments:
Post a Comment